குர்ஆனும் சுன்னாவும்

Post image for குர்ஆனும் சுன்னாவும்

in அழிவுப் பாதை

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

    குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் – ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம். மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.

    இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள். இவைகளெல்லாம் குர்ஆனைப் பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான சுன்னாவைப் பற்றியும் அறியாதவர்களினால் பின்பற்றப்படுகின்ற வழிகேடுகளாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இறைவனுடைய குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது ஒன்றே ஒரு மனிதனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

    இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனைப் பற்றியும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது போதனைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்திருப்பதோடு தன்னுடைய வாழ்க்கையில் முழமையாக அவற்றை பின்பற்றவும் வேண்டும். மேலும் நாம் அறிந்து கொண்ட இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து வைப்பதிலும் நாம் கண்ணுக் கருத்துமாக இடை விடாது பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    இன்று துரதிருஷ்டவசமாக சிலர் சுன்னாவையும் அதனைப் பின்பற்றுவதன் மதிப்பையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகள் உண்மையானவை தானா என்று அறிந்து கொள்ள முற்படாமலேயே இருக்கின்றார்கள். மேலும் சிலர் சுன்னாவைப் பற்றிய சந்தேகத்திலேயே தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இப்பொழுது ஒரு கடைத்தெருவுக்குப் போகின்றோம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களில் எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்து வாங்கின்றோமில்லையா? அதைப் போல சுன்னாவிலும் எது ஸஹீஹானது (ஆதாரமுள்ளது) எது ழயீஃபானது (புனைந்துரைக்கப்பட்டது பொய்யானது) என்பதை இனங் கண்டு பின்பற்றுவதும் அவசியம் தானே! அதே போல புத்தகக் கடைக்குச் சென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தின் மீது நம்முடைய முகங்களைத் தொலைத்து விடும் அளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றோம் அதைப் போலவே நமக்குப் பிடிக்காத புத்தகத்தை தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இதே போல மனநிலையை சுன்னாவிலும் செலுத்துவது எவ்வாறு? எனக்குச் சுன்னாவைப் பின்பற்றுவது பிடிக்கவில்லை அதனால் நான் அதனை அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என ஒதுங்கி விடலாமா?!

    ஓருவர் இறைத்துாதர்கள் செய்து காட்டிய அற்புதங்களை மறுக்கின்றார் ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று நேரத் தொழுகைகள் போதுமென்கின்றார் நோன்பு நோற்க வேண்டும், அதற்கு எதற்கு 30 நாட்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்தால் போதும் தானே!  என இன்னும் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிவது அவர்களது வாழ்நாளுடன் முடிந்து விட்டது இப்பொழுது அதற்கு அவசியமில்லை என்று சுன்னாவை மறுப்பதில் ஒவ்வொரு அளவுகோள்களை வைத்துக் கொண்டு அதனை மறுத்துக் கொண்டு இருப்பதை நம் நடைமுறையில் காண முடிகின்றது. இவர்கள் தங்களது அலுவல்கள் மற்றும் நேரங்களை இந்த சுன்னாவை எதிர்ப்பதிலும் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    தெளிவான ஹதீஸ்களுடன் பொய்யான ஹதீஸ்களும் கலந்து விட்டிருக்கின்ற காரணத்தால் அதனை இனம் பிரிக்கும் அளவுக்கு அதற்கான கல்வி ஞானம் இல்லாத காரணத்தால் ஹதீஸ்களை என்னால் பின்பற்ற இயலாது அதனைப் பின்பற்றுவதிலிருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன் என்று சிலர் கூறிக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவிற்குக் கட்டுப்படாமல் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த இவர்களது பிடிவாதத்தை விளக்க வேண்டுமென்றால் : ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு மருந்துகள் தேவைப்படுகின்றது. இன்று உண்மையில் மருந்துக் கடைகளில் உண்மையான மற்றும் போலி மருந்துகளும் விற்கப்படுகின்றதெனில் போலியைத் தவிர்த்து விட்டு நல்ல மருந்துகளை வாங்குவதற்கு நாம் எவ்வாறு அதில் பரிச்சயப்பட்ட நபரைத் தேடி அவரது துணையை நாம் பெற்றுக் கொள்வதில் எதுவும் நம்மைத் தடுத்து விடாது என்பது நடைமுறை உண்மையாகும். தனக்குாிய அந்த அசலான மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் விரும்புவானா அல்லது அசலும் போலியும் கலந்திருக்கின்றது. எனவே நான் எந்த மருந்தையும் வாங்கப் போவதில்லை யாருடைய துணையையும் தேடப் போவதில்லை என்று கூறி சாவை எதிர்கொள்வானா?

    இன்றைக்கு கடவுளே இல்லை என்ற கொள்கையும் நன்மைகளும் தீமைகளும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருக்கும் பொழுது நம்முடைய இந்த நிலைப்பாடு இத்தகைய தீமைகளில் நாம் ஈடுபட்டு விடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடாது. எனவே ஆதாரமான ஹதீஸ்களும் ஆதாரமற்ற ஹதீஸ்களும் கலந்து இருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி நான் சுன்னாவைப் பின்பற்ற மாட்டேன் என்று கூறுவது சுன்னாவை அவமிதிக்கும் செயலாகும். இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்து அனுபவிக்கின்றோமோ அது போல சுன்னாவையும் நாம் எது ஆதாரமுள்ளது எது ஆதராமற்றது என்று அறிந்து சுன்னாவைப் பின்பற்றுவதும் அந்த சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் ஒரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும். சுன்னாவைத் தேர்ந்தெடுக்கின்ற விசயத்தில் எது ஆதாரமற்றது என்று தெரிய வருகின்றதோ அதனை அறிந்த மாத்திரத்திலேயே உதறித் தள்ளிவிடுவதும் ஒரு உண்மையான முஸ்லிமின் மீதுள்ள கடமையுமாகும்.

    தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44

    இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 5:92

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

Leave a Comment

Previous post:

Next post: