மனிதன் சிந்தனை செய்யக்கூடியவன். சிந்தித்து தெளிவு பெறாத எவரும் முழு மனிதராகார். இப்புவியையும் விண்ணையையும் படைத்து அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் படைத்து பயன் பெற மனிதனையும் படைத்து அம்மனிதனுக்கு தலையாய முதன்மையான கடமையான உணர்வுடன் தன்னை வணங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றான் எல்லாம் வல்ல இறைவன்!
பூந்தோட்டம் ஒன்றுக்கு செல்லுகின்ற ஒருவன் அம்மலர்களைப் பார்த்து பரவசப்பட்டு பூக்கள் சிலவற்றை பறித்துக்கொண்டு வந்து விட்டால் அவனுடைய பகுத்தறிவால் எப்பயனும் அவனுக்கு இல்லை. மாறாக இம்மலர்களுக்கு இத்தனை வண்ணங்களை கொடுத்துள்ள இறைவனின் ஆற்றல்தான் என்னே! என்று வியந்து ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று புகழ்ந்து நன்றியுணர்வை வெளிப்படுத்தினால் பகுத்தறிவால் பெற்ற பயன் அவனுக்கு ஏற்படும்.
ஏதோ மனிதனாக பிறந்து விட்டோம்; உயிர் உள்ளவரை வாழ்ந்தே ஆகவேண்டும்; அதற்காக பொருளீட்ட வேண்டும்; மணமுடிக்க வேண்டும். இவ்விரண்டுக்கும் சமுதாயத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் சிந்திக்காமல் மார்க்கம் கட்டளையிடாத மூதாதையர்கள், ஹஜ்ரத்மார்களின் சொல்லாகிய மெளலூது, மீலாது பாத்திஹாக்களை மார்க்கமாக கொள்கின்றனர்.
இம்மாதிரி சிந்திக்காமல் செயல்படும் சகோதர்களைப் பார்த்து நீ மார்க்கப்படி நடக்காமல் மூடத்தனமாக செயல்படுகின்றாயே! அல்லாஹ்வின் கட்டளையையும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும் கவனித்தாயா? என்று கேட்டால், அதற்குத்தான் ஹஜ்ரத் இருக்கின்றாரே அவர் சொல்லாததை நீ ஏன் சொல்கின்றாய்? என்று நம்மைப் பார்த்து கேட்கின்றனர். நபிவழி அதுவே நல்வழி என்று வாயளவில் கூறுகின்றவர்கள் போர்டு எழுதி பள்ளிவாசலில் தொங்க விடுபவர்கள் ‘எது நபிவழி’ என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பெயருக்கு முஸ்லிம்களாக இருப்பவர்கள் வாயிலிருந்து வருகின்றவைகள் சிந்தனையுடன் கூடியவை அல்ல. ‘ஷரீஅத்’ நமது உயிர் ‘ஷரீஅத்படி நடப்போம்’ என்று கோஷம் போடுபவர்கள் ‘ஷரீஅத்’ என்பது எது? இறைக் கட்டளைகள் என்ன சொல்கின்றது? நபி (ஸல்) அவர்கள் கூறுவது யாது? என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் விசுவாசம் கொள்ளவில்லையோ நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 48:13)
நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ, அதுதான் நமக்கு முன்மாதிரி! மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய எந்த ஒரு சிறு செயலுக்கும் முன்மாதிரி இல்லாமல் இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் நடந்து காட்டுவது நபிவழி அன்று! மாறாக உண்மையான நம்பகமான நபிவழிகளை, நபிகளார் தம்வாழ்வு வாக்குகளிலிருந்து நீங்கள் அறிந்து நடப்பதுதான் மார்க்கத்தை புரிந்து செயல்படுவதாகும்.
காலங்காலமாக நடந்துவரும் செயல்கள் எல்லாம் நேரானவை ஆகா! எது நேரானவை என்று விளங்கிச் செயல்படுவதே மனித பகுத்தறிவுக்கு உகந்ததாகும். நபி(ஸல்) அவர்கள் குறைஷிக் காபிர்களைத் திருத்தும் போது ‘எங்கள் மூதாதையர்கள் செய்து வந்தவைகளைத் தானே செய்கின்றோம் அவர்கள் அறிவீனர்களா?’ என்று கேட்டனர்; அவர்கள் வினவியது நியாயம்தான் என்று, அன்று நபி(ஸல்) அவர்கள் சும்மா இருந்து விட்டால் இன்று நீங்களும், நாங்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருப்போம்? அன்று அவர்கள் கூறியதையே இன்றைக்கு நீங்களும் கூறுகின்றீர்கள்; ‘இத்தனை காலமாக உலமாக்கள் சொல்லாததை இவர்கள் சொல்ல வந்துவிட்டார்கள்’ என்றும் கூறுகிறார்கள். உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்று மார்க்கத்தை முறையாக விளங்கியவர்கள் கேட்டால் விழி பிதுங்குகின்றனர்.
அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கக் கூடிய பகுத்தறிவைப் பயன்படுத்தி எது உண்மையான நபிவழி என்பதை விளங்கி, செயல்பட்டு இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று வாழ்வோமாக! ஆமீன்
புலவர் செ.ஜஃபர் அலீ,பி,லிட்., கும்பகோணம்
{ 1 comment… read it below or add one }
Alhamdulillah.