சகோதரர்களே!
உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? மறுமையில் கிடைக்கக்கூடியதை நீங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இம்மையில் இன்று உங்கள் நிலையைப்பற்றி யோசனை செய்யுங்கள்.
இவ்வுலகில் நீங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறீர்கள். இவ்வளவு மக்கள் தொகைகொண்ட நீங்கள் போக்கற்றவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்; இறைவனைத் தவிர வேறு யாருக்கும் குனியாத உங்கள் தலை வெறும் மனிதர்களுக்கு முன்னால் குனியாது; எவரும் சூரையாடத் துணியாத உங்கள் கண்ணியம் இன்று மண்ணோடு மண்ணாகியிருக்காது. அறியாமையும் வறுமையும் கடனும் உங்கள் நிழல்போல் தொடர்ந்து வரா! ஆனால் இவையெல்லாம் உங்களை இப்போது பீடித்திருக்கின்றன. சற்று சிந்தனை செய்யுங்கள். இதுதானா இறைவனுடைய அருள்? இது இறையருளல்ல; வெளிப்படையாகத் தெரிகின்ற இறைக்கோபம்.
முஸ்லிமாய் இருக்கின்றான், அதே சமயத்தில் இறைக்கோபத்திற்கும் ஆளாகின்றான் என்று சொல்லும்போது வியப்பு தோன்றுகிறது அல்லவா? முஸ்லிமாய் இருந்தாலும் இறைவனால் வெறுக்கவும்படுகிறான். முஸ்லிமாய் இருப்பதோடு அடிமையாகவும் இருக்கிறான் இது எவ்வளவு அசாத்தியமான செய்தி?
இறைவனின் கட்டளைகளை உணர்ந்து அவற்றிற்கு அடிபணிந்து நடக்கக்கூடிய உங்களுக்கு மேலே இறைவழிபாடு இல்லாத மக்களை அவன் உயர்த்துவானா? உங்களுடைய வணக்கத்துக்கு பிரதியாக உங்களை அவன் தண்டிப்பானா? இறைவன் அநியாயக்காரனல்லன் என்பதை நீங்கள் நம்பினால் இறைவழிபாட்டுக்குப் பதிலாக கேவலமும் இழிவும் கிடைக்க முடியாது என்பதை நம்பினால், உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்வதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
அரசின் பதிவேடுகளில் உங்கள் பெயர் முஸ்லிம் என்றுதான் எழுதப்படுகிறது. ஆனால் இறைவனிடத்தில் அரசாங்கப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு கிடைக்காது. இறைவன் தன்னுடைய பதிவேடுகளில் உங்கள் பெயர் இறைவனுக்கு வழிபட்டு நடப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா; இல்லை வழிபட மறுப்பவர்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருக்கிறதா? என்று அங்கே தேடிப்பாருங்கள்!
இறைவன் உங்களுக்கு அல்குர்ஆனை அருளினான் அதனை ஓதி அறிந்து உங்கள் அதிபதியை உணர்ந்து கொள்வதற்காக; அவனுடைய கட்டளைக்குப் கீழ்படிந்து நடப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அல்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் எப்போதேனும் முயற்சி செய்ததுண்டா?
இறைவன் தன்னுடைய திருத்தூதரை உங்களிடம் அனுப்பி முஸ்லிமாகத் திகழ்வது எப்படி என்பதை உங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக. அத்தூதர் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு என்றேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா?
இம்மையிலும் மறுமையிலும் கண்ணியத்தை அடைவதற்கான பாதையை காண்பித்தான். நீங்கள் அந்த பாதையிலா நடக்கிறீர்கள்? இம்மையிலும் மறுமையிலும் தாழ்த்தக்கூடிய செயல்கள் யாவை என்பதை இறைவன் தெள்ளத் தெளிவாகக் கான்பித்தான். அத்தகைய செயல்களை நீங்கள் தவிர்த்துக் கொள்கிறீர்களா? திருகுர்ஆனிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியிலிருந்தும் நீங்கள் அறிவு பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படியானால் இறைவன் அளிக்கும் நற்கூலிகளை பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நிராகரிப்பாளன் பெற்றிருப்பது போன்றே அறிவைப் பெற்றிருக்கிற ஒருவன் தன்னைத்தானே முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டால் அவன் பொய் சொல்கிறான் என்பதே பொருள்.
நிராகரிப்பாளன் அல்குர்ஆனை ஓதுவதுமில்லை; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்வதுமில்லை; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்வதுமில்லை. ஒரு முஸ்லிமுடைய நிலையும் இதுதான் என்றால் அவனை எப்படி முஸ்லிமென்று சொல்லமுடியும்? முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்கள் என்ன அறிவுரை கூறினார்கள், இறைவனிடம் அவர்கள் காட்டிய நேரான பாதை எது என்பதை நிராகரிப்பாளன் அறிந்து கொள்ளவில்லை. ஒரு முஸ்லிமும் இதே நிலையில்தான் இருக்கிறான் என்றால் அவன் எப்படி முஸ்லிமாக முடியும்?
நிராகரிப்பாளன் ஹலால் அனுமதிக்கப்பட்டதற்கும் ஹராம் தடுக்கப்பட்டதற்கு மிடையில் வேற்றுமை பார்ப்பதில்லை. எந்தச் செயலில் தனக்கு நன்மையும் இன்பமும் இருக்கின்றனவோ அதனை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டாலும் சரி தடுக்கப்பட்டவையாக இருந்தாலும் சரியே! இதே நடத்தை ஒரு முஸ்லிமிடம் காணப்பட்டால் அவனுக்குக் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?
இறை நிராகரிப்பாளனைப் போல் ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால், நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களை அவனும் செய்தால் அவனுக்கு எப்படி சிறப்பு கிடைக்க முடியும்? மறுமையில் நிராகரிப்பாளன் எப்படி எழுப்பப்படுவானோ அப்படித்தானே இந்த முஸ்லிமும் ஏன் எழுப்பப்படக்கூடாது? நாம் எல்லோரும் அமைதி நிறைந்த உள்ளத்தோடு சிந்திக்க வேண்டிய பிரச்னைகள் இவை.
அபுல் அஃலா மவ்தூதி
{ 1 comment… read it below or add one }
nabi vali binpatra eanna saya vendum