சமாதானத்திற்கு சிறந்த வழி

in பொதுவானவை

இன்றைய முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீதுகள் சொல்வதை விட்டு மனித யூகங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் மாற்று மதத்தாருடன் இருக்க வேண்டிய உறவுகள் துண்டிக்கப்பட்டு துவேஷ மனப்பான்மை முற்றி சில சமயங்களில் கலவரங்களும் ஏற்பட காரணமாக அமைந்து விடுகின்றது. மாற்று மதத்தினருக்கு எதிராய் விஷக்கருத்துகளை முஸ்லிம் சமுதாயத்தில் விதைப்பவர்கள் அவற்றின் தீயவிளைவுகளை சிந்தித்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இப்போது மாற்று மதத்தார் விஷயத்தில் குர்ஆனும், ஹதீதுகளும் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

    2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.

    16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

    29:46. இன்னும் நீங்கள் சேதத்தையுடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள

    60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

   இந்த வசங்களிலிருந்து மாற்று மதத்தாரிடம் அழகிய உபதேசங்களையும் தர்க்கங்களையும் கொண்டே அணுக வேண்டுமேயல்லாது முறை தவறி நடக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வதையும் , நீதியாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை என்பது தெளிவாக புரிகின்றது. அடுத்து யாருடன் பகைத்து போராட வேண்டுமென்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

   60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

   2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

   2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

   2:193. பித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

     மேற்கண்ட திருவசனங்களிலிருந்து, நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் விஷயம், சத்திய இஸ்லாத்தைச் செயல்படுத்த விடாமல் தடுப்பவர்கள், சத்திய பிரச்சாரத்தைத் தடுக்க முற்படுகிறவர்கள், இஸ்லாம் மார்க்கத்தை நேரடியாக எதிர்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்களை பகைத்து எதிர்த்துப் போராடுவதை, அல்லாஹ் நம்மீது கடமையாக்கி இருக்கிறான். சத்திய இஸ்லாத்தின் வழியில் குறுக்கிடாமல், அதே சமயம் ஏற்று நடக்காமல் இருப்பவர்களிடம், பகைமை பாராட்டுவதையோ, அவர்களை எதிர்ப்பதையோ அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

    இந்த வசனங்கள் மூலம் நபி[ஸல்] அவர்கள் பகைத்து எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் யாராக இருந்தார்கள் என்று பார்த்தால், சத்திய இஸ்லாத்தைப் போதித்த நபி[ஸல்] அவர்களின் மிக நெருங்கிய பந்துகளான, ஒரே இனத்தவர்களான, அரபி பாஷை பேசும் குறைஷிகளான இப்றாஹீம்[அலை] அவர்களின் மகன் இஸ்மாயீல்[அலை] அவர்களின் சமூகத்தாரேயாகும். இஸ்மாயீல்[அலை] அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுபவதாகச் சொல்லிக் கொண்டிருந்த குறைஷிகளேயாகும்.

    நபி[ஸல்] அவர்கள் அவர்களைப் பகைத்து எதிர்த்துப் போராட நேரிட்ட காரணம் நபி[ஸல்] அவர்களால் போதிக்கப்பட்ட சத்திய இஸ்லாத்தை [இஸ்மாயீல்[அலை] அவர்கள் உண்மையில் போதித்ததும் இதே இஸ்லாம் மார்க்கத்தைதான். அவர்கள் கண்மூடித்தனமாக நடத்தி வந்த அனாச்சாரங்களுக்கு, சத்திய இஸ்லாம் சாவுமணி அடித்த ஒரே காரணத்தால், எதிர்த்துப் போராடியதேயாகும். யூத கிறிஸ்தவர்கள் இந்த குறைஷிகளுக்குத் துணைபோன சமயத்தில் அவர்களையும், எதிர்த்துப் போராட நேரிட்டது. ஆக சத்திய இஸ்லாத்தை, உண்மைப் பிரச்சாரத்தை எதிர்த்து போராடுகிறவர்கள் எந்த சமூகத்தில் இருந்தாலும், அல்லாஹ்வின் ஆணைப்படி; முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், சத்திய இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், அதை எதிர்காமல் இருந்து வருபவர்களைப் பகைப்பதையோ, அவர்களை எதிர்த்துப் போராடுவதையோ அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதையும் மேலே கண்ட வசனங்களிலிருந்து விளங்குகிறோம்.

    எனவே சத்திய இஸ்லாத்தை ஏற்காமலும், அதே சமயம் அதை எதிர்க்காமலும், எதிர்ப்பவர்களுக்கு துணை போகாமலும், தங்கள், தங்கள் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருப்பவர்களிடம் தொடர்ந்து அழகிய முறையில் உபதேசம் செய்து அவர்களை உண்மையை உணரச் செய்து, இஸ்லாத்தை ஏற்கவைக்க முயற்சிகள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்களே அல்லாமல் அவர்களிடம் கடுமையாகவோ குரோதமாகவோ நடந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நன்மை செய்யவும், நீதி செய்யவுமே அல்லாஹ் கட்டளையிடுகிறான்; காரணம் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மிகக் கடுமையான வேதனை மறுமையில் அவர்களுக்காக காத்திருக்கிறது.

     18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக் ”இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது ஆகவே> விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்் (அந்நெருப்பின்) சவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்் அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சட்டுக் கருக்கி விடும்் மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்> இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

    அவர்களின் மறுமை வாழ்வு இவ்வளவு கடினமாக இருப்பதால் அவர்களைத் தாராளமாக இவ்வுலகில் அனுபவிக்க அல்லாஹ்வே விட்டு வைத்திருக்கிறான். அல்லாஹ் எந்த அளவு தாராளமாக நடந்து கொள்கிறான் என்பதை கீழ் வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    43:33-35. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால் அவர்களின் வீட்டு முகடுகளையும் (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும் அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்)் ஆனால் இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சகங்களேயன்றி வெறில்லை் ஆனால் மறுமை(யின் வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.

    படைத்த ரப்புல் ஆலமீம் இவ்வுலகக் காரியங்களில், அவனை நிராகரிப்பவர்களிடம் இவ்வளவு தாராளமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. நாம் அவர்களுக்கு நன்மை செய்வதையும், நீதி செய்வதையும் அல்லாஹ் நமக்கு அனுமதித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    குர்ஆன் ஹதீதுகள் போதனைகளை நாம் புறக்கணித்ததால் அவை கூறும் போதனைகளுக்கு மாற்றமாக மனித யூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ் பகைக்கச் சொன்னவர்களை நேசிப்பவர்களாவும், பகைக்கக் கூடாதவர்களை பகைப்பவர்களாகவும் ஆகிவிட்டோம்.

    முஸ்லிம்களாகிய நாம் ஒழுக்க விதிகளையும், நியாய விதிகளையும் மீறிக்கொண்டு அப்படிப்பட்ட எந்த விதிகளும் இல்லாதவர்களிடமா ஒழுக்கத்தையும் நியாயத்தையும் எதிர்ப்பார்க்க முடியும்? உலகிற்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கப் கடமைப்பட்ட சமுதாயமே ஒழுக்க கேட்டிற்கு வித்திட்டால், பின் யார் தான் உலகிற்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? முஸ்லிம்களாகிய நாம் ஒழுக்கத்தையும் நியாயத்தையும் எடுத்து நடப்பதால் உண்டாகும் பலாபலன்களை அனுபவ வாயிலாக மாற்று மத சகோதரர்களை உணர வைக்க நாம் முயலவேண்டும். இதுவே சமாதானத்திற்குச் சிறந்த வழியாகும்.

Leave a Comment

Previous post:

Next post: