ஏழைகளின் பங்கு

in நோன்பு,ஜகாத்

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2

வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான். எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட விட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள்.

கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளை கொண்டதுதான் இவ்வுலக வாழ்க்கை. மிக அற்பமானதொரு வாழ்க்கையை அறியும் உண்மை அறிஞர்களே இந்த உண்மையை ஏற்கமுடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கத்தக்க நிலையை உணரமுடியும். அன்றாடம் சில சில்லறை காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.

இதே போல் நித்தியமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே இவ்வுலகின் வாழ்க்கையின் அற்பம் புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் அற்ப இவ்வுலக வாழ்க்கையைவிட பெரியதொரு நிரந்தர வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

தாயின் சின்னஞ்சிறிய கருவறையில் குழந்தை இருக்கும்போது, அங்கிருந்து ஒரு பிரமாண்டமான உலகறைக்குப் போக இருக்கிறோம் என்பதை எப்படி நம்ப முடியாமல் இருக்கிறதோ அதேபோல், இந்த உலகறையை விட்டும் அதைவிட பன்மடங்கு பிரமாண்டமான மறு உலகறைக்குப்போக இருப்பதையும் மனிதன் நம்பாமல் இருக்கிறான். ஆனால் கருவறையிலிருந்து இவ்வுலகறைக்கு மனிதன் வந்தது பெரிய உண்மையோ சர்வ நிச்சயமோ, அதேபோல் மனிதன் இவ்வுலகறையிலிருந்து மறு உலகறைக்கு செல்வதும் மிகப்பெரிய உண்மையாகும். சர்வ நிச்சயமாகும்.

இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும், சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக, புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், புறக்கணிக்க வேண்டிய அற்ப்பத்தனம் காணப்படும்.

மறுமையின் நிரந்த வாழ்க்கையை உண்மையில் அறிந்து வைத்திருப்பவன், அவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படி கணக்கிட்டு உரியர்வகளிடம் ஒப்படைத்து விடவேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் அவன் நிலை கேடாகவே முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சதனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்கு கொடுக்காமல் கட்டிக் காத்துக் கிடந்ததற்குரிய தண்டனையை இனிமேல் தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாக கண்டபின்னர்தான் அழுது புழம்பப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. அல்குர்ஆன் 9:34

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (இன்னும்) ”இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் 9:35

ஆகிய இரு கடுமையான இரு எச்சரிக்கைகளையும், முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களில் ஜகாத்தை கணக்கிட்டு எளியவர்களுக்கும் தேவையுடைவர்களுக்கும் கொடுத்துவிடக் கடமைப் பட்டிருக்கிறார்கள். எனவே அன்புச் சகோதர சகோதரிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வங்களிலிருந்து ஏழைகளுக்குறிய பங்கை முறையாக கணக்கிட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடுபவர்களே நாளை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்பதை உணர்வார்களாக!

Leave a Comment

Previous post:

Next post: