“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?”
படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் மான்பு மிக்கோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு பரிசுத்த குர்ஆனில் குறிப்பிடும்போது;
இன்னும் (உலர்ந்து, வளைந்த,) பழைய, பேரீச்சை மரத்தின் (காய்ந்து வளைந்துபோன) மட்டையைப்போல் ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)
என்பதாகச் சொல்கின்றான். இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “அல்உர்ஜூனில் கதீம்” எனும் சொற்றொடர் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது; இதில் “உர்ஜூன்” எனும் சொல்;
பேரீச்சை மரத்தின் கிளையின் (ஓலையின்) அடிப்பகுதியைக் குறிக்கும், என்றும்.
நன்கு காய்ந்து வளைந்த நாட்பட்ட ஒரு பேரீச்சங்குலையின் தண்டையே இச்சொற்றொடர் குறிக்கிறது என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும்.
“அல்உர்ஜூனில் கதீம்” என்பதற்கு. “காய்ந்த பேரீச்சம் மரத்தின் கிளை (ஓலையின் காய்ந்த தண்டு) என்பதாக முஜாஹித் (ரஹ்) அவர்களும். பொருள் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 7, பக்கம், 653) ஆக அன்று இருந்த எழுத வாசிக்கத் தெரியாத உம்மிகளான நபித்தோழர்களும் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமான சிறந்த உதாரணத்தையே அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான்.
குறிப்பாக; “அல்உர்ஜூனில் கதீம்” என்பது எந்த நாளுக்கான பிறை ?”
● ஒரு மாதம் என்பது குறைந்த பட்சம் 29, நாட்களும் கூடிய பட்சம் 30, நாட்களுமாகும். (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அபூ ஹுரைரா (ரலி) உம்மு சலமா (ரலி) அனஸ் (ரலி) புகாரி – 1907–1911, ) என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கு ஏற்ப;
கூடியபட்சம் முப்பது நாட்களைக் கொண்ட மாதமாக இருந்தால் 29, ஆவது நாளும். குறைந்தபட்சமாக 29, நாட்களைக் கொண்ட மாதமாக இருந்தால், 28, ஆவது நாளும் அதிகாலை வேளையில் சூரியன் உதிப்பதற்கு சுமார் 46, நிமிடங்களுக்கு முன்னர் கிழக்குத் திசையில், (91:01, 02,) அதி நவீன தூரநோக்குக் கருவிகளின் துணை எதுவுமின்றி இயல்பாகவே மனிதப் புறக்கண்களுக்குப் புலப்படும்படியான அம்மாதத்துப் பிறையின் கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான தோற்றமாக அதிகாலையில் உதிப்பதே “அல்உர்ஜூனில் கதீம்” என்பதாகும்.
“உர்ஜூனில் கதீமைப் பார்ப்பது குறித்து மார்க்க ஆதாரம் என்ன ?”
● உயர்ந்தோனாகிய அல்லாஹ்; பால்வெளி மண்டலமான, பேரண்டத்தில் உள்ள சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், கோள்கள், விண்மீன்கள்,,, போன்ற அற்புதப் படைப்aபுகளைப் பற்றி; அவை படைக்கப்பட்டுள்ள விதம், அவற்றின் பிரமாண்டம், அழகு, அவற்றின் நெறிபிறழாத அற்புத இயக்கம், வரைமுறைக்குக் கட்டுப்பட்டு அவை சுழன்று வரும் பாங்கு, ஆகியவற்றை அறிவியல் ரீதியாக, ஆராய்ந்து, ஆயந்து, பார்குமாறு நமக்குக் கட்டளை இடுகையில்.
● (நபியே! அவர்களிடம்) “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்” எனக் கூறுவீராக ! எனினும் ஈமான் கொள்ளாதவர்களான சமூகத்தாருக்கு (நம்முடைய) அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் யாதொரு பயனுமளிக்கமாட்டா (10:101) என்றும்
● அவனே சூரியனை ஒளிவீசக்கூடியதாகவும் சந்திரனை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் அவனே ஆக்கியுள்ளான். நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) காலக்கணக்கினையும் அறிந்துகொள்வதற்காக (ச் சந்திரனுக்குப்) பல படித்தரங்களை யும் உண்டாக்கினான் தக்க காரணங்களின்றி அல்லாஹ் இவற்றைப்படைக்கவில்லை அறிவுள்ள மக்களுக்குத் தனது அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (10:05 , 17:12 ,06:96 ,11:05) என்றும்;
● (நபியே!) பிறைகளைப்பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள், அவை மக்க (ளின் பணிகளுக்காகவும், இதர மார்க்கக் கடமைக) ளுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள் (CALENDAR) என்று நீர் கூறுவீராக”(02:189) என்றும்;
● ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு செய்தோம்) (17:12) என்றும்;
● பிறைகளை மக்களுக்குக் (CALENDAR) காலம் காட்டுபவைகளாக அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் இப்னு உமர் (ரலி) ஹாகிம் தஃப்சீர் இப்னு கஸீர் 1:பக்கம் 595) என்றும் பொதுவாகவும், மேலும்;
☪ இன்னும் (உலர்ந்து, வளைந்த,) பழைய, பேரீச்சை மரத்தின் (காய்ந்து வளைந்துபோன) மட்டையைப்போல் ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39) என்றும்;
☪ ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்துகொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் ஷாஃஅபான் மாதத்தின் நாட்களை மட்டும் (குறிப்பாகக் கவனித்துக் ) கணக்கிடக் கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படிக் (குறிப்பாக அவர்கள் ) கணக்கிடவில்லை. பின்னர் அவர்கள்மீது மறைக்கப்படும்போது அதை அவர்கள் முப்பதாவது நாள் என்று எண்ணிக் கொள்வார்கள். பிறகு (ரமழானில்) நோன்பு வைப்பார்கள். ( ஆயிஷா (ரலி) அபூதாவூத் -1993, அஹ்மத்,) என்றும்;
☪ ரமழானின் ஆரம்பத்தை(ச் சரியாக)அறிந்துகொள்ள “ஷாஃஅபான் “ (மாதப்) பிறைகளைக் (கவனித்துக்) கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா ( ரலி) திர்மிதி -687, அஹ்மத்) என்றும்;
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது அதை நீங்கள் முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் -இப்னு உமர் (ரலி) அவர்கள் புகாரி -1823 , முஸ்லிம் -2551, அஹ்மத் -9641) என்றும்;
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது புலப்படாத போது எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள் அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் -2567) என்றும்;
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக்கொள்ளுங்கள் ( இப்னு உமர் (ரலி) அவர்கள் புகாரி -1906,முஸ்லிம் -1865, இப்னு ஹுஸைமா,) என்றும்; அல்லாஹ்வும் அவனுடையதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் “குறிப்பாகவும்” சொல்லியிருக்கின்ற அடிப்படையில்;
புறக்கண்களாலும், கணக்கீட்டினாலும், தகவல்களினாலும், “உர்ஜூனில் கதீமை” பார்ப்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், கொண்ட நபிவழியாகவும், இயற்கை மரபாகவும் இருக்கின்றது. (CALENDAR -நாட்காட்டி-) என்று சொன்னாலே அது தினமும் பார்க்கப்பட வேண்டியதுதானே; அதிலே இதுவும் குறிப்பாக ஒரு நாளைக்குரிய படித்தரம் தானே; அதனால்தான் இன்றைக்கும் பூர்வீக அரபிகள் அவர்களது நாடுகளில் இந்த “உர்ஜூனில் கதீமை” பார்த்து புதிய மாதங்களின் ஆரம்பத்தை இலகுவாக அறிந்து செயல்ப்பட்டு வரும் பழக்கத்தைக் கைக்கொண்டு வருகின்றார்கள் என்பதை அப்பிரதேசங்களில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், தெரியும்.
குறிப்பாக; “அல்உர்ஜூனில் கதீம்” என்பது எந்த நேரத்தில் உதிக்கும் ?”
நிச்சயமாக இதற்கென்று உதிப்பதற்குக் குறிப்பாக ஒரு நேரம் இருக்கிறது.
“உர்ஜூனில் கதீம்” எனும் கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமானது சூரியன் உதிப்பதற்கு சற்று முன்னரான சுமார் நாற்பது நிமிடங்களுக்கு முன்னர் உதிப்பதாகும். மாறாக; அதில் இரட்டிப்பான நேர அளவில் எண்பது நிமிடங்களுக்கு முன்னர் உதிப்பது “உர்ஜூனில் கதீம்” அல்ல. இன்னும் புரியும்படி சொல்வதானால் “உர்ஜூனில் கதீம்” உதித்து ஒளிரும் அற்புத காட்சியானது சுமார் இருபது, நிமிடங்களுக்கு மாத்திரமே தெளிவாகப் பார்க்க முடியும். அதற்குமேல் காண்பது கடினம் காரணம் அதனைப் பின்தொடர்ந்து மிக அன்மையில் வந்த சூரியனானது உதிக்க ஆரப்பித்தவுடன் சந்திரனின் ஒளி மங்கி மறைந்துவிடும். கிழக்குத் திசையில் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியுள்ளவர்களுக்குத் தெளிவாகப் பார்கும் வாய்ப்புக் கிடைக்கும். சில காலங்களில் தூரப்பிரதேச மக்களும் காணக்கூடியதாகவும் இருக்கும்.
உன்மையில் கிழக்குத்திசைக் கடற்கரைப் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு இது உதித்து வரும்போது காணும் “உர்ஜூனில் கதீமுடைய” அற்புதத் தோற்றம் அவர்களது உடலிலும், உள்ளத்திலும், இறைநம்பிக்கையிலும், ஏற்படுத்தும் அதிர்வும், இன்பமும், இருக்கிறதே; “சுப்ஹானல்லாஹ்” அனுபவப் பட்டவர்களுக்கே அந்த இன்ப உணர்வு புரியும். அதனை எழுத்தில் வடிக்க முடியாது.
படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட; அம்மாதத்தின், கண்ணுக்குத் தெரியக்கூடிய, கடைசிப் படித்தரமான, நூலிழை போன்ற, அதன் மிகச்சிறிய இறுதித் தோற்றத்தைப் பார்கும்போது இதற்குப் பிறகும் நாளைக்கு இன்னுமொரு படித்தரம் உதித்துவர சந்தர்ப்பமே இல்லை, என்று உறுதியாகக் கூறிவிடுவார்கள்.
அப்படியாயின் அவர்களது பாணியில் சொல்வதானால், நாளைக்கு “அமாவாசை” எனும் புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்படும் “கும்ம” வுடைய மறைக்கப்படும் நாள். நாளைக்கு பிறை தெரியாது மாதத்தின் இறுதிநாள். என்பதாக முடிவு எடுத்துவிடுவார்கள். அப்படியாயின் நாளை மறுநாள் புதிய மாதத்தின் பிறை ஒன்று. அவ்வளவுதான்.
எத்தகைய இலகுவான, எளிய, வழிமுறை, பாருங்கள், இரண்டு நாட்களுக்கு முன்பே எவ்வித சந்தேகத்திற்கும் துளிகூட இடமில்லாது புதிய பிறையைத் தீர்மானிக்கும் வழிமுறையைத் தானே அல்லாஹ்வும், அல்லாஹ்வுடை தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். எனினும் அவர்களது சிறப்பான இந்த எளிய வழிமுறையைத் தவற விட்டதுதான் இன்று பிறை விஷயத்தில் ஏற்படுள்ள குளறுபடிகள் அனைத்துக்கும் காரணமாகும். இதுவே பேரூந்து வரும்போது அதற்கு முன்னே நின்று கை காட்டும் இயற்கையான முறையுமாகும். அதற்கு மாற்றமாக;
அதிகாலையில் கிழக்குத் திசையில் உதித்து சூரியனைப் பின்தொடர்ந்து வந்து (91:01, 02,) சுமார் பனிரெண்டு மணி நேரங்களைக் கடந்து சூரியன் மறைந்தவுடன் அதன் பின்னால் சஞ்சரித்துவந்த அன்றைய நாளின் பனிரெண்டு மணி நேரங்களைக் கடந்ததற்கான சாட்சியாவுள்ள முதலாவது பிறையைப் பார்த்து விட்டு ( “என்று நீங்கள் பிறை பார்க்கின்றீர்களோ அது அந்த நாளுக்குரியதே ஆகும்” (அடுத்த நாளுக்குரியதல்ல) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இப்னு அப்பாஸ் (ரலி) . ஸஹீஹ் முஸ்லிம் : 1984. 1885,) அத்தியாயம் : 13. நோன்பு,) எனும் இந்த அறிவிப்புக்கு மாற்றமாக அன்றைய நாளின் பிறையை அடுத்த நாளுக்கானதாக எடுப்பதானது பேரூந்தைப் போகவிட்டுப் பின்னால் கை காட்டுவது போன்றதாகும். எனவே;
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது அதை நீங்கள் முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் -இப்னு உமர் (ரலி) அவர்கள் புகாரி -1823 , முஸ்லிம் -2551, அஹ்மத் -9641,
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது புலப்படாத போது எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துங்கள் அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் -2567,
☪ பிறைகளைப் பார்த்து வாருங்கள் அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக்கொள்ளுங்கள் ( இப்னு உமர் (ரலி) அவர்கள் புகாரி -1906,முஸ்லிம் -1865, இப்னு ஹுஸைமா,) என்றெல்லாம் இறைதூதர் (ஸல்) அவர்கள் இலகுவான வழிமுறையைச் சொல்லியிருக்கும் போது ஏன் நாம் சிரமப்பட வேண்டும், பிறை விஷயத்தில் சின்னாபின்னமாகச் சிதறவேண்டும். கவலையாக உள்ளது.
ஆகவே! நாம் எல்லோருமே இந்த எளிமையான, இலகுவான, இயற்கையான, வழிமுறையைக் கையாண்டு பிரபஞ்ச அசைவுகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்ணாறக் கண்டு அதன் இனம்புரியாத இன்பத்தை உடலிலும், உள்ளத்திலும், சுமந்து இறைநம்பிகையிலும், தெளிவை ஏற்படுத்திப் பயணிப்போம் வாருங்கள். தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள் அடக்கத்துடன் ஏற்போம்.
● ஓர் இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ( அபூ ஹுரைரா (ரலி) புகாரி -6133,) கூறிய இழிநிலை இன்னும் நம்மக்குள் தொடர வேண்டாமே.
எஸ், எம், அமீர், நிந்தாவூர், இலங்கை, 0094776096957,