கஜா புயல்……

Post image for கஜா புயல்……

in அறிவியல்


கஜா புயல்……

தங்களுக்கு தாங்களே தீங்கிழைக்க!.. குழப்பத்தை தேடும் மனிதர்கள்.! -1

 எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7

உலக வாழ்கையில் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையான ஒன்றே! இந்த மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட பழக்க வழக்க,,நடை,உடை,உணவு நாகரீகம் என்றளவில், பல நவீன அறிவியல் புதுமைகள் மனித வாழ்வை மாற்றி விட்டன. ஆயினும் பேராசை கொண்ட மனிதன்; இறைவனின் இயற்கை அமைப்பை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டான். ஆயினும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதன் எந்த மாற்றத்தையும் செய்ய இயழாது. ஆனால் அதில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும். மனிதனின் மாற்றம் என்ற குழப்பத்தின் காரணத்தால்……

 

  1. ,பூமியில் வெப்பநிலை அதிகரித்து கடல் மட்டம் உயர்தல். ( GLOBAL WARMING)

 மரபணு மாற்றுப் பயிர்களின் மூலம் உண்ணும் உணவில் மாற்றம் என்னும் குழப்பம். GM-FOODS.(GENETIC MODIFIED ORGANISM)

 இயற்கையான பருவ காலங்களை மாற்றி குழப்பி அமைத்து… அதனையே ஆயுதமாக்குதல்.

(WEAPONISE THE WEATHER ).

 

  1. புவி வெப்ப சூடேற்றம் (Global Warming)

நவீன வசதி வாய்ப்புகளை அனுபவிக்க அனைத்து சாதனங்களுக்கும் மின்சாரம் அவசியம்.இந்த மின்சார உற்பத்திக்காக கோடிகணக்கான டன்கள் நிலக்கரி எரிக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு, காற்றில் கலக்கிறது. மேலும் கோடிக்கணக்கான போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகைகளும் காற்றில் கலந்து வானை போர்வை போன்று மூடி விட்டன.. எனவே சூரியனிடமிருந்து வரும் வெப்பமானது மீண்டும் விண் வெளிக்குச் செல்லாமல், பூமிக்கே திருப்பி அனுப்பப்பட்டு புவியை வெப்பமாக்குகின்றன.

Image result for global warming effectஇந்த புவி வெப்ப உயர்வின் காரணமாக, துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தை உயர்த்தியும்… பருவ கால நிலைகளில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. பெய்ய வேண்டிய பருவத்தில் மழை பொழிவதில்லை. கடல் சூடேறியதால் புயல்கள் உருவாகி பல சேதங்களை ஏற்படுத்தி, மக்களின்  வாழ்வாதாரங்களை பாழாக்குகின்றன. இந்த புவி வெப்ப உயர்வு மனிதன் தனக்குத் தானே வைத்துக்கொண்ட சூனியமாகவே இருக்கிறது.

மின்சாரத் தேவைக்காக பெட்ரோலைத் தேடி அலையும் அரசுகள்… அதை  எடுப்பதற்காக மக்களை வாட்டி வதைக்கவும்… அவர்களின் பாரம்பரிய விவசாய நிலங்களை அடாவடியாக பிடுங்கவும் முயற்சிக்கின்றனர். இன்று காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கஜா புயலின் காரணமாக கையேந்தி திரிவதற்கு முதற்காரணமே ஆளும் அரசுகளின் தணியாத பெட்ரோல் தாகமே! கடல் வெப்பமடைவதால் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு புயல் உருவாகிறது.

நமது வங்காள விரி குடாவில் வருடந்தோறும் புயல் உருவாவது வாடிக்கையே! ஆயினும் இதற்கு முன் வந்த புயல்கள் கடலோரமாக வந்து… அப்படியே அடுத்த மாநிலங்களுக்குள் சென்று விடும். பொதுவாக  கடலோர மக்களுக்கே பெரும் சேதம் ஏற்படுத்தும். டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இதுவரை வந்ததில்லை. ஆனால் இன்றைய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் “சோழ நாடு சோறுடைத்து….” என்பது மாறி “பிச்சை எடுத்து”… என்ற நிலைமைக்கு வந்ததற்குக் காரணம்.. நம்மை ஆளும் மக்கள் அரசுகளே?

எத்தியோபியா,சோமாலியா நாடுகளில் பஞ்சம் வந்து, மக்கள் உணவைத் தேடி ஓடும் அவல நிலையை பார்த்துள்ளோம். அதே நிலைக்கு நமது டெல்டா மாவட்ட மக்களும் வந்துவிட்டார்கள். சோமாலியாவில் மழை இன்றி பஞ்சம்…. நம் மக்களுக்கோ மழை பொழிந்தும் பஞ்சம். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கூரினார்கள்.,

  மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர்  பஞ்சமன்று, மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும்.

 அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி).   ஸஹீஹ் முஸ்லிம். 5563.

 

 கஜா புயல் வருகையை முன்னறிவித்து…. அதன் பயணப்பாதையை ஊகித்தும் கூறிய அரசு வானிலை ஆய்வாளர்களுக்கு அல்வா கொடுத்த  கஜா புயல்… முற்றிலும் எதிர் பாராத நிலையில் டெல்டா மாவட்டங்களில் புகுந்து… விளையாடி அபூர்வமாக புதுக்கோட்டை நெடுவாசலில் நின்று விளையாடி திருச்சியில் திருப்பத்தை ஏற்படுத்தி, திண்டுக்கல், கொடைக்கானலில் சூறையாடி தேனி வழியாக கேரளா இடுக்கிக்கு சென்றது.

Related imageகாவிரி டெல்டா பகுதி,  புதுக்கோட்டையை தேடி புயல் வர என்ன காரணம்.? இந்த புயலை இங்கு வரவழைத்தது யார்? வேறு யாருமல்ல… நமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசுதான். என்னப்பா சொல்றீங்க! புயலை வரவழைக்க முடியுமா? முடியும்… போலீஸ் நாய் மோப்பம் பிடித்துச் செல்வது போல் புயலும் வெப்ப மிருக்கும் இடத்தையே மோப்பம் பிடித்துச் செல்லும். இதுதான் இங்கும் நடந்தது.

ஒரு புயல் உருவாவதற்கு வெப்பம் தேவை. அந்தப்புயல் வலுவிழந்து விடாமல் தொடர்ந்து வலுப்பெற அது வெப்பமிருக்கும் திசையிலேயே செல்லும். கடலில் எங்கு வெப்பம் இருக்கிறதோ அதை நோக்கிச் செல்லும். கடலை கடந்து கரைக்கு அருகே வரும் புயல்…. .கரை கடக்கும் நிலத்தில் வெப்பம் இல்லையென்றால் வலுவிழக்கும்.

எந்த நிலத்தில் வெப்பம் உள்ளதோ அங்கு வந்து வெப்பத்தை எடுத்து வலுவான புயலாக மாறி அனைத்தையும் அழித்தொழிக்கும்.

தஞ்சை டெல்டா மாவட்டம், கதிராமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுக்கோட்டை நெடுவாசலில் எப்படி புதிதாக வெப்பம் வந்தது?. இங்குதான் நமது ‘ஓஎன்ஜிசி’ (OIL AND NATURAL GAS COMMISION OF INDIA) பெட்ரோல் மற்றும் மீத்தேன் தேடும் கம்பெனிகள் களத்திற்கு வருகிறார்கள். காவிரி  படுகையின் எண்ணெய் வளத்தை உருஞ்சிக் குடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வரிந்து கட்டி நிற்கிறார்கள். மீத்தேன் எதிர்ப்பு போராளி பேராசிரியர் த.ஜெயராமன் அவர்களின் அறிக்கையும் இதைத்தான் சொல்கிறது.

“கடந்த 15 -11-2018 அன்று வீசிய கஜா புயலால் காவிரி படுகை மாவட்டங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இவ்வளவு பெரிய பேரழிவை காவிரி படுகையில் எந்தப் புயலும் ஏற்படுத்தியதில்லை. வழக்கத்திற்கு மாறாக,கடலைத் தாண்டி கரை கடந்த பின்பும் கொஞ்சமும் வலுவிழக்காமல், காவிரி படுகையைத் தாண்டி, திண்டுக்கல்,தேனி மாவட்டம் வரை நாசம் செய்தது. இந்தப்புயல் காவிரி படுகையைக் நோக்கி நகர்வதற்கான காரணம்….

