மவ்லவிகளிடமும், உலமா சபைகளிடமும் நாம் பகிரங்கமாகக் கேட்கிறோம்
நாம் இந்த மவ்லவிகளிடமும், உலமா சபைகளிடமும் நாம் பகிரங்கமாகக் கேட்கிறோம். அல்லாஹ் மக்களுக்காக அல்குர்ஆனில் விளக்கியுள்ளதையும், இறுதி நபி(ஸல்) அவர்கள் மக்களுக்காக நடைமுறைப்படுத்திக் காட்டியதையும், உலகிலுள்ள அனைத்து மக்களும் அவரவர்களது மொழியில் படித்து அல்லது படிக்கக் கேட்டு விளங்கமுடியும் என்று ஒப்புக் கொள்ளக் கூடியவர்கள் உங்களில் யாராவது உண்டா? அவற்றை நாங்கள் விளக்கித்தான் நீங்கள் விளங்க முடியும் என்று கூறக்கூடியவர்களே நீங்கள் அனைவரும். அதாவது அல்லாஹ்வை விட, அல்லாஹ்வின் தூதரைவிட மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது (நவூதுபில்லாஹ்) என்று ஆணவம் பேசும் நிலையில்தானே நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.
இந்த ஆணவம் எதுவரை உங்களிடம் காணப்படுகிறதோ அது வரை இந்த உலகிலும் உங்களுக்கு இழிவுதான். மறுமையிலும் ஆதம் (அலை) அவர்கள் முதல் உலக முடிவு நாள் வரையுள்ள மக்கள் அனைவர் முன்னாலும் இழிவை அடைவதோடு மிகக் கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும். நீங்கள் அனைவரும் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும். மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்து, அந்த கூலிக்காகத்தானே பள்ளி முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலையில் கைகட்டி, பணிந்து கையேந்தி நிற்கும் மிகக் கேவலமான நிலை இருக்கிறது. மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத பணம் படைத்த முத்தவல்லிகள், தலைவர்கள் இடும் கட்டளையை ஏற்று மார்க்க முரணான செயல்களை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்? அவர்களது அராஜக, குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால், பணி நீக்கம் என்ற பெயரால் பந்தாடப்படுகிறீர்கள்! இந்த இழிவுகளையும், கேவலங்களையும், ஊர்ஊராக அலையும் அவலங்களையும் எப்படி உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? பிழைப்புக்கு வேறு வழி தெரியாத காரணத்தால், வறுமை உங்களை பயமுறுத்துவதால்தானே இத்தனை இழிவுகளையும், கேவலங்களையும், நாடோடி வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள்? இந்த கூலிக்காகத்தானே மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் அல்லாஹ்வைவிட, அவனது தூதரைவிட, உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று ஆணவத்துடன் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
மக்களிடம் கையேந்துவதைத் தவிர்த்து, எப்போது நீங்கள், நீங்களே உங்கள் மனாருல்ஹுதா பத்திரிக்கையில் எழுதி இருப்பது போல்,உங்கள் கைகளால் உழைத்து உண்ண முன் வருகிறீர்களோ அன்றுதான் உங்களைப் பிடித்துள்ள பீடைகள் அகலும். போலிக் கண்ணியம் போய் உண்மையான கண்ணியம் கிடைக்கும். அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது என்ற உங்களின் மமதை – ஆணவம் – தற்பெருமை அகலும். குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லும் நேர்மை உண்டாகும்.
இதற்கு மவ்லவிகளாகிய, உலமா சபையினராகிய நீங்கள் முன்வந்தால், மக்களிடம் கையேந்தாமல், ஹலாலான முறையில் உங்கள் கைகளால் உழைத்து உண்ணும் உயர்ந்த நிலையை அடைய, அதற்குரிய திட்டங்களை தீட்ட இறையருளால் வழி பிறக்கும். நீங்கள் ஏழு வருடங்கள் மண்டி போட்டு கற்று பட்டம் பெற்று வரும் கவைக்குதவாத உங்கள் புரோகித முன்னோர்களின் கற்பனையான புரோகிதக் கல்வியை தூக்கிக் கடாசிவிட்டு, அல்லது குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் வழி காட்டல்படி அதாவது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி, தொழில் கல்வி இம்மூன்றும் இணைந்த கல்வித் திட்டத்தை ஏற்று அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மவ்லவிகளாகிய நீங்கள் வீழ்ந்து கிடக்கும் அதல பாதாளத்திலிருந்து கரையேற முடியும்.
அதற்கு மாறாக மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள அல்குர்ஆன் வசனங்களில் இவை எல்லாம் குறைஷ் காஃபிர்களுக்காக இறங்கியவை; இவை எல்லாம் யூதர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் கிறிஸ்தவர்களுக்காக இறங்கியவை; இவையெல்லாம் மஜூஸிகளுக்காக இறங்கியவை; இவை அனைத்தும் எங்களைக் கட்டுப்படுத்தாது, நாங்கள் மவ்லவிகள் – அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள், அல்லாஹ் எங்களைத் தண்டிக்க மாட்டான் என்று யூதர்கள் சொன்னது போல் (பார்க்க: 2:80,81) நீங்களும் அகம்பாவத்துடன் சொன்னால், உங்களைப் பீடித்துள்ள நீங்கள் மீளத்துடிக்கும் அவலங்களிலிருந்து இவ்வுலகிலும் உலகம் அழியும் வரை மீட்சியில்லை. மறுமையிலும் கடும் தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
யூத, கிறிஸ்தவ, காஃபிர்கள் விபச்சாரம் செய்தால் தண்டனை உண்டு; அதே சமயம் நாங்கள் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை; அவர்கள் திருடினால் தண்டனை உண்டு; நாங்கள் திருடினால் தண்டனை இல்லை; அவர்கள் கொலை செய்தால் தண்டனை உண்டு; நாங்கள் கொலை செய்தால் தண்டனை இல்லை; லூத்(அலை)சமூகம் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதுதான் குற்றம்; நாங்கள் அதில் ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனமோ, அதைவிட மிகப்பெருத்த அறிவீனம் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது, யூத, கிறிஸ்தவ, காஃபிர்களுக்கே தடை செய்யப்பட்டிருந்தது. நாங்கள் தாராளமாக மார்க்கத்தை எங்களின் பிழைப்புக்குரிய வழியாகக் கொள்ளலாம் என்று விதண்டாவாதம் செய்வதாகும்.
அன்று கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும் அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுத்ததை இன்று நீங்கள் மார்க்கப் பணிக்காக வாங்கும் கூலிக்கு ஒப்பிட்டுப் பேசுவது அதை விட மடமையாகும். உண்மையில் அந்த கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும் அவர்கள் செய்த மார்க்கப் பணிக்காக சம்பளம் கொடுக்கப் பட்டிருந்தால், அன்றிருந்த நபிதோழர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் மார்க்கப் பணி செய்தார்கள். அவர்கள் இமாமத் செய்வதற்காகக் கூலி கொடுக்கப்பட்டிருந்தால், அன்று கவர்னர், கலீஃபா வாக இல்லாமல் மற்ற பள்ளிகளில் இமாமத் செய்த இமாம்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரேயொரு ஆதாரத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? நிச்சயமாக காட்ட முடியாது; அவர்கள் கலீஃபாக்களாக, கவர்னர்களாக மக்களின் இவ்வுலகக் காரியங்களை கவனித்து வந்ததால், அதற்காக மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
முழு நேரப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என்று கூறியும் நீங்கள் கூலி வாங்க முடியாது. நபிமார்கள் அனைவரும் உங்களைவிட உண்மையிலேயே முழுநேரம் மார்க்கப்பணி புரிந்தார்கள். அப்படியானால் அந்த நபிமார்களே உங்களைவிட கூலி வாங்கத் தகுதி படைத்தவர்கள். அந்த நபிமார்களுக்குத் தான் கூலி வாங்கத் தடை விதித்து அல்லாஹ் எச்சரித்துள்ளான். காரணம் இவ்வுலக வாழ்க் கைக்குரிய தேவையான பொருளாதார தேடலை, மார்க்கத்துடன் இணைத்து விட்டால், மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது; திரித்தல், வளைத்தல், மறைத்தல் போன்ற அனைத்து வழிகேடுகளும் வந்து புகுந்து விடும். வழிகேட்டில் செல்லும் மக்களை திருப்திப்படுத்தி அவர்களிட மிருந்து ஆதாயம் அடைய வழி கேடுகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயம் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மார்க்கப் பணிக்கு, இமாமத்துக்கு கூலி வாங்குவதை மிக மிகக் கடுமையான குற்றமாக சுமார் ஐம்பது இடங்களில் பல்வேறு கோணங்களில் கூறி தடுத்துள்ளான்.
மவ்லவிகளாகிய,உலமாக்களாகிய, அல்லாமாக்களாகி, உலமா சபையினராகிய நீங்கள் அனைவரும் உண்மையிலேயே அல்லாஹ்வை அஞ்சியும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உணவளிப்பதுபோல் உங்களுக்கும் நிச்சயமாக உணவளிப்பான் என்று உறுதியாக அந்த அல்லாஹ் மீது ஆதரவும் வைப்பவர்களாக இருந்தால், மேலே நாம் எடுத்தெழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்கள் அனைத் தையும் நடுநிலையோடு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், நாதாக்கள் போன்றோர்களின் மேல் விளக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இறைவாக்குகள் நேரடியாக, தெளிவாக என்ன கூறுகின்றன என்பதை அப்படியே ஏற்று அதன்படி நடக்க முன் வாருங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; லாஹிர் (வெளிப்படையான) அர்த்தங்கள் உண்டு; பாத்தின் (அந்த ரங்க) அர்த்தங்கள் உண்டு; பதினாறு கலை கற்றவர்களால்தான் குர்ஆன், ஹதீஸை விளங்க முடியும் போன்ற ஏமாற்றுப் பிதற்றல்களை விட்டொழியுங்கள். இல்லை என்றால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் நீங்கள் தப்பவே முடியாது.
இதற்குப் பின்னரும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நாதாக்கள், வலிமார்கள், முன்னோர்கள் கூறி இருப்பது, எழுதி வைத்திருப்பதுதான் எங்களுக்கு வேத வாக்கு-அல்குர்ஆன் நேரடி கருத்துக்களை விட, ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் நேரடி கருத்துக்களைவிட எங்கள் முன்னோர்களின் சுயகருத்துக்கள்தான் மேலானவை, சரியானவை என்பதுதான் உங்களின் முடிவாக இருந்தால், முன்னோர்களின் முடிவையே சிறந்த முடிவாக எடுத்து நடந்தவர்களின் நாளை மறுமையின் நிலை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி இருப்பதை கீழ்வரும் இறை வாக்கு களை படித்து விளங்கி படிப்பினை பெற முன் வாருங்கள். அவை வருமாறு:
2:170, 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87,109, 12:40, 14:10, 21:53,54, 26:73,74,76, 31:21, 34:43, 37:17,69, 43:22,23, 53:23, 56:48
இறைவனது இத்தனை நேரடி தெளிவான கருத்துக்களை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் சுய கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் எந்த அளவு வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
ஆக நீங்கள் அல்குர்ஆனையும் பின்பற்றவில்லை; ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் பின்பற்றவில்லை; நேர் வழி நடந்த கலீஃபாக்களையும் பின்பற்றவில்லை; நபி தோழர்களையும் பின்பற்றவில்லை; அந்த நான்கு இமாம்களையும் பின்பற்றில்லை; யூத, கிறிஸ்தவ ஊர் பெயர் தெரியாத அநாமதேய பேர்வழிகளின் சுய நலத்துடன் கூடிய கற்பனைக் காவியங்களையே பெரிதும் மதித்துப் போற்றி, அவற்றையே வேதவாக்காகக் கொண்டு, நீங்களும் வழி கெட்டு, பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறீர்கள். பிழைப்பை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வழிகேட்டில் செல்லும் பெருங்கொண்ட மக்களைத் திருப்திப்படுத்தி ஆதாயம் அடைய, ஷைத்தானின் தூண்டுதலின் அடிப்படையிலுள்ள அவர்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறுதான் நீங்கள் ‘பிக்ஹு’ என்ற பெயரால் மார்க்க சட்டம் சொல்லுகிறீர்கள். ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நபி(ஸல்) காலத்து அபுஜஹீலை தலைவனாகக் கொண்ட தாருந்நத்வா உலமாக்களுக்கும் உங்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை, அவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அப்படியே பின்பற்றுகிறீர்கள் என்பதை உணருங்கள். வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் உங்கள் பின்னால் அணி வகுப்பார்கள் என்பதே உங்களுக்குரிய ஒரே பிளஸ் பாயிண்ட். ஆனால் நாளை மறுமையில் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும்.
எனவே காலம் கடப்பதற்கு முன்னர், மவ்லவிகளாகிய நீங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள புரோகித கல்வியை தூக்கி எறிந்து விட்டு, முழுக்க, முழுக்க அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான, அக்கல்வியைக் கற்றுத் தேறி வெளிவரும் அறிஞர்கள் சொந்தக் காலில் நின்று, தங்கள் கைகளால் பொருளீட்டி அவர்களும் சாப்பிட்டுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழும், அதாவது நீங்கள் பெரிதும் மதித்து நடப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் நடந்து காட்டியது போல் நடக்க வழிவகை காணும் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி, தொழிற் கல்வி மூன்றும் இணைந்த நபி(ஸல்) காட்டித் தந்த கல்வியை நடைமுறைப்படுத்த முன் வாருங்கள்.
அப்படி நீங்கள் முன் வந்து செயல்படுத்தினால், இன்னும் பத்து ஆண்டுகளில் இன்ஷா அல்லாஹ், மவ்லவிகளாகிய நீங்கள், மார்க்கம் அறியாத முத்தவல்லிகள், தலைவர்கள் முன்னால் கைகட்டி வாய் பொத்தி, அவர்கள் காலால் இடும் கட்டளைகளை நீங்கள் தலையால் நிறைவேற்றிவரும் நிலைமாறி, அந்த முத்தவல்லிகளிலிருந்து, தலைவர்களிலிருந்து, செல்வந்தர்களிலிருந்து அனைவரும், மார்க்க அறிஞர்கள் முன் கைகட்டி, வாய்பொத்தி, அந்த அறிஞர்கள் காலால் இடும் கட்டளைகளை அவர்கள் தலையால் நிறை வேற்றிடும் அற்புதமான நிலை உருவாகிவிடும். இன்றைய மவ்லவிகளாகிய உங்களின் இவ்வுலக வாழ்க்கை நிலை பாழ்பட்டதாக ஆகிவிட்டாலும், உங்களின் மறுஉலக வாழ்க்கையாவது சீர்படுவதுடன் எதிர்கால மார்க்க அறிஞர்களின் எதிர்கால நிலையாவது உயரும். மவ்லவிகளாகிய நீங்கள் தயாராவீர்களா?
இந்த கருத்துகளை நாம் மவ்லவி -ஆலிம்களாகிய உங்கள் அனைவரையும் விட பெரிய அறிவாளி என்ற பெருமையுடனோ, அகம்பாவத்துடனோ, ஆணவத்துடனோ எடுத்து வைக்கவில்லை. வல்லமைமிக்க அல்லாஹ் அதிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக. ஆனால், எம்மை விட, மவ்லவி -ஆலிம்களாகிய உங்கள் அனைவரையும் விட, நீங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள அவுலியாக்கள், இமாம்கள், நாதாக்கள், நபிதோழர்கள், நபிமார்கள் ஆக ஜின், மனித படைப்பினங்கள் அனைவரையும் விட பூரணத்துவம் நிறைந்த மிகப் பெரிய அறிவாளி நம்முடைய எஜமானன் அல்லாஹ் என்றும், அடுத்து அந்த எஜமானன் அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்புடன் இருந்த நபிமார்கள், ஜின், மனித படைப்புகளிலேயே பெரிய அறிவாளிகள் என்றும் நாம் உறுதியாக நம்புவதால் – ஈமான் கொண்டிருப்பதால், அல்லாஹ்வுடைய கலமாகிய அல்குர்ஆனிலுள்ள “முஹ்க்கமாத்” வசனங்களிலும், அவற்றை செயலில் நடைமுறைப்படுத்திக் காட்டிய இறுதி நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தை நமக்கு அறியத்தரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இருப்பதை அப்படியே ஏற்று நாமும், நீங்களும் செயல்பட வேண்டும், அவற்றிற்கு மேல் விளக்கம், சுய விளக்கம் என்ற பெயரால் அவற்றைத் திரிக்க, வளைக்க, மறைக்க முற்படக் கூடாது; விளக்கம் கொடுக்கும் அதிகாரம் நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இல்லை. அது அல்குர்ஆன் பகரா 2:159, 161, 162 எச்சரிக்கைப்படி எம்மையும், உங்களையும் மீளா நரகத்தில் கொண்டு சேர்த்துவிடும் என்றே மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்.
அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், அவனது தூதருடைய சொல்லுக்கும் மாற்றுக் கருத்துக் கொள்வது பகிரங்கமான வழி கேடு என்றும், அது நிரந்தர நரகில் சேர்க்கும் என்று கூறும் அல்குர்ஆன் 33:36, 66, 67, 68 எச்சரிக்கையின் அடிப்படையிலேயும் கூறுகிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து சிந்தித்து முடிவெடுக்க முன் வாருங்கள்.
அந்நஜாத்: அக்டோபர், 2007
{ 1 comment… read it below or add one }
2:2. இது திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டும் .
2:3.அவர்கள், மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்றதின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
17:45. நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.