ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.
குழப்பத்தைத் தீர்க்க வேண்டியவர்களே குழம்பிப் போய் நிற்கின்றனர். தெளிவு படுத்த வேண்டியவர்களே தெளிவின்றி நிற்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குழப்பமான மார்க்கமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. நிச்சயமாக இது குழப்பமான மார்க்கம் இல்லை. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், “உங்களை நான் தெளிவான மார்க்கத்தில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று பிரகாசமானது”. ஆதாரம்: இப்னு மாஜா
ஆகவே குழப்பம் மார்க்கத்தில் இல்லை. அதை எடுத்துச் சொல்கின்றவர்களிடமும், ‘அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் நம்மிடமும் தான் இருக்கிறது. அப்படியானால் எந்த அடிப்படையில் ஒன்றை எற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ வேண்டும்?
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள்: “உங்கள் மத்தியில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்; மற்றொன்று என்னுடைய வழிமுறை” ஆதாரம்: முஅத்தா
நம்மிடம் தெளிவான ஆதாரங்கள் தரப்பட்டு விட்டன. இவற்றைக் கொண்டு யார் எதைச் சொன்னாலும் உரசிப்பார்த்து அது சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவும் மாற்றமாக இருந்தால் புறக்கணிக்கவும் தயாராகி விடவேண்டும்.
கருணைமிக்க இறைவன் மக்களை நேர்வழிப் படுத்துவதற்காக எண்ணற்ற தூதர்களை அனுப்பி நல்லுபதேசம் செய்தான். தன்னை மறுப்பவனுக்கும், தனக்கு இணைகளைக் கற்பிப்பவனுக்கும் இவ்வுலகில் அருள்மாரி பொழியக்கூடியவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்ட இறைவன் அவனை விசுவாசங்கொண்ட மக்களுக்கு, தன்னிடம் உதவி தேட வேண்டிய முறைகளையும், தன்னை நெருங்குவதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தராமல் இருந்திருப்பானா? அவனின் அருமைத் தூதர், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் வழிகாட்டியாகத் திகழக்கூடிய அண்ணலார் அவர்கள் உதவி தேடுவதற்கும் இறைவனை நெருங்குவதற்கும் முன்மாதிரியாகத் திகழாமல் இருந்திருப்பார்களா? அண்ணலார் எந்த முன்மாதிரியைக் காட்டித் தரவில்லையோ, சொல்லித் தரவில்லையோ அது நிச்சயமாக மார்க்கமாக இருக்காது. அதற்குப் பின்னால் இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட தவறான விஷயமாகும் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ், நம்மை அண்ணலாரைத்தான் முன்மாதிரியாகப் பின்பற்றச் சொல்கிறானே தவிர வேறு யாரையும் அல்ல. “அல்லாஹ்வையும், மறுமையையும் ஆதரவு வைப்பவர்களுக்கு அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது” (அல்குர் ஆன் 33:21)
உதவி தேடுவது சம்பந்தமாகவும் இறைவனை நெருங்குவது சம்பந்தமாகவும் அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதையும், அண்ணலார் என்ன கூறுகிறார்கள் என்பதையும் பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான், “தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். உள்ளச்சமுடையவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) இது கஷ்டமாகவே இருக்கிறது. (அல்குர் ஆன் 2:45)
உதவி தேடுகின்ற வழிமுறை மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. இத்தகைய வழிமுறைகளை யார் புறக்கணிப்பார்கள் என்றால் இறையச்சமற்றவர்கள் தான். இத்தகையோர் தாம் கப்ருகளையே பொக்கிஷங்களாக எண்ணிக்கொண்டு தங்கள் கைகளை அங்கே ஏந்திக் கொண்டிருப்பவர்கள்.
மரணத்தை நினைவு படுத்திக் கொள்ளவேண்டிய மண்ணறையில் மயக்கும் வாழ்வைத் தரவேண்டி வரம் கேட்பவர்கள். நித்திய ஜீவனாக இருக்கும் இறைவனை விடுத்து மரணித்தவர்களிடம் கையேந்துகின்ற இந்த முஸ்லிம் சமுதாயத்தை என்னவென்று சொல்ல? இறைவன் தன்னை நெருங்குவதற்கான மற்ற வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்கள் தாங்கள் செய்யும் தர்மங்களை, அல்லாஹ்வுக்கு தங்களை சமீபமாக்குவதற்கும் (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைக்கும் (துஆவிற்கும்) வழியாகக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு) சமீபமாக்கும் என்பதை நீர் அறிந்து கொள்வீராக! அல்லாஹ் அவர்களை அதி சீக்கிரத்தில் தன் பேரருளில் நுழைத்துக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கிறான். (அல்குர் ஆன் 9:99
தான தருமங்கள், இறைவனின் அருளைப் பெற்றுத் தருகின்ற சாதனங்களாக அமைந்துள்ளன. அதனால் தான், ஸஹாபாக்களில் ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்து, அதன் மூலம் இறைவனின் நெருக்கத்தையும், அவனது அருளையும் பெறத் துடித்தனர்.
இறைவனும், அவனது திருத்தூதரும் காட்டித் தராத எந்த வழி முறைகளையும் ஸஹாபாக்களில் எவரும் பின்பற்றியதில்லை. அந்த ஸஹாபாக்கள் தங்கள் தேவைகளை வேண்டி, மதீனத்து நகரில் இருந்த அண்ணலாரின் கப்ரிடம் கேட்கவில்லை. மாறாக இறைவன் விதித்த கடமைகளைக் கொண்டு இறைவனிடம் உதவி தேடினார்கள். அல்லாஹ் கூறியதாக அண்ணலார் கூறினார்கள்:-
எந்த அடியானும் நான் அவன் மீது விதித்துள்ளதை விட விருப்பமான வேறு எதனைக்கொண்டும் என்னை நெருங்கிவிட இயலாது. அதிகமான நபில் (உபரி) வணக்கங்களைக் கொண்டு என்னை அவன் நெருங்கலாம். (ஆதாரம் புகாரி)
இப்னு மஸ் ஊது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்:-
“நாயகத்துடன், தோழர்களான அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ இருவரும் அமர்ந்து கொண்டிருக்கையில், நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் நான் அமர்ந்தபோது, முதலில் அல்லாஹ்வை வாழ்த்தினேன். பிறகு நபிகள் மீது ஸலவாத் கூறினேன். அதன் பின்னர் எனக்காக, துஆ கேட்டேன். அதைக்கேட்டுக் கொண்டிருந்த நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை நோக்கி, “நீர் அல்லாஹ்விடம் கேளும்! அவன் அள்ளி வழங்குவான்” என்றனர். (ஆதாரம்: திர்மிதி)
வாரி வழங்கிட வல்ல இறைவன் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவனுடைய அருளையும், கருணையையும் புறக்கணித்து விட்டு, இறந்தவர்கள் மீது நம்பிக்கை கொள்வது பாவமல்லவா?
ஆனால், மண்ணறையில் பிராத்தனைகள் ஏற்கப்படுகின்றன; நோய்கள் நீங்குகின்றன; பைத்தியங்கள் தெளிகின்றன; கேட்டவை கிடைக்கின்றன என்று ஓங்கி முழக்கமிடுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர். மண்ணறைகளில் மட்டுமல்ல, கோவில்களிலும், சர்ச்சுகளிலும் கூடத்தான் இது போன்ற காரியங்கள் நடந்து விடுகின்றன என நாம் அவர்களுக்குப் பதில் கூறுவோம். இத்தகைய வழிமுறைகளை இஸ்லாம் அனுமதித்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை
பலஹீனமான ஈமான் படைத்த முஸ்லிம்கள், கப்ரில் நடக்கின்ற சில சித்து விளையாட்டுக்களிலும், ஷைத்தான் மற்றும் ஜின்களின் ஆள் மாறாட்டத்திலும் தங்கள் ஈமானைப் பறிகொடுத்து அந்த இடங்கள் தான் இறைவனின் அருளுக்குக் குத்தகை விடப்பட்டுள்ள இடங்கள் என எண்ணி ஏமாந்து போகின்றனர்.
இறைவன் கூறுகிறான்:-
இவர்கள் தாம் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். (அல்குர் ஆன் 2:16)
வல்ல இறைவ நம்மை ஷைத்தானின் மாய வலையில் வீழாது, மாய மந்திரங்களில் விலைமதிப்பற்ற ஈமானை இழந்து விடாது பாதுகாத்து அவனுடைய நேரிய பாதையைக் காட்டி, அவனது அருளுக்குரியவர்களாக ஆக்குவானாக ஆமீன்.
இப்னு எஹ்யா,சங்கரன்பந்தல்