ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோத ரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர் வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும் ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும் குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)
எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.
சகோதரத்துவம் மனிதனின் இயல்பான உணர்வாகும். ஏனெனில், மனிதன் இயல்பிலேயே தனித்து வாழ முடியாதவனாகவும் பிறரைச் சார்ந்திருக்கும் பண்பு கொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதனால் தனது தேவைகளை நிறைவேற்ற பிறரை நாடிச் செல்கின்றான். தனது இன்ப, துன்பங்களில் ஏனையோர்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றான். இதனால் குடும்பமாக, சமூகமாக வாழ தலைப்பட்டுள்ளான்.
இத்தகைய இயல்பான வாழ்க்கை முறைக்கு மாற்றமாக நடந்து கொள்வது ஈமான் கொள்வதற்கு தடையாகவும் நரகிற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாகவுமே இருக்க முடியும்.
இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியையும் சுபீட்சத்தையும் பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும்.
மஹ்ஷர் வெயிலின் அகோரத்தினால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் கூறுவான் ‘என் கண்ணியத்திற்காக தங்களிடையே அன்பு கொண்டிருந்தவர் கள் எங்கே? என் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந் நாளில் நான் நிழல் தருவேன்’ எனக் கூறுவான். அவர்களுக்கு ஒளியிலான மேடைகள் வழங்கப்படும் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவர்களைக் கண்டு (இவைகள் தமக்குக் கிடைத்திருக்க வேண்டுமென) ஆசை கொள்வார்கள்.
இஸ்லாம் விதித்திருக்கும் வணக்க வழிபாடுகளும்கூட சகோ தரத்துவத்தைக் கட்டியெழுப்புவ தாகவும் வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக இஸ்லாத்தின் அடிப்படைக் கடமையான தொழுகையினை எடுத்துக் கொண்டால் அதனை ஜமாஅத்தாக தொழுவதனை கட்டாயப்படுத்தியிருப்பதன் நோக்கம், சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என்பதாகவும் இருக்க முடியும். ஏனெனில், ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன் என்ற பேதம் பாராது எதிரியாக இருந்தாலும் தோளோடு தோள் சேர்ந்து, காலோடு கால் ஒட்டிய நிலையில் ஒரே வரிசையாக, ஒரே இலக்குடன், ஒரே இறைவனைத் தொழுகின்றோம். எனவே இங்கு சகோதரத்துவ வாஞ்சைகள் வளர்க்கப்படுகின்றன.
இதேபோன்று ஹஜ் கடமையும் சர்வதேச சகோதரத்துவத்தை பிரதி நிதித்துவப்படுத்தும், அதற்கு வலுச் சேர்க்கும் வணக்கமாக அமைந்திருக்கின்றது. உலகின் சகல நாடுகளிலும் இருந்து வருகை தரும் முஸ்லிம் சகோதரர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொள்கின்றார்கள். ஹஜ் காலம் முடிந்ததும் தமது உறவுகளைப் பேணிக் கொள்கிறார்கள், இதன் மூலம் சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவம் பேணப்படுகிறது.
இதேபோல ஏனைய கடமைகளிலும் சகோதரத்துவம் புரையோடியிருப்பதைக் காணலாம். முஆனகா, முஸாபஹா, ஸலாம் சொல்லல் போன்ற செயற்பாடுகள் மூலம் நேரடியாகவே அன்பு பரிமாறப்படுவதனைக் காணலாம். ஆகவே, முஸ்லிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக் கூடாது. ஒருவருக் கொருவர் போட்டியாக நடந்து கொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கூடாது. சிலர் சிலரின் விற்பனைக்கெதிராக குறைத்து விற்கக் கூடாது, கடினமாய்ப் பேசி மனதைப் புண்படுத்தக் கூடாது. யாரையும் தாழ்வாக எண்ணக் கூடாது. யாருக்கும் அநீதமிழைக்கக் கூடாது, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்றெல்லாம் போதிக்கும் இஸ்லாம் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் இஸ்லாத்தைச் சார்ந்தவனல்ல என்று எச்சரிக்கின்றது. இதன்மூலம் இஸ்லாத்தில் சகோதரத்துவம் எத்துனை முக்கியத்துவ முடையது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை தனித்து நின்று செய்திடவில்லை. மாறாக ஸஹாபாக்கள் எனப்படும் தனது உற்ற தோழர்களுடன் இணைந்தே தனது போதனைகளை முன்வைத்தார்கள். ஸஹாபக்களுக்கிடையில் சகோதரத்துவ வாஞ்சையினை வளர்ப்பதற்கு பல வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள்.
ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவ சமுதாயம் வரலாற்றிலே பொன் வரிகளால் பொறித்துக் காண்பிக்கப்பட வேண்டியது. ஏனெனில், ஒழுங்கை அறியாத கோத்திர உணர்வு மேலோங்கியிருந்த அரேபிய சமூகத்தில் அன்பையும் கருணையையும் பரஸ்பரம் உதவிபுரியும் பண்பையும் இஸ்லாமிய சகோதரத்துவக் கொள்கைமூலம் வளர்த்தார்கள். இரத்த உறவு ரீதியான சகோதரத்துவம் கூட வலுவிழந்து போகும் அளவிற்கு இஸ்லாம் கூறும் கொள்கை சகோதரத்துவம் பாரிய மாற்றங்களைஅரேபியரிடையே ஏற்படுத்தியது.
நபியவர்கள் ஹிஜ்ரத் சென்றதும் முதலில் செய்த பணி பரம்பரை பரம்பரையாக பகைமை கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவரின் பகைமையினை நீக்கி சகோதரர்களாக மாற்றியமையாகும். அதே போல மக்காவிலிருந்து தமது சொத்து செல்வங்களையெல்லாம் இழந்து வெறுங்கையுடன் ஹிஜ்ரத் சென்ற மக்காவாசிகளை மதீனா வாசிகளுடன் சகோதரர்களாக இணைந்துவிட்டார்கள். மதீனாவாசிகளோ தமது சொத்து செல்வங்களை மட்டுமல்லாது தமது குடும்பங்களிலும் பங்காளர்களாக மக்காவாசிகளை சேர்த்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மதீனாவாசிகள் அன்சாரிகள் என்றும் மதீனாவாசிகள் முஹாஜிரீன்கள் என்றும் சிறப்புப் பெயர்கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (மார்க்கத்தினை) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்துவேறு பட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்; மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பினை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்) நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேரச் செய்தான். (3:103)
மக்கா-மதீனாவாசிகளது இணைப்பின் மூலம் முஹாஜிரீன்களது வாழ்வை சீரமைப்பதை மட்டும் நபியவர்கள் இலக்காகக் கொள்ளவில்லை. மாற்றமாக இன, நிற, வர்க்க, கேந்திர மொழிபேதமற்ற சகோதரத்துவ, சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு உறுதியான சமுதாயத்தை கட்டியெழுப்பவே நபியவர்கள் விரும்பினார்கள். அதனையே அவர்கள் உருவாக்கியும் காட்டினார்கள்.
அதேபோன்று பிற்பட்ட கால முஸ்லிம்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கின்றபோது இஸ்லா மிய எழுச்சிக்கு இச்சகோதரத்துவக் கொள்கையும் காரணமாக அமைந் திருப்பதனைக் கண்டு கொள்ள லாம். வரலாற்றாசிரியர் ஏ. சுவாமி நாதன் என்பவர் தனது ‘இந்திய வரலாறு’ எனும் நூலில் குறிப்பி டும்போது “இஸ்லாம் சமயத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், என்ற கொள்கைகளின் மூலம் சமுதாயத்தில் தாழ்வுற்றிருந்த இந்துக்களைக் கவர்ந்தனர்; பிராமணத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டிருந்த தீண்டத்தகாதவர்கள் என் போர் இக் கொள்கைமீது பற்று கொண்டு இஸ்லாம் சமயத்தை தழுவினர். இந்து சமயத்தின் வளர்ச்சியில் தடு மாற்றம் ஏற்பட்டு அது தரைமட்டமாகிவிடுமோ என்று பெரும் சமயத் தலைவர்கள் (பக்கம்: 19)அஞ்சும் அளவிற்கு இக்கொள்கை யினால் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார். எனவேதான் தஃவாவின் அடிப்படையாக இச் சகோதரத்துவம் அமைந்த போதெல்லாம் அதற்கு வெற்றியும் அல்லாஹ்வுடைய அருளும் கிடைத்து வந்திருப்பதனை இஸ்லாமிய வரலாறு நிரூபிக்கின்றது.
ஈ.எல்.எம். இர்ஷாத்