உண்மையான உளத்தூய்மையாளர்கள்

Post image for உண்மையான உளத்தூய்மையாளர்கள்

in பொதுவானவை

சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள்.  ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள்.  பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள்.  யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் வெளியே பொது மேடையில் பதவியை வெறுப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்; ஆனால் அப்பதவி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.  உள்ளேயும் வெளியேயும் தலமைப்பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.  தன் அளவில் அநீதமாக நடந்துக்கொண்டு பிறரிடம் நியாயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் தன்னைப்போல் யாரும் இல்லையென்றும் தான் பெரிய சாதனையாளன் என்றும் தான் புகழப்பட வேண்டும் என்று பிறரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள்.  புகழை விரும்பாதவர்களும் சாதனைகளை பட்டியலிடாதவர்களும் குறைவாகப்பேசி ஆக்கப்பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் அதிகப்படியான காரணங்களைக் கூறி பொருப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களைவிட முந்திக்கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் தமது கொள்கை கோட்பாட்டில் பிரச்சாரப் பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பார்கள்.  ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

சிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பார்கள். எவர் தமது செயல்களுக்கு மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிபலன்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.

மதரஸா தாருல் இல்ம்-சிங்கப்பூர்

 

{ 1 comment… read it below or add one }

Rafik ahamath April 29, 2012 at 4:40 pm

Your are providing good data…everything is good…:-)

Reply

Leave a Comment

Previous post:

Next post: