சாத்தான் வேதம் ஓதுகிறது

in அனாச்சாரங்கள்

தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களால் இறைமறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. நபி வழியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிஅத்தை (மார்க்கத்தில் புதிதாக ஒன்றை) சுன்னத் என்ற பெயரில் அறங்கேற்றி விட்டார்கள். ஹராம் ஹலாலாகவும் சபிக்கப்பட்டவை பரகத்களாகவும் பரகத் தரக்கூடியவைகள் லஃனத் (சபிக்கப்பட்டவை)களாகவும் முஸ்லிம்களால் மாற்றப்பட்டு விட்டன.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் இருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று ஆராயும்பொழுது திருமறை இதற்கான பதிலை தருகின்றது.

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரிகளிலும் (மார்க்க போதகர்) சந்நியாசிகளிலும் அனேகர் மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்” அல்குர்ஆன் 9:34

அன்று சீஸர், கிஸ்ரா போன்ற ரோம், பாரசீக பேரரசுகளிடம் “கராஜ்” வரி வசூழித்து வாழ்ந்தவர்கள் நபிதோழர்கள். இன்று நபிதோழர்களின் வாரிசுகளும், நபிமார்களின் வாரிசுகளும் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் பெரியார்களின் கபுரடியில் உண்டியலை வைத்து உல்லாசமாக வாழ்கிறார்கள்.

“நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது, உங்கள் உழைப்பின் மூலம் உண்பதேயாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர். ஆயிஷா (ரழி) திர்மிதீ, நஸயீ, அபூதாவூது.

ஹலான முறையில் உழைத்து உண்பது இன்று தர்ஹா வியாபாரிகளுக்கு ஹராமாக மாறிவிட்டது. உண்டியல் காணிக்கை மட்டும் இவர்களுக்கு ஹலாலாகி விட்டது.

இன்றைய தர்காக்களின் தலமைகளாகவும், தரீக்காகளின் பரம்பரைகளாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் மவ்லவிகள், ஆலிம்கள், லெப்பைகள், ஹஜ்ரத்கள். இவர்கள் அழகாக குர்ஆன் ஓதுவார்கள். நீண்ட ஜுப்பா, பச்சை தலைப்பாகையுடன் நடமாடும் வெளி வேடக்காரர்கள். குர்ஆனின் பொருளை திரித்து வழிகேட்டிற்கு மக்களை அழைப்பார்கள்
.
விசுவாசிகளே! தொழுகை முடிவு பெற்றால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்குர்ஆன் 63:10 என்று அனைத்து விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்றைய மார்க்க உலமாக்கள், அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறி, உடலுழைத்து ஹலாலை உண்ணுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களது கட்டளையை மீறி மார்க்க அறிஞர்களாக உலா வருகிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மாறாக அவனது கட்டளைக்கு மாறு செய்து ஹராமான வருவாயை உண்ணுகிறார்கள்.

எங்கே மய்யித் வீடு என்று கத்தம் பாத்திஹாவிற்கு ஓடுகிறார்கள். மீலாது விழாக்களில் கூலிக்கு பேசுவது, கூலிக்கு மெளலூது, புர்தா ஓதுவார்கள். கல்யாணம், கத்னா, காது குத்து, பந்தக்கால் நடுதல், பைனான்ஸ், லாட்டரி கடை திறப்பு அத்தனையிலும் முதல் ஆளாக நீண்ட துஆ ஓதி காசு பார்ப்பர். இவர்களைப் போலவே யூத கிறிஸ்தவ சமூகங்களிலும் பாதிரிகள், துறவிகள் மக்களின் பொருளை அநியாயமாக விழுங்கியதாக குர்ஆன் 9:34 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இங்கு நடைபெறும் மோசடிகள் யூத, கிறிஸ்தவர்களிடமிருந்து அடிக்கப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை இவ்வசனம் தெளிவு படுத்துகின்றது. இவர்கள் அப்பாவி முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவனாக!

ஹலரத் அலி

{ 1 comment… read it below or add one }

antony April 9, 2016 at 1:34 pm

IT is true. What can we do ?

Reply

Leave a Comment

Previous post:

Next post: