என்னையே நோக்கி நிற்போரின் வழி

in அல்குர்ஆன்

முஸ்லிம்களில் பெரும்பான்மையினோர் தங்கள் மார்க்கத்தை குர்ஆனைக் கொண்டும், சுன்னாவைக் கொண்டும் உரசி பார்க்காமல் முன்னோர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள் அதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களை முன்வைத்து ஆலிம்கள் எனப்படுவோரும் தங்கள் தவறான கொள்கைக்கு சில இறை வசனங்களை எப்படியெல்லாம் திரித்து கூறுகின்றனர் என்பதை பார்ப்போம். அல்குர்ஆன் 31:15 (என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَى இறைவசனத்தின் ஓரு பகுதியை ஓதிக்காட்டி َّ இமாம்களை முன்னோர்களை தக்லீத் செய்வதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.  முதலில் 31:15 வசனத்தையும் அதைத் தெளிவாகக் விளங்கிக்கொள்ள உதவும் 31:14 வசனத்தையும் முதலில் பார்ப்போம்.

    நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடையதாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” 31:14

    ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.” 31:15

    இந்த இரண்டு வசனங்களையும் நிதானமாக கவனமாக படித்து பாருங்கள். எவ்வளவு தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் அவை அமைந்திருக்கின்றன. உண்மையில் குர்ஆன் வசனங்கள் நம்மோடு பேசுகின்றன. இவ்வளவு தெளிவாக வசனங்களின் ஒரு பகுதியை ஓதிக்காட்டி மக்களை தக்லீதின் பக்கம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள்.

    31:14 வசனத்தில் ஒரு மனிதனுக்கு தனது பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான். தாய் கஷ்டப்பட்டு கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுத்து அதன் பின்னும் இரண்டு வருடங்கள் பால் கொடுத்து வளர்ப்பதையும் அல்லாஹ் சுட்டிகாட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும்படியும் அவர்களுடன் அன்போடும் வாஞ்சையோடும், உபகாரத்தோடும் நடந்து கொள்ளச் சொல்லும் இறைவன் அதே சமயம் அவர்கள் இவனது அறிவில் இல்லாத ஒன்றைச் சொல்லி அதை இவன் செய்து அதன்மூலம் அல்லாஹ்விற்கு இனைவைக்கும் குற்றத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என தெளிவாக எச்சரிக்கிறான்.

    இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாவது, நம் சமுதாயத்தில் காணப்படும் பல மார்க்க முரணான செயல்கள் எந்த அடிப்படையில் நம்மவர்களால் செய்யப்படுகின்றன? அந்தச் சடங்குகள் பற்றிய அறிவும் இவர்களுக்கு இல்லை. ஆனால் பெற்றோர்கள் செய்து வருவதைப் பார்க்கிறார்கள். மேலும் அந்தச் சடங்குகளைச் செய்வதால் நன்மைகளும், அபிவிருத்திகளும் உண்டாகும் என பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

    ஆக இந்தச் சடங்குகளைப்பற்றி அறிவு இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் செய்கிறார்கள்  செய்யச் சொல்கிறார்கள் என்று அடிப்படையிலேயே பலர் பல மூடச்சடங்குகளில் ஈடுபடுவதை பார்க்கிறோம். அந்தச் சடங்குகள் தவறானவை, குர்ஆன் ஹதீஸுக்கு முரணானவை என்று நாம் சுட்டிக்காட்டினாலும் காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக நாங்கள் செய்து வருவதை நீங்கள் மூடச் சடங்குகள் என்று சொல்வதா? என்று கேட்பதிலிருந்தே அவர்களுக்கு அந்தச் சடங்குகள் பற்றிய ஞானம் இல்லை. முன்னோர்கள், பெற்றோர்கள் செய்து வந்ததால் மட்டுமே செய்கின்றனர் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

    ஆக இப்படி தங்கள் பெற்றோர்கள் செய்தார்கள், செய்யச் சொன்னார்கள் என்ற காரணத்திற்காக, தங்கள் அறிவில் இல்லாத ஒன்றை மார்க்கமாக எண்ணிச் செய்வதையே தனக்கு இணை வைப்பதாகும் என அல்லாஹ் எச்சரிக்கிறான். காலங்காலமாக குடும்பத்தில் பெரியவர்கள் பெற்றோர்கள் ஒன்றைச் சொன்னால் அனுபத்தைக் கொண்டு சொல்கிறார்கள் அது சரியாகத்தான் இருக்கும். எனவே அவர்களின் பேச்சை எடுத்து நடப்பதே முறை என்ற நம்பிக்கை எல்லா சமூகத்தாரிடமும் காணப்படுகிறது. இது உலக காரியங்களில் சரியாக இருக்கலாம். கண்டு அனுபவித்து சொல்கிறார்கள். எனவே உலக காரியங்களில் அவர்களுக்கு இணங்கி நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான்.

    ஆனால் மார்க்க விஷயங்களில் அவர்கள் மறுமையை கண்டு அனுபவித்து அவர்கள் கூறவில்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத ஒன்றை சொன்னால் அவர்கள் கற்பனையில், யூகத்தில் சொல்கிறார்கள். எனவே அவை சரியாக இருக்க முடியாது. மார்க்கமாக ஒன்றை சொன்னால் முன்னோர்களாயினும் பெற்றோராயினும், யாராயினும் அறிந்தே வழிபடுவது நமது கடமையாகும். கற்பனையில் யூகத்தில் சொல்வதை அதுதான் மார்க்கம் என நம்புவது தக்லீத் கண்மூடிப்பின்பற்றுவதாகும்.

    என்னையே நோக்கி நிற்போரின் வழி 31:15 என்றால் யாருடைய வழி? நபிமார்கள் மார்க்க காரியங்களுக்கு அல்லாஹ்வை நோக்கி நின்று அவன் வஹீ மூலம் அறிவித்ததைச் செயல்படுத்தினார்கள். மாறாக தனது கற்பனையையோ, யூகத்தையோ சொல்ல முன்வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் மார்க்கமாக வஹி மூலம் பெற்றது இன்று நம்மிடையே குர்ஆனாக இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் அந்தக் குர்ஆனை செயல்படுத்திக் காட்டிய நடைமுறைகள் ஹதீஸ்களாக நம்மிடையே இருக்கின்றன. எனவே இன்று அல்லாஹ்வை நோக்கி நிற்போர் அவனது பேச்சான (கலாமான) குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை மட்டுமே நோக்கி நிற்பார்கள். வெறும் யூகங்களையும் கற்பனைகளையும் மார்க்கத்தில் நுழைக்கமாட்டார்கள்.

       என்னையே நோக்கி நிற்போரின் வழி 31:15 என்று அல்லாஹ் குறிப்பிடுவது குர்ஆன், ஹதீஸ் மட்டுமே. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாதது, மனித கற்பனையால் யூகத்தால் உருவானது ஒரு போதும் மார்க்கமாகாது. எனவே, குர்ஆன் ஹதீஸில் இருந்து யார் சொன்னாலும் அதுவே என்னை நோக்கி நிற்போரின் வழி – அந்த வழியைப் பின்பற்று, குர்ஆன் ஹதீஸைப் பின்பற்று என்றே அல்லாஹ் கூறுகிறான்.

Leave a Comment

Previous post:

Next post: