ஏழைகளுக்குரிய பங்கை அபகரித்து மோசடி செய்யாதீர்கள்!

Post image for ஏழைகளுக்குரிய பங்கை அபகரித்து மோசடி செய்யாதீர்கள்!

in நோன்பு,ஜகாத்

ஜகாத் ஏழை எளியவர்கள், கடன் பட்டோர், தேவையுடையோர் போன்றோருக்குச் சேரவேண்டிய பங்காகும். ஜகாத்தைத் தொழுகையோடு இணைத்து அல்குர்ஆன் 2:43,83, 110,177, 277, 4:77, 22:41,78, 24:56, 33:33, 41:7, 58:13, 73:20, 91:5 ஆகிய பல இடங்களில் வலியுறுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். எப்படித் தொழுது விட்டோம் நமது கடமை தீர்ந்தது. இனித் தொழ வேண்டியதில்லை என்று எண்ணுவது தவறோ, 15:99 இறைவாக்கில் “”உங்க ளுக்கு யகீன் வரும் வரை உங்கள் ரப்பை வணங்குங்கள் என்றிருப்பதை மரணம் வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று விளங்குவதற்கு மாறாக, சில வழிகெட்ட ஷைகுகள் “உறுதியான நம்பிக்கை வரும் வரைதான் இறைவனை வணங்க வேண்டும். எங்களுக்கு உறுதியான நம்பிக்கை வந்து விட்டது. எனவே நாங்கள் வணங்குவது கடமை அல்ல” எனத் தவறாகக் கூறி வழி கெட்டுச் செல்வது பெரும் தவறோ, அது போல் நவீன தவ்ஹீத்(?) மவ்லவிகள் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் கடமை. ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால் அப்பொருள் தூய்மையாகி விட்டது. இனி அப்பொருளுக்கு ஜகாத் கொடுப்பது கடமை இல்லை என்று தவறாகக் கூறி ஏழை மக்களின் பங்கை மோசம் செய்யச் செல்வந்தர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

”நம்பிக்கையாளர்களே! மதகுருமார்களிலும், துறவிகளிலும் அதிகமானவர்கள் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையிலேயே உண்கிறார்கள். இறைவழியை விட்டும் (மக்களை) தடுத்தும் வருகிறார்கள். (இவர்களுக்கும்) பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறைவழியில் செலவிடாதோருக்கும் நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்” (9:34)
அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். “”நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்” என்று கூறப்படும். (9:35)

அந்த ஊராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியவை. மேலும், உங்களில் செல் வந்தர்களுக்குள்ளேயே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக (இவ்வாறு பங்கிடுகிறான்)….. (59:7)

இந்த 9:34, 35, 59:7 இறைவாக்குகளை, உலகியல் ஆதாயங்களை அசல் குறிக்கோளாகக் கொள்ளாமல், இறையச்சத்துடன் ஆய்வு செய்கிறவர்கள் செல்வம் செல்வந்தர்களிடம் மட்டும் தேங்கி நிற்கக் கூடாது. அதில் ஏழைகளுக்குரிய பங்கு கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதை உணரலாம். அடுத்து இந்த வருடம் முழுவதும் அச்செல்வம் வெளியே செல்லாமல் தேங்கி நின்றால் அடுத்த வருடமும் அதே பொருளுக்கு ஜகாத் கடமை என்பதையும் எளிதாக உணர முடியும். செல்வத்தை வெளியே செல்ல விடாமல், தேக்கி வைத்துக் கொள்வதற்கே ஜகாத் என்று 9:34 இறைவாக்குக் கூறுவதை புரிய முடியாதவர்கள் தங்களை பெரும் ஆய்வாளர்கள், அறிஞர்கள் என்று கூறுவது அறிவீனமே!

ஜகாத் கடமையானதிலிருந்து சுமார் 10 வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் கூடவே இருந்து வருடா வருடம் ஜகாத்தை எப்படி வசூலித்தார்கள் என்பதைக் கண்கூடாக நேரடியாகப் பார்த்த பின்னாள் கலீஃபாக்களான உமர்(ரழி), அலீ(ரழி) இருவரும் செல்வம் கிடைத்து ஒரு வருடம் வெளியே செல்லாமல் தேங்கி நின்றால் தான் ஜகாத் கடமையாகும், ஜகாத் கொடுத்த பொருள் அடுத்த வருடமும் வெளியே செல்லாமல் அவரிடமே தேங்கி நின்றால் மீண்டும் அதே பொருளுக்கு ஜகாத் கடமை என்று கூறியுள்ளது, அவற்றில் நபி(ஸல்) சொன்னதாக இல்லாததால் ஆதாரபூர்வமான செய்தி இல்லையாம். ஏற்க முடியாதாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆய்வின் லட்சணம் இதுதான். கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டுவதில் தர்கா, தரீக்கா, மத்ஹபு மவ்லவிகளை மிஞ்சிவிட்டார்கள் இந்த தவ்ஹீத் ஜமாஅத்(?) மவ்லவி.

ஒரு முறை ஜகாத் கொடுத்து விட்டால் அப்பொருள் தூய்மை அடைந்து விட்டது. எனவே அதற்கு வருடா வருடம் ஜகாத் கடமையில்லை என்ற மூடத்தனமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். ஜகாத்திற்கு தூய்மைப்படுத்துதல் என்ற பொருள் இருந்தாலும் அது பொருளைத் தூய்மைப்படுத்துவதில்லை. பொருளை உடையவரைத் தூய்மைப்படுத்துவதாகும். காரணம் பொருள் ஒருபோதும் அழுக்கடைவதில்லை. அதைத் தூய்மைப்படுத்தும் கட்டாயமுமில்லை. 1000 ரூபாய் நோட்டு எந்த அளவு புழக்கத்தில் அழுக்கடைந்தாலும் அது 1000 ரூபாய்தான். அதைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் கட்டாயமில்லை. அல்லது அதற்கு 25 ரூபாய் ஜகாத் கொடுத்தவுடன் புதிதாக அச்சடித்த நோட்டு போல் தூய்மையடைவதுமில்லை. பொருள் தூய்மையடைகிறது என்று கூறுவதை விட மடமை பிரிதொன்று இருக்க முடியாது.

ஜகாத் கொடுப்பது கொண்டு மனிதனே தூய்மையடைகிறான். குர்ஆன் 74:42-45, 102:1-8, 104:1-9, 107:1-7 இறைவாக்குகளைப் படித்து விளங்குகிறவர்கள் மனிதன் எந்த அளவு கஞ்சனாகவும், பணத்தாசைப் பிடித்து அலைகிறவனாகவும், மரணித்து கப்ரை (மண்ணறையை) சந்திக்கிறவரை செல்வத்தைப் பெருக்கும் ஆசையில் மறுமையை மறந்து திரியும் ஆபத்தான நிலையில் அலைவதையும் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்டச் செல்வந்தர்களின் நிலையைத்தான் அல்லாஹ் 9:35 இறை வாக்கில் படம் பிடித்துக் காட்டுகிறான். இப்படிப் பணத்தாசைப் பிடித்து உள்ளத்தில் அழுக்கேறி இருக்கும் மனிதனைத் தூய்மைப் படுத்தத்தான் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கி இருக்கிறான். மற்றபடி பொருளைத் தூய்மைப்படுத்த ஜகாத் கடமையாக்கப்பட வில்லை. மற்ற மற்ற விசயங்களில் நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் குறிப்பிடாத பல ஹதீஃத்களை, பலவீனமான ஹதீஃத்களைத் தூக்கிப் பிடித்துப் பிடிவாதமாக வாதிடும் அல்லாஹ்வுடன் கூட்டுச் சேர்ந்து அல்லாஹ்வுக்கே இணையாளர்களாகியுள்ள (பார்க்க : 42:21)

தவ்ஹீத் மவ்லவிகள்(?) ஜகாத்துடைய விஷயத்தில் நபி(ஸல்) அவர்களுடன் 10 வருடங்கள் இருந்து ஜகாத் வசூலிக்கப்படுவதை நேரடியாக, கண்கூடாகப் பார்த்த, இரண்டாம் கலீஃபா, நான்காம் கலீஃபா என பல வருடங்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய, விவசாயப் பொருள் அல்லாத மற்றப் பொருள்களுக்கு அவை ஒரு வருடம் தேக்கி வைக்கப்பட்டால் அப்பொருள்கள் மீது ஜகாத் கடமையாகிறது. வெளியே செல்லாமல் அப்பொருள்கள் தேக்கி வைக்கப்படும் காலமெல்லாம் வருடா வருடம் அப் பொருள்களுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கடமை என்று தெளிவாக, நேரடியாகச் சொல்லி இருப்பதை தவ்ஹீத் மவ்லவி(?) மறுக்க அவருக்கு நியாயமான சுயநலக் காரணம் உண்டு.

அரசியல் வியாபாரிகள் பெருங்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், நம் நாட்டு பண முதலைகளிடமும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரங்களைப் பாழ்படுத்தி அச்செல்வந்தர்களை மேலும் மேலும் கொழுக்க வைக்கத் திட்டம் தீட்டுவது போல், இந்த தவ்ஹீத்(?) மத வியாபாரி, பெரும் செல்வந்தர்கள் கொடுக்கும் பெரும் லஞ்சத்திற்காக ஏழை எளியவர்களுக்குச் சேரவேண்டிய ஜகாத்தை முழுமையாகக் கொடுக்காமல் அந்தச் செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகச் சட்டம் வகுத்துக் கொடுக்கிறார். அந்தச் செல்வந்தர்கள் கொடுக்கும் லஞ்சம் கொண்டே இவரது இயக்கத்தை மேலும் மேலும் வளர்க்க முடிகிறது. தினசரி பல மணி நேரம் தொல்லைக் காட்சிகளில் பவனி வர முடிகிறது. இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தைக் கைகழுவித் தங்களின் இயக்கத்தை வளர்க்க, பேர் புகழ் பெருமை அடைய முற்படுகிறவர்கள் ஒருபோதும் சத்தியத்தை-நேர்வழியைப் போதிக்க முடியாது என்பதை 36:21 இறைவாக்கைப் படித்து உணர்ந்தவர்கள் ஒப்புக் கொள்ளவே செய்வர்.

இந்த மவ்லவிகள் 1987 ஜூனில் நம்மை விட்டு வெளியேறிய பின்னர், நாகர்கோவிலில் இருந்தபோதும், அதன் பின்னர் மதுரையில் இருந்த போதும் இதே முடிவைத்தான் ஏற்று பிரசாரம் செய்துவந்தனர். சென்னைக்கு அவர்களின் அலுவலகத்தை மாற்றிய பின்னர், அங்கு வாராவாரம் பிரசாரம் செய்யும் காலகட்டத்தில், மேற்படி செல்வந்தர்களில் ஓரிருவர், “”ஒரு பெண்மணியின் கணவர் இறந்து விட்டார். அவர் வாங்கி விட்டுச் சென்றுள்ள பல லட்சம் பெறும் கட்டிடம். ஆனால் அதில் வரும் வாட கையோ மிக மிகக் குறைவு. அது அப்பெண் மணியின் செலவுக்கே போதவில்லை. இந்த நிலையில் அப்பெண்மணி எப்படி அக்கட்டிடத்திற்கு ஜகாத் கொடுப்பாள்? கட்டிடத்தின் ஒரு பகுதியை எடுத்தா ஜகாத் கொடுக்க முடியும்? என்று ஷைத்தானின் தூண்டுதலில் மீண்டும் மீண்டும் கேட்க, அவர்களின் ஆதரவையும், அதன் மூலம் தனது இயக்கச் செலவுகளுக்கும், பேர் புகழுக்கும், ஆசைப்பட்டு, ததஜ நவீன இமாம்(?) தன் மூளையைக் கசக்கிப் பெற்றது தான் ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். அது சுத்தமாகி விடும். மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட குருட்டு ஃபத்வா. அதனால் தான் இந்த நவீன இமாமிடம்(?) தப அதாபியீ, தாபியீ போன்றவர்களை விட உமர் (ரழி), அலீ(ரழி) இருவரும், நபி(ஸல்) அவர்களோடு நீண்ட காலம் நெருக்கமாக இருந்து பல ஆண்டுகள் நபி(ஸல்) அவர்கள் எப்படி வருடா வருடம் ஜகாத் வசூலித்தார்கள் என்பதை நேரடியாகப் பார்த்த உயர் நிலையிலுள்ள அவ்விருவரும் தகுதியும், நம்பிக்கையும் குறைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

இவர் இந்த இடத்தில் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “”அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை” என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எனவே அக் கட்டிடத்திற்கு உண்மையிலேயே ஜகாத் கொடுக்கும் அளவில் பணமோ, வேறு வழியோ இல்லை என்றால் அல்லாஹ் அவரை மன்னிக்கப் போதுமானவன். வேறு வகையில் செல்வம் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது” என்றே சொல்லி இருக்க வேண்டும்.

இன்னொரு அபத்தக் கருத்தையும் சொல்லி செல்வந்தர்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார். அதாவது வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் அப்பொருள் கரைந்து இல்லாமலாகி விடுமாம். அல்லாஹ் ஜகாத் கொடுப்பதன் மூலம் பொருளில் அபிவிருத்தி ஏற்படும். மேலும் மேலும் வளரும் என்கிறான். இப்படிக் கூறும் 30:39 இறைவாக்கை நிராகரித்து குஃப்ரிலாகி ஜகாத் பொருளை அழித்து விடும்-இல்லாமலாக்கி விடும் என்று கூறுபவர்களிடம் ஈமான் எஞ்சி இருக்குமா?

அப்படியே ஜகாத் கொடுத்த பொருளை வியாபாரம், தொழில்களில் ஈடுபடுத்தாமல் முடக்கி வைத்துள்ள நிலையில் தொடர்ந்து ஜகாத் வருடா வருடம் கொடுத்து வந்தாலும் அது குறைந்து குறைந்து குறிப்பிட்ட நிசாபை அடைந்து விட்டால், பின்னர் அப்பொருளுக்கு ஜகாத் கடமை இல்லையே! பின்னர் எப்படி கரைந்து இல்லாமலாகி விடும். இப்படிச் சொல்வது தவ்ஹீத்(?) மவ்லவியின் அறியாமையா? மக்களைப் பயமுறுத்தி ஜகாத் கொடுப்பதிலிருந்து தடுக்கும் கெட்ட நோக்கமா? அல்லது செல்வந்தர்களைச் சந்தோசப்படுத்தி அது கொண்டு அவர்களிடமிருந்து தவறான முறையில் ஆதாயம் அடையும் நோக்கமா? 9:34 இறை வாக்கு மதகுருமார்களிலும், துறவிகளிலும் அதிகமானவர்கள் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையிலேயே உண்கிறார்கள். இறை வழியை விட்டும் (மக்களை) தடுத்தும் வருகிறார்கள் என்று இப்படிப்பட்டவர்களையே தெளிவாக, நேரடியாக அடையாளம் காட்டுகிறது. அவரின் கண்மூடிப் பக்தர்கள் சிந்திப்பார்களா?
அல்குர்ஆனில் எடுத்த எடுப்பிலேயே பகரா: 2:2,3 இறைவாக்குகளில் மறைவானவற்றை உறுதியாக நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி (ஜனங்களுக்குக் காட்டவோ, விட்டுவிட்டோ தொழுவது அல்ல) அல்லாஹ் அளித்தவற்றில் ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகச் செலவிடும் தக்வா (பயபக்தி) உடையவர்களுக்கு அல்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று உறுதியிட்டுக் கூறும் நிலையில், தொழுகையில், ஜகாத்தில் பேணுதலற்றவர்களுக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்று நம்புகிறவர்கள் கண்ணிருந்தும் குருடர்களே, காதிருந்தும் செவிடர்களே. (பார்க்க : 7:179, 2:18)
செல்வந்தர்களே, பணம் படைத்தவர்களே 42:21 இறைவாக்குக் கூறுவது போல், தவ்ஹீத் ஜமாஅத் என குர்ஆன், ஹதீஃத் ஆதாரமில்லாமல் சுயமாகப் பெயரிட்டு அல்லாஹ்வுடன் கூட்டுச் சேர்ந்து, அல்லாஹ்வுக்கு இணையாளராகிப் பெரும் வழிகேட்டில் இருக்கும் இந்த நவீன ததஜ இமாமின்(?) பேச்சைக் கண்மூடி நம்பி, அவரது குருட்டு ஃபத்வாவை வேதவாக்காகக் கொண்டு ஏழை எளியவர்களுக்குரிய பங்கான ஜகாத்தை நீங்கள் வருடா வருடம் கொடுக்காமல் சேமித்து வைத்தீர்களானால் அவை உங்களுடைய சொத்து அல்ல. அவை உங்களின் வாரிசுகளின் சொத்துக்களே. நாய் வைக்கோலைக் கட்டிக் காப்பது போல் நீங்கள் அச்சொத்துக்களை கட்டிக் காப்பாற்றி உங்கள் வாரிசுகளுக்காகவே விட்டுச் செல்ல இருக்கிறீர்கள். இவ்வுலகில் பெரும் செல்வந்தன் என்ற வீண் பெருமையைத் தவிர்த்து வேறு ஒன்றையும் நீங்கள் அடையப் போவதில்லை.

ஆனால் அதற்கு மாறாக ஜகாத்தை வருடா வருடம் நீங்கள் முறையாகச் செலுத்தாத காரணத்தால், உங்களின் சொத்துக்கள் நெருப்பிலிட்டு காய்ச்சப்பட்டு உங்களின் நெற்றியிலும், முதுகிலும், விலாப்புறங்களிலும் சூடிட்டு வேதனைப் படுத்தப்படும் என்று 9:35 இறைவாக்குக் கூறுவதைக் கவனமாகப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.

அது மட்டுமல்ல, நீங்கள் விட்டுச் சென்ற சொத்தை உங்களது வாரிசுகள் தவறான முறையில் செலவிட்டால் அதன் தீய பலனும் உங்களையே வந்தடையும். எச்சரிக்கை! எனவே அல்லாஹ்வுடனேயே கூட்டுச் சேர்ந்துள்ள வழி கெட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின்(?) நவீன இமாமின்(?) ஃபத்வாவை நம்பி கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால், நாளை மறுமையில் கடுமையான தண்டனைக் காத்திருக்கிறது. எச்சரிக்கை! எனவே ஜகாத் கொடுத்த பொருள்களுக்கே வருடா வருடம் தவறாமல் ஜகாத் கொடுத்து உங்களின் சொத்துக்களின் உங்களுக்குரிய பங்கை மறுமைக்கு முற்படுத்தி வைக்க முன் வாருங்கள்; அல்லாஹ் போதுமானவன்.


அபூ அப்தில்லாஹ்

{ 1 comment… read it below or add one }

shiraj mohammed March 5, 2015 at 5:13 pm

ஜகாத் ஏழை எளியவர்கள், கடன் பட்டோர், தேவையுடையோர் போன்றோருக்குச் சேரவேண்டிய பங்காகும்

Reply

Leave a Comment

Previous post:

Next post: