நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)
எல்லாம் வல்ல அல்லாஹ், தெள்ளத் தெளிவாகத் இவ்வாறு எச்சரிக்கின்றான்; இந்த எச்சரிக்கை மார்க்கமறியாத சாமான்யர்களுக்கு அன்று மார்க்கத்தை அறிந்து கொண்டவர்களுக்கு! குறிப்பாக ஆலிம் என்றும் மெளலவி என்றும் கூறித் திரிபவர்களுக்கு இந்த எச்சரிக்கை நூற்றுக்கு நூறு பொருந்தும்.
அதே நேரத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது; மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் இல்லை. அறிந்து கொண்டே மெய்யுடன் பொய்யைக் கலந்தும் உண்மையை மறைக்கவும் செய்கின்றனர்.
இவர்கள் தம் வயிற்றுக் பிழைப்புக்காக, பெரியதொரு துரோகத்தை மார்க்கத்தின் பெயரால் மக்களுக்குச் செய்கின்றனர். தம் கற்பனையான விளக்கத்தை, குர்ஆன் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களுக்கும் அளிக்கின்றனர். தம்மனம் போன போக்கில் சில நூல்களை எழுதுகின்றனர். குப்பைத் தொட்டிகளுக்குப் போக வேண்டியவை, மார்க்கத்தின் பெயரால், அல்லாஹ்வின் இல்லங்களிலே தஞ்சம் புகுகின்றன. மார்க்கம் அறியாத அப்பாவிகள் அவற்றை இஸ்லாமிய நூல்கள் எனச் சொல்கின்றனர். அவற்றை உண்மை என நம்புகின்றனர். இசை கச்சேரிகளுக்கு இஸ்லாமிய இன்னிசை விருந்து என்று பெயர் சூட்டுபவர்கள்தானே இவர்கள்?
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கைகளாலேயே நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்கு கேடுதான்! (அல்குர்ஆன்2:79)
இந்த அற்பகிரயர்கள், தம் நூல்களைப் பரப்புவதன் மூலம், முழுமையான அல்லாஹ்வின் வேதத்தையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் முறைகள், அங்கீகாரங்கள், வாய்மொழிகள் இவற்றையும் மக்களுக்கு மறைத்துவிட நாடுகின்றனர்.
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதை போல (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.( அல்குர்ஆன்2:146)
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ உறுதியாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்2:159)
மாயையிலும், பொய்மையிலும், கவர்ச்சியிலும் மனிதன் தன் இதயத்தைப் பறி கொடுக்கிறான். பறிகொடுத்து பறிகொடுத்து பலவீனமான இதயத்தையும் மனிதன் பெறுகின்றான். அவ்வாறு பலவீனமானவை தம் சொந்த இலாபங்களுக்காக மார்க்க வேடதாரி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனிடமே உங்கள் தேவைகளைக் கேட்டுபெறுங்கள் என்று அறிவுரை பகராமல் உங்களை பேய் பிடித்திருக்கின்றது; பிசாசு துரத்துகின்றது; ஷைத்தான் உங்களை ஆட்டி படைக்கின்றான்; எனவே ரூபாய் நூற்று ஒன்று தாருங்கள்; நான் நல்ல கனமான தாயத்து ஒன்று செய்து தருகின்றேன்; எந்த கெட்ட ஷைத்தானும் உங்களை நெருங்காது என்று கூறி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்க வழிப்பறிக் கொள்ளைக்காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கின்றனர்.
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறுதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.( அல்குர்ஆன் 2:174)
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலுருந்து (மக்களைத்) தடுக்கின்றார்கள். உறுதியாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)
எனவே, இறையடிமைச் சகோதரர்களே! இத்தகைய வேடதாரிகளை மக்களூக்கு இனங் காட்டுவதுடன், நாமும் நம்முடைய ஈமானைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனிடமே நம் தேவைகளுக்காகக் கையேந்துவோம்! எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனையே வழிபட்டு, அவனிடமே உதவி தேடக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக! (ஆமின்)
புலவர் செ.ஜஃபர் அலீ
{ 4 comments… read them below or add one }
Masha allah very very nice article
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆம், உண்மைதான் சில படித்த உலமாக்கள் தங்களை பாரிய ஆலிம்கள் என , அப்பாவி மக்களுக்கு இனம் கட்டிக்கொண்டு உண்மையை மறைத்து ஆதாரமற்ற ஹதீஸ்களை பரப்பி வருகின்றனர் . அல்லா இவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக .
Allah Avargalukku Hidayah alikkatumaaga.
Allahvidam Athigam Athigam pavamannippu Thedikkollungal.
Alhamdulillah. Excellent topic, excellent explanation. Most important subjects for alim and ulamas.