காவிரிப் படுகையில் நடந்து கொண்டிருக்கும் வரைமுறையற்ற எண்ணெய்- எரிவாயு எடுப்பதும், இரவு பகலாக,எண்ணெய சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ந்து எரிவாயு எரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் நிலவும் கூடுதல் வெப்பமும் காரணம் என்று எண்ணெய்க் கிணறு தொழிற்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அவ்வாறெனில், இந்த கஜா புயலை காவிரி படுகைக்கு வரவழைத்தற்கும், புயலின் இந்த தீவிரவாதத்திற்கும் எண்ணெய் – எரிவாயு வளத்தை சூறையாடி வரும் எண்ணெய் நிறுவனங்களே காரணம்.

பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டாலும் காவிரி படுகை எண்ணெய் வளச் சூறையில் முன்னிலை வகிப்பது “ஓஎன்ஜிசி” தான். காவிரிப் படுக்கையின் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாதபடி பாழடித்து வருவது மட்டுமின்றி, பல பகுதிகளில் புற்று நோய் முதல் தோல் நோய் வரை வாரி வழங்கி வருகிறது. (சான்று: அடியக்கமங்கலம், வெள்ளைக்குடி, கதிராமங்கலம்) வரைமுறையற்ற வகையில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதோடு மீத்தேன், ஷெல் மீத்தேன் உள்பட ஹைட்ரோகார்பன்களை காவிரி படுகையில் எடுப்பதற்கும் உரிமை பெற்று விட்டன.

இந்நிலையில்தான், காவிரி படுகை வெப்ப மண்டல பூமியாக மாறி வருகிறது. இதுவரை 712 எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறார்கள். காவிரி படுக்கையின் மேலே  பயிர் வளமும், நிலத்துக்கடியில் கணிமவளமும் இருக்கின்றன. கஜா புயலானது நிலத்துக்கு மேலே இருந்ததைத்தான் சூறையாடியது. ஆனால், ஓஎன்ஜிசி நிலத்தின் அடியில் இருக்கும் எண்ணெய், எரிவாயுவை சூறையாடியதோடு நிலத்தடி நீரையும் ஒழித்துக் கட்டுகிறது.” என்று தமது முகநூல் பதிவில் பேராசிரியர் த. ஜெயராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மரக்காணத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் சதுர கிலோமீட்டர் கடற்கரை மற்றும் விளை நிலப் பகுதிகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மரக்காணம் – வேளாங்கண்ணி வரை 24 கிணறுகள் மரக்காணம் – கடலூர் 4  கிணறுகள்   கடலூர் – வைத்தீஸ்வரன்கோவில் 10 கிணறுகள், பரங்கிபேட்டை – வேளாங்கண்ணி 10 கிணறுகள். டெல்டா பகுதியான காளி,குத்தாலம், நரிமணம், அடியக்கமங்கலம், கீழ் வேளூர்,நன்னிலம், ஆதிச்சபுரம்,வடக்குக்கோயில்களப்பாயில், மாத்தூர்,பந்தநல்லூர்,என்று தொடராக எண்ணெய் கிணறுகள்.

தென் மேற்கு திசையான நாகப்பட்டினம் – சென்னை  நோக்கிச் சென்று   கொண்டிருந்த கஜா புயல் திடீரென்று  திசை மாறி மேற்கு நோக்கி, டெல்டா பிரதேசங்களான தஞ்சாவூர், திருவாரூர்,கடலூர்,புதுக்கோட்டை இராமநாதபுரம் செல்லக் காரணம் தொடர்ச்சியாக உள்ள ஹைடிரோ கார்பன் எரிவாயு எண்ணெய் கிணறுகளின் வெப்ப மண்டல ஈர்ப்பே…. கஜா புயலை கை பிடித்து இழுத்து வந்தது

அல்லாஹ் படைத்த இயற்கை சூழலை மாற்றிக் குழப்ப, மனிதன் முயலும்போது  இது போன்ற இன்னல்களை எதிர் கொண்டே ஆகவேண்டும். லட்சக்கணக்கான தென்னை மரங்கள்,ஆயிரக்கணக்கான மீன் பிடி படகுகள், மற்றும் பல ஆயிரம் மின் கம்பங்கள் 63 உயிர் இழப்புகள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை, கஜா புயல் இன்று கேள்விக்குறியாக்கி விட்டது. அல் குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.

  அல் குர்ஆன். 10:44.

    மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை இவ்வுலகிலும் அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.”   அல் குர்ஆன்.30:41.

 

Leave a Comment

Previous post:

Next post: