சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

in அறிவியல்

சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு!

எஸ்.ஹலரத் அலி,(+ 91 9965361068) – திருச்சி–7

ஒரு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் காலடித்தடம். மற்றும் அத்துடன் யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் காலடி தடங்களும் சவுதி அரேபியா தபூக் மாகாண அலதார் (ALATHAR) பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை…

ஜெர்மனியின் புகழ்பெற்ற மாக்ஸ் பிளாங்க் ( MAX BLANC INSTITUTE) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் அறிவித்தனர். கடந்த வாரம் (18-Sep-2020. vol. 6, no.38 ) வெளியான (SCIENCE ADVANCE) இதழில் இது பற்றிய ஆய்வு கட்டுரை வெளியானது. இன்று இருக்கும் பாலைவன சவுதி அன்று இருக்கவில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா பசுமை நிறைந்த காடுகள் சூழ்ந்த,… நீர் நிலை ஆறு, ஏரிகள் நிறைந்த செழிப்பான பூமியாக இருந்துள்ளது. இப்படி இருந்த ஏரிக்கரை ஒன்றில்தான் மனிதக் காலடித் தடங்களும் மிருகங்களின் காலடித் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


https://www.sciencemag.org/news/2020/09/these-120000-year-old-footprints-offer-early-evidence-humans-arabia

https://advances.sciencemag.org/content/6/38/eaba8940


இன்றைய மனிதர்களின் கால்தடங்களை விட ஒரு லட்சத்து இருபதினாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கால் தடங்கள் சற்று பெரிய அளவில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் நம்மை விட உயரமான மனிதர்களாக இருந்ததினால் அவர்களின் கால் அளவுகளும் பெரியதாக இருக்கின்றன. முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் அறுபது முழம் உயரம் கொண்ட மனிதராகவே படைக்கப்பட்டார்கள்.

அவர்களின் வழி வந்த சந்ததிகளும் அந்த உயரமான அளவின்படியே பிறந்தார்கள். ஆயினும் இந்த உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதி உம்மத்து இன்றுள்ள சராசரி ஐந்தடி அளவில் நிலை பெற்றுள்ளது என்பதை ஹதீஸ்களில் காணலாம்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை களி மண்ணிலிருந்து படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது….

எனவே மறுமையில் சொர்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்படைப்புகள் உருவத்திலும்,அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன.”

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) – புஹாரி. 3326.

சொர்க்கவாசிகளான அவர்கள் அனைவரும் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தை (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). – புஹாரி. 3327.

உலகின் முதல் மனிதர் அறுபது முழம் உயரம் இருந்த செய்தியை இன்றைய அறிவுலக ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியதாகவே இருக்கிறது. ஏனெனில் இவர்களின் டார்வின் பரிணாம கொள்கையின்படி மனிதனின் தோற்றம் குரங்கிலிருந்து தொடங்குகிறது. ஆரம்ப குரங்கு அறுபது முழம் உயரமிருந்தது என்று நம்பினால்தான் மனித உயரத்தையும் அவர்களால் நம்ப முடியும். பரிணாமம் என்ற மூடக் கொள்கையை நம்பும் வரை இவர்களால் ஒருக்காலும் உண்மையை உணர்ந்து கொள்ள இயலாது.

ஆனால் ஒரு முஸ்லிம் இப்படி இருக்க முடியாது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும் ஒரு செய்தியை சொல்லிவிட்டால் அதை மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக்கொள்வதே ஈமானின் அம்சமாக இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் எவர்களேன்றால் அவர்கள் அல்லாஹ்வையும்,அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள்.இத்தகையவர்கள்தாம் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள். – அல் குர்ஆன். 49:15.

( பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். – அல் குர்ஆன். 2:3.

உலகில் ஆரம்பத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கும் இன்று வாழும் இறுதி உம்மத் மனிதர்களுக்குமிடையில் உயரத்தில் மட்டுமின்றி ஆயுளிலும் பெரும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக மூத்த நபிமார்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக்கொண்டது.
-அல் குர்ஆன். 29:14.

ஆனால் இன்று வாழும் இறுதி உம்மத்தின் வாழ்நாள் ஆயுள் காலம் படிப்படியாக குறைக்கப்பட்டு 60 – 70 வருடங்களே நிலை பெற்றதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய உண்மை குறிப்பிடத்தக்கது.

“ இந்த உம்மத்தின் ஆயுட்காலம் அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையேதான் உள்ளது. எனினும் இந்த வரம்பை கடப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே! ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – திர்மிதீ.3550.

அன்று வாழ்ந்த மனிதர்கள் நம்மை விட மிக பலசாலிகளாக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். பிரமாண்டமான எகிப்து பிரமிட் கட்டிடங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளை கட்டும் அசாத்திய உடல் வலிமை கொண்டவர்களாகவே முன்னோர்கள் இருந்துள்ளார்கள். அல் குர்ஆன் கூறுகிறது.

( நபியே!) உயர்ந்த தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை. இன்னும், ஸமூத் என்னும் மக்களை இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து அதில் வசித்துக் கொண்டிருந்தார்கள். – அல் குர்ஆன்.89:8,9.

அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்… – அல் குர்ஆன்.30:9.

இன்றுள்ள மனிதர்களை விட முன் வாழ்ந்த மூதாதையர்கள், உடல் அளவிலும், வலிமையிலும், பலசாலிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வே சொல்லிக்காட்டுகிறான். அதற்குச் சான்றாக உலகெங்கும் ஏராளமான தொல்பொருட் கட்டிடச் சான்றுகள் இன்றும் இருக்கிறது. உதாரணமாக கடந்த மாதம் வெளியான (25-August 2020 – HOLOCENE) ஆய்வு இதழில் ஒரு கட்டுரை வெளியானது.

சவுதி அரேபியாவில் உள்ள அல்- ஊலா (AL-ULA) பிரதேசத்தில், மனிதர்களால் கட்டப்பட்ட உலகின் மிகப் பழமையான கல் கட்டுமானத்தை கண்டுபிடித்துள்ளனர். செவ்வக வடிவிலுள்ள சுமார் 400 வகையான கட்டுமானங்கள் 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களால் கட்டப்பட்டது என்று ஆய்வில் தெரியவருகிறது. இம்மனிதர்களின் காலமானது எகிப்தில் பிரமிட்டை கட்டிய காலத்தை விட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது. எரிமலை சரிவுகளிலும், சம தளத்திலும் இக்கல் கட்டுமான சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

https://www.livescience.com/mysterious-stone-structures-saudi-arabia-oldest.html

Hundreds of mysterious stone structures discovered near ancient volcanoes in Saudi ArabiaA Close-Up on Mysteries Made of Stone in Saudi Arabia's Desert - The New York Times
இப்ராஹீம் (அலை) அவர்களின் காலடித்தடம்

சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ்வின் கட்டளைப்படி காபத்துல்லாஹ்வை மறு நிர்மாணம் செய்து கட்டினார்கள். அவர்கள் நின்று கட்டிய இடத்தின் காலடித்தடம் இன்றும் “ மகாமே இப்ராஹீம்” என்று அல்லாஹ்வின் அத்தாட்சியாக இன்றும் விளங்குகிறது. அதை தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

(கஅபா) என்னும் அவ்வீட்டை மனிதர்களுக்கு ஒன்று கூடுமிடமாகவும், அபயமளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கினோம் என்பதையும் அதில் இப்ராஹீம் நின்ற இடத்தை (மகாமு இப்ராஹீமை) தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் எனக்கட்டளை இட்டோம். – அல் குர்ஆன். 2:125.

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன.இப்ராஹீம் நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் அச்சமற்றவராகி விடுகின்றார்…  – அல் குர்ஆன். 3:97.

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு கல்லில் ஏறி நின்று கஅபாவை கட்டுகிறார்கள் என்றால் கஅபாவின் உச்சியை எட்டும் அளவிற்கு அவர்களின் உயரமும் கைகளும் இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிக உயரம் காரணமாக அவர்களின் தலையை என்னால் காண முடியவில்லை என்று நபி (ஸல்) சொன்ன செய்தியை ஹதீஸில் பார்க்க முடிகிறது. (புஹாரி. 3354.)

சுமார் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் காலடித் தடமானது , 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் காலத்து மக்களின் காலடித் தடத்தை விட சற்று அளவில் பெரியது. ஏனெனில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிக்க உயரமானவர்களாக இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறும் ஹதீஸின் மூலம் விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் இன்றிரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜிப்ரீலும், மீக்காயீலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள்தாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அறிவிப்பவர்: சமூரா இப்னு ஜுன்தூப் (ரலி) – புஹாரி.3354.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பின் வந்த மூன்று பெரும் நபிமார்களும் அடுத்தடுத்து சற்று உயரம் குறைந்தவர்களாகவே இருந்ததுள்ளனர் என்பதை ஹதீஸை ஆய்வுசெய்வதன் மூலம் அறியமுடிகிறது.

மூஸா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள். “ஷானுஆ” குலத்து மனிதர்களைப்போல் உயரமானவர்கள் மேலும் ஈஸா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்.; நடுத்தர உயரமுடையவர்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – புஹாரி.3396.

நபி (ஸல்) அவர்கள் உயரம் பற்றி பராவு (ரலி) அவர்கள் கூறியது, “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகிய முகமுடையவர்களாகவும், அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாக தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை, குட்டையானவர்களாகவும் இல்லை.”
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) – புஹாரி. 3548, 3549.

முதல் மனிதரும் நபியுமான ஆதம் (அலை) அவர்களின் உயரம் அறுபது முழமாக இருந்து, பின்பு படிப்படியாக நபிமார்களின் உயரம் குறைந்து, இறுதி உம்மத்தின் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இன்றைய சராசரி உயரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை எளிதில் அறிய முடிகிறது. நபிமார்களைப்  போலவே அவர்களது உம்மத்துகளும் உயரமாக இருந்து பின்பு படிப்படியாக குறைந்து, இன்றைய சராசரி ஐந்தடி உயர மனிதர்களாக மாறிப்போனார்கள்.

ஆரம்பத்தில் ஓரிடத்தில் தோன்றிய மனிதன் பின்பு அங்கிருந்து பரவிசென்று பல்கிப் பெருகினான். இதுவும் இறைவனின் அத்தாட்சி என்று என்று அல் குர்ஆன் கூறுகிறது.

அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களிலும்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். – அல் குர்ஆன்.30:20.

அவனே உங்களை பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான்.
– அல் குர்ஆன்.67:24.

இன்றைய நவீன ஆய்வுகளும் இதைத்தான் சொல்லுகின்றன. முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதன்…அங்கிருந்தே உலகெங்கும் பரவி பல்கிப் பெருகினான்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு காலம் நீண்டிருந்தது. அவர்கள் ஓரிடத்திலிருந்து பரவிச் செல்ல அதிக காலமும் உடல் பலமும் தேவைப்பட்டது. இன்று வாழும் நமக்கு காலம் சுருங்கி விட்டது. இன்றுள்ள மனிதன், உலகத்தின் மறு கோடிக்குச் செல்ல சில மணித்துளி நேரமே போதுமானது. காலம் சுருங்குவதும் மறுமையின் அடையாளம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (-புஹாரி-1036,7017) அன்று வாழ்ந்த மூதாதைகள் உடளவில் உயரமாகவும், பலசாலியாகவும், 950 வருட நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்

இன்று வாழும் இறுதி சமுதாய மக்களளாகிய நாம், உடலளவில் சராசரி ஐந்தடியாக குறைந்தும், அதற்கு தகுந்த உடல் பலமும், 60-70 வருட ஆயுளுடன், காலமும் சுருங்கிய காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.நமக்கு முன் வாழ்ந்த மூதாதையர்கள் உடளவில் மிக்க உயரமானவர்கள் என்பதற்கு, தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கும் எலும்புத் துண்டுகள் சான்றாக இருக்கின்றன. ஆயினும் இந்த உண்மைகள் அறிவியல் உலகத்தால் ஏற்க மனமில்லாத நிலையே இன்றும் இருக்கிறது.

பழங்காலத்தில் உயரமான இராட்சத உருவ மனிதர்கள் வாழ்ந்த செய்திகள் எல்லா மதங்களின் புனித நூல்களில் இடம் பெற்றே இருக்கிறது. குறிப்பாக யூத, கிருஸ்துவ,ஹிந்து, பெளத்த,சீன, கிரேக்க புராண, இதிகாச கதைகளில் ஏராளம் உள்ளது. நாம் இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நமக்கு அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதே போதுமானது.
7 Examples of Proof that Giants Existed | by Chris Thompson | Understanding Reality | Medium
பழங்காலத்தில் வாழ்ந்த இராட்சத மக்களின் எலும்புக்கூடுகள் உலகெங்கும் பரவலாக கண்டெடுக்கப்பட்டாலும் அவைகளை இன்றைய ஆய்வாளர்கள் மறைத்து ஒதுக்கி அழித்து விடுகிறார்கள். ஏனென்றால் இவர்களின் குரங்கிலிருந்து மனிதன் வந்த பரிணாம கதைகளுக்கு இந்த இராட்சத எலும்புகள் அச்சுறுத்தலாக இருப்பதால் அதை மறைப்பதற்கு அதீத ஹார்மோன் வளர்ச்சி என்னும் நோயின் காரணமாகவே இப்படி உயரம் வந்து விட்டதாக நம்ப வைக்கிறார்கள். உண்மையான தொல்பொருள் ஆய்வில் வெளிவரும் உயரமான எலும்பு கூட்டின் புகைப்படங்களைக் கூட போட்டோஷாப் என்றும், போலி என்றும் முத்திரை குத்தி முடக்கி விடுகின்றனர்.

இன்றைய பரிணாம குரங்குக் கொள்கையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் அறிவியல் உலகம் உண்மையை மறைத்த போதிலும் அல்லாஹ் சத்தியத்தை விரைவில் வெளிப்படுத்தியே ஆவான். அல்லாஹ் கூறுகிறான்…

மேலும் இம்மக்களிடம் கூறுவீராக!: “ எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்கு காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை.! – அல் குர்ஆன்.27:93.

அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம். இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்!……. – அல் குர்ஆன்.41:53

Leave a Comment

Previous post:

Next post: