பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எஸ்.ஹலரத் .திருச்சி-7.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் உருவாகும் என்றார்.
இந்த அலைகள், தான் உருவான இடத்தை ஒட்டிய விண்வெளியையும் காலத்தையும் (Space and Time) சேர்த்து மடக்கி, அதன் உருவத்தையே சிதைக்கும் என்றார் அவர். இந்த சிதைவு அந்த இடத்துடன் நிற்காது, அது விண்வெளியின் பிற பகுதிகளுக்கும் அலைகளாக பரவும் என்றார். ஆனால், ஐன்ஸ்டீனின் இந்த கருத்தை உறுதி செய்ய முடியாமல் தவித்து வந்தது இயற்பியல் உலகம். அதேசமயம் நட்சத்திரங்களும் தங்கள் ஒளியை இழந்து மறையும் என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் அன்றே கூறியது சிந்திக்கத்தக்கது.
மாபெரும் நட்சத்திரங்கள் தங்கள் எரியும் ஆற்றலை இழந்து இறுதியில் கருந்துளைகளாக மாறும் மாபெரும் நிகழ்ச்சியை அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.
நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் (Black Hole) மீது நாம் சத்தியம் செய்கின்றோம். (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதை தெரிந்து கொள்வீர்கள். – அல் குர்ஆன்.56:75,76.
இவ்வாறான இரு (Binary Stars)நட்சத்திர கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது (Big Bang) பெருவெடிப்பு எனும் அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு,அவை ஈர்ப்பு அலைகளாக விண்வெளியில் பரவும்.இந்த ஈர்ப்பு அலைகள் சுருங்கி விரிவதன் மூலம் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஈர்ப்பு அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும் காலத்தையும் (Space & Time) உருவாக்குகின்றன. ஓசைமயமான இந்த ஈர்ப்பாற்றல் அலைகள் “பிரபஞ்சத்தின் ஒலித்தடங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 11,2016 அன்று, இயற்பியல் விஞ்ஞானிகள் ஈர்ப்பு அலைகளின் இருப்பை (existence of gravitational waves) உலகத்துக்கு அறிவித்தனர். இந்த கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் போற்றிக் கொண்டாடி வருகிறது. காரணம் 1916 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த தேடல், நூறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டுதான் முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் ஈர்ப்பு அலைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவியல் அறிஞர்களால் புகழப்படுகிறது. இந்த ஈர்ப்பு அலைகளின் விளைவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பொதுச்சார்பியல் கோட்பாடு அடிப்படையாக என்ன சொல்கிறது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுச்சார்பியல் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து “எந்த ஒரு பொருளும் (mass) தன்னை சுற்றியுள்ள காலவெளியை (space-time) வளைக்கிறது. அதிக நிறையுள்ள பொருள் (massive object) தன்னைச் சுற்றியுள்ள காலவெளியை (space-time) மிக அதிகமாக வளைக்கிறது” என்பதே நியூட்டன் ஈர்ப்பு விசைக் கோட்பாடு “எந்த இரு பொருளுக்கும் இடையில் ஈர்ப்பு விசை உள்ளது. அதனால்தான் மேலே எறியப்பட்ட கல் பூமியை நோக்கி திரும்ப வருகிறது. அதைப்போல நிலா பூமியை சுற்றி வருவதற்கும் இந்த பூமியின் ஈர்ப்பு விசைதான் காரணம்” என்று கூறுகிறது..
ஆனால் ஐன்ஸ்டீன் பொதுச்சார்பியல் கோட்பாடோ “நிலா பூமியை சுற்றி வரக் காரணம் பூமியை சுற்றி உள்ள வெளி (space) வளைந்துள்ளதால்தான் (space is curved). அதே மாதிரி மேலே எறியப்பட்ட பொருள் பூமியை நோக்கி வரக்காரணம் பூமியின் மிக அருகில் வெளி மிக அதிகமாக வளைந்துள்ளதால்தான். நிலா மிக தொலைவில் இருப்பதால் வளைவின் வலிமை இதை விட சற்று குறைவானதாக இருக்கிறது. அதனால்தான் அது நேரடியாக பூமியில் வந்து விழவில்லை” என்று விளக்குகிறது. இதன் மூலம் ஐன்ஸ்டீன் “ஈர்ப்புவிசை என்பதே காலவெளியின் வளைவுதான் (gravity is nothing but space-time curvature)” என்று சொன்னார்.
இப்போது நாம் கண்டுபிடித்த ஈர்ப்பு அலைகளை வெளியிட்ட ஈர்மை கருந்துளைகளில் ஒரு கருந்துளை 29 மடங்கு சூரியனின் நிறையும் (29 times of sun’s mass), இன்னொரு கருந்துளை 36 மடங்கு சூரியனின் நிறையும் கொண்டது. இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறியபின் அதன் நிறை 62 மடங்கு சூரியனின் நிறைதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரியனின் நிறை முழுவதும் ஈர்ப்பு அலைகளாக மாறி பிரபஞ்சத்தில் பரவியது. ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன (நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). அப்படி இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் பூமியை வந்தடைய எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட 130 கோடி ஒளியாண்டு வருடங்கள்.
மின்காந்த அலைகளின் கண்டுபிடிப்பு நமக்கு பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவியது போல இந்த ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு இது வரை அறிய முடியாத பிரபஞ்சத்தின் பல மர்மங்களை விளக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பால் இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது, இந்த அலைகள் சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம், கருத்துளைகளின் மோதலில் எழுந்த நம் காதுக்குக் கேட்காத ஈர்ப்பாற்றல் அலை ஓசையை நவீன கருவிகள் மூலம் பதிவு செய்துள்ளனர்.
கருந்துளைகள் உருவாக்கிய ஈர்ப்பலைகளின் இரைச்சல் ஒலி, விண்வெளி பெருவெளியில் தொடர்ந்து வருகிறது. 1400ஆண்டுகளுக்கு முன்பே, நபி (ஸல்) அவர்கள் வானத்தின் ஈர்ப்பு அலை இரைச்சலை கேட்டுள்ளார்கள்.
“ நிச்சயமாக! நீங்கள் பார்க்காத ஒன்றை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காத ஒன்றை நான் கேட்கிறேன்.வானம் இரைகிறது. அதற்கான தகுதியுடன் அது இரைகிறது. வான்வெளி எங்கும் மலக்குமார்கள் நிறைந்துள்ளார்கள். எந்தளவு என்றால் நான்கு விரற்கடை அளவு இடைவெளியிலும் ஒரு மலக்கு குனிந்து வணங்கியோ,அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யாமல் இல்லை.”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி). ஆதாரம்: அஹ்மது 5.173,திர்மிதீ 2312, இப்னு மாஜா.4190,அல் ஹாக்கிம்.2:510. ஷேக் அல்பானீ யின் –அஸ் ஸஹீஹா.1722.
( Verily! I see what you do not see, and I hear you do not hear. The heaven is creaking and it has every right to Creak, for there is no space in it the width of four fingers but there is an angel there, placing his forehead in prostration to Allah.)
இரண்டு பெரும் நட்சத்திரங்கள் ஒளி இழந்து பெரும் வேகத்தில் அதிக நிறையுடன் மோதும் போது ஈர்ப்பாற்றல் ஒலியானது எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய், ஒரு ஒட்டகத்தின் மீது பளு மிகுந்த சுமையை ஏற்றும்போது, அதை சுமக்க முடியாமல் அந்த ஒட்டகம் எழுப்பும