உணவு பானத்தில் ஊதுவதால் ஏற்படும் தீங்குகள்  

Post image for உணவு பானத்தில் ஊதுவதால் ஏற்படும் தீங்குகள்  

in அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மாநிர்ரஹீம்

 எஸ்.ஹலரத் அலி,  திருச்சி-7.

வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடும் மக்கள் அனைவரும், அந்த பிறந்த நாள் கேக்கில் மெழுகுதிரியை எரியவிட்டு ஊதி அணைப்பது சம்பிரதாயம்.பிறகு அந்தக் கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுப்பார்கள்.மனிதர்கள் சுவாசித்து வெளியிடும் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள்.நுண் கிருமிகள் இருப்பது அனைவரும் அறிந்த விடயமே! இருப்பினும் ஊதி அணைக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கில் ஏதேனும் நுண் கிருமிகள் கலந்துள்ளதா என்பதை அறிய ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.( Bacterial Transfer Associated with Blowing Out Candles on a Birthday Cake)

அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைகழக ஆய்வுக்குழுவினர்  இது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்தனர். (Clemson University, Clemson, SC 29634, USA).இம்மாதம் (ஆகஸ்ட். 3, 2017  ல்) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.காரணம்,வாயினால் ஊதி அணைக்கப்படாத கேக்கை விட,வாயினால் ஊதி  அணைக்கப்பட்ட கேக்கில் சுமார் 1400 % மடங்கு பாக்டீரியா கிருமிகள் கேக்கில் படிந்திருந்ததே! ஊதும் நபரின் மூச்சு குழாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் கேக்கில் கலந்து, அதை உண்ணும் பிற நபர்களுக்கு வியாதியை பரப்ப ஒரு காரணியாகிறது.

பிறந்த நாளில், கேக்கில் மெழுகுவர்த்தியை எரியவைத்து ஊதி அணைக்கும் வழக்கம் எப்போது ஏற்பட்டது என பார்க்கும் பொழுது, பண்டைய கிரேக்க “ஆர்டிமிஸ்”(Artemis) பெண் கடவுளுக்கு கேக்கில் மெழுகுதிரி ஏற்றி வழிபடும் வழக்கம் இருந்தது எனத் தெரிகிறது. இன்று எல்லா மாற்று மத மக்களும்  இந்த கலாச்சாரத்தை பின்பற்றி பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.மக்களுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா நுண்கிருமிகள் பரவுவதே (Bio-aerosols) காற்றில்தான்.

மனிதன் விடும் மூச்சுக் காற்றிலும், இரும்மும் போதும்,தும்மும் போதும் ஏராளமான கிருமிகள் படு வேகமாக காற்றில் விரைந்து பரவி பிற மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. குறிப்பாக “சார்ஸ்-SARS” (Severe acute respiratory syndrome) என்று அழைக்கப்படும் “மூச்சியக்க தொற்று நோய்” மற்றும் இன்ப்ளுன்சா (Influenza)  வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இவ்வாறே பரவுகின்றன.   

நோய்வாய்ப்பட்ட மனிதரின் மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும்  நீர்த்திவலைகள் எதிரிலிருக்கும் மனிதர்கள் மேல் படிவதன் மூலமாகவோ அல்லது நீர்த்திவலைகள் பட்ட இடத்தை தொடுவதன் மூலமாகவோ இக்கிருமிகள் நோய்த் தொற்றை பரப்புகின்றன. ஒரு மனிதர் வெளிவிடும் மூச்சக் காற்றில் சுமார் 693 to 6,293 CFU of bacteria/m3 பாக்டீரியாக்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள்.மேலும் ஒரு மனிதன் ஒரு மணி நேரத்தில் 37 மில்லியன் பாக்டீரிய ஜீன்களை வெளியேற்றுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பிறந்த நாள் கேக் மெழுகுதிரிகளை ஒரே மூச்சில் அணைப்பதற்கு, காற்றை அழுத்தத்துடன் ஊதும்போது அவரின் சுவாசக் குழாய்களில் தங்கியிருக்கும் கிருமிகள் அதிக அழுத்தத்துடன்  வெளியேறி கேக்கில் உள்ள ஐசிங்கில் படிகிறது.   

– JOURNAL OF FOOD RESEARCH.  –VOL.6, NO.4;2017.Published  by,  Canadian center  of science  and  education.

https://www.usatoday.com/story/news/world/2017/08/03/blowing-out-birthday-candles-increases-bacteria-cake-1-400/536178001/

இஸ்லாம் என்ன கூறுகிறது?

உணவுப்பொருளின் மீது ஊதுவதால் ஏற்படும் கிருமி தாக்குதல் குறித்து இன்றுதான்  நவீன அறிவியல் ஆய்வு செய்து அறிவித்துள்ளது ஆனால்,கிருமி, வைரஸ், நுண்ணுயிர்கள் என்றால் என்னவென்றே தெரியாத 1400  ஆண்டுகளுக்கு முன்பே,  மக்கள் நல் வாழ்விற்கான அறிவுறுத்தல்களை இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது.

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும்,ஊதிக் குடிப்பதையும் நபி (ஸல்)  அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு  அப்பாஸ் (ரலி),    ஆதாரம்:திர்மிதி, அபூ தாவூத், இப்னு மாஜா.

உங்களில்  ஒருவர் எதை அருந்தினாலும் அந்த பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட  வேண்டாம். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி),      ஆதாரம் : புகாரி.153  முஸ்லிம்,445.

தண்ணீரில் மூச்சு விட்டு குடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அபூசயீது(ரழி) அவர்கள் கலீபா மர்வான் அவர்களிடம்  சென்றனர். பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மர்வான் கேட்டார்.

ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.

உம் வாயை விட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கிவிடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும் என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்.

அறிவிப்பாளர்: அனஸ்(ரழி). நூல்:புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது பிஸ்மியும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் அல்ஹம்துலில்லாஹ் என்றும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினர்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ

எந்த நிலையிலும் குடிக்கும் பானத்தில் மூச்சு விடுவதையும்,ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்யக்காரணம், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவை தீங்கு விளைவிக்கும் என்பதை அல்லாஹ்வின் வழிகாட்டுதல்படி அறிந்ததால்தான்.நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே நன்மை எதில் உள்ளது,தீமை எதில் உள்ளது என்று அறிய முடியும்.

மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களிலிருந்து குடிக்கும் பானங்களில் ஊதிக் குடிக்கக் கூடாது என்று அறிய முடிகிறது. பானங்களின் அதிகமான சூட்டைக்
குறைப்பதற்காக, பானங்களை மற்றொரு பாத்திரத்தின் உதவியுடன் ஆற்றிக் குடிக்கலாம். அல்லது பானங்கள் உள்ள பாத்திரத்தைக் கையால் அசைத்து அசைத்து சூட்டைக் குறைத்துக் கொள்ளலாம். சூட்டைக் குறைப்பதற்காக வாயால் பானங்களில் ஊதக்கூடாது.

ஏன் ஊதக் கூடாது எனும் கேள்விக்கு..அன்றைய அறிவியலில் பதில்  இல்லை.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்று அப்படியே செயல்பட்டு சிறப்படைந்தவர்கள் நபித்தோழர்கள். இன்று அல்லாஹ்வின் அருட்பெரும் கிருபையால், அன்று தடுத்ததின் உண்மைக் காரணத்தை அல்லாஹ் இன்று அறிவியல் வளர்ச்சியின் மூலமாக தெளிவுபடுத்துகிறான்.

மூச்சுக் காற்றில் உள்ள பாக்டீரியா கிருமிகள் மூலம் நோய் பரவுவது மட்டுமல்ல.. மனிதன்  சுவாசிக்கும்போது உள்ளிழுக்கும் காற்று ஆக்சிஜனாகும்.வெளிவிடும் காற்றில் 5 % கார்பன் டை ஆக்சைடாக உள்ளது.இது ஊதிக் குடிக்கும் பானத்தில் கலந்து கார்போனிக் அமிலமாக மாறுகிறது. இந்த கார்போனிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது, நமது இரத்தத்தில் உள்ள அமில/கார PH சமநிலையை குலைத்து உடலுக்கு தீங்கிழைக்கிறது. இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். அல்லாஹ் மட்டுமே  அறிந்தவன்.  

நிச்சயமாக (இவ்வேதம்)  உண்மையானது தான் என்று அவர்களுக்கு  தெளிவாகும்  பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். அல் குர்ஆன்.  41;53                                    

 

Leave a Comment

Previous post:

Next post: