சகிப்புத்தன்மையுடையவர்
ஒளிமயமான இஸ்லாமிய நெறியியை பின்பற்றிவரும் இறை அச்சமுள்ள முஸ்லிம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகிப்புத் தன்மையையும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும் வழமையாகக் கொள்ளவேண்டும்.
… அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான். (அல்குர்அன் 3:134)
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வலிமையானவர் யாரெனில், தனது உடல் பலத்தால் மனிதர்களைத் தாக்கி வெற்றி கொள்பவரல்ல. மாறாக, கோபத்தை அடக்கும் ஆற்றல் பெற்று நிதானத்தைக் கடைபிடிப்பவரே வலிமையானவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஆண்மையின் அடையாளமாகும். கோபத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்திவிட்ட பிறகு தணித்துக் கொள்வது வீரமல்ல. மாறாக, கோபம் ஏற்படும்போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு மனிதன் தனது உணர்வுகள் வெடித்துக் கிளம்பும்போது அதைக் கட்டுப்படுத்தி உறுதியாக இருந்து கொண்டால் தர்க்கம், குழப்பம் போன்றவற்றை தவிர்க்க முடியும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மனிதர்களின் அன்பையும் பெற்று இலட்சியத்தை எளிதாக அடையமுடியும்.
இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்ப “எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “”கோபப்படாதே” என்ற ஒரே வார்த்தையைக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வுபதேசம் ஒட்டுமொத்த நற்பண்புகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் “அஷஜ் அப்த கைஸ்’க்குக் கூறினார்கள்: உம்மிடத்தில் அல்லாஹ் நேசிக்கும் இரு பண்புகள் இருக்கின்றன. அவை சகிப்புத் தன்மை, நிதானமுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)
முஸ்லிம் சில சந்தர்ப்பங்களில் கோபப்படுபவராக இருக்கவேண்டும். எனினும் அது தனக்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக கோபப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் புறக்கணிக்கப்படும்போதும், மார்க்கத்தின் மகத்துவங்கள் அவமதிக்கப்படும்போதும் கோபப்பட வேண்டும். அந்நேரத்தில் உண்மை முஸ்லிம் அல்லாஹ்வின் கட்டளைகளை அவமதித்து வரம்பு மீறி அவனது மார்க்கத்துடனும் அவனுடைய சட்டங்களுடனும் விளையாடும் பாவிகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.
“நபி (ஸல்) அவர்கள் தனக்காக எவரையும் பழிவாங்கியதில்லை. எனினும் அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழி வாங்குவார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளார்கள். மார்க்கக் கட்டளைகள் அலட்சியப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும், அதன் சட்டங்களை முறையாக நிறைவேற்றவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் சிவந்துவிடும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “நான் ஃபஜ்ருத் தொழுகைக்கு தாமதமாகவே செல்கிறேன். எங்களுக்கு தொழவைப்பவர் தொழுகையை மிகவும் நீளமாக்குகிறார்” என்று முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தது போல வேறு எப்போதும் கோபமடைந்ததே இல்லை. மேலும் கூறினார்கள், “”மனிதர்களே! நிச்சயமாக உங்களில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்களில் யார் மக்களுக்கு தொழவைக்கிறாரோ அவர் தொழுகையை சுருக்கிக் கொள்ளட்டும். அவருக்குப் பின்னால் பெரியவர்களும், சிறியவர்களும், தேவையுடையோரும் நிற்பார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து திரும்பி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உருவங்கள் உள்ள மெல்லிய திரையைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் திருமுகம் சிவந்து விட்டது. அதை கிழித்தெறிந்து விட்டு “ஆயிஷாவே! அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகவும் கோபத்துக்குரியவர் யாரெனில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக செய்பவர்களே” என்று கூறினார்கள். ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மக்ஜும் கிளையைச் சேர்ந்த பெண் திருடிவிட்டதற்காக நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதிபடுத்தினார்கள். அப்போது உஸாமா இப்னு ஜைது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்ய முயன்றபோது கடுங்கோபம் கொண்டார்கள்.
அப்பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதி செய்த போது அக்குலத்தவர் இதுபற்றிப் பேச நபி (ஸல்) அவர்களிடம் யாரை அனுப்பலாம் என்று ஆலோசித்தார்கள். அப்போது சிலர் “அதைப் பற்றி பேச நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்குரிய உஸாமா இப்னு ஜைதைத் தவிர வேறு எவருக்குத் துணிச்சல் வரும்?” என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். அவர் அது குறித்துப் பேச, நபி (ஸல்) அவர்கள் கோபமாக “”அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையிலா நீ சிபாரிசு செய்கிறாய்?” என்று கூறிவிட்டு எழுந்து நின்று மக்களிடையே உரையாற்றினார்கள். “”உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்கள் அழிந்த தெல்லாம் அவர்களில் வசதியானவர் திருடினால் விட்டு விடுவார்கள். (வசதியற்ற) பலவீனமானவர் திருடினால் அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின்மீது அணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கரத்தைத் துண்டிப்பேன்” என்று கூறினார்கள். ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களின் கோபம் வெளிப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் இஸ்லாம் கோபத்தை அனுமதிக்கிறது. அதாவது கோபம் சுயநலனுக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
{ 1 comment… read it below or add one }
Good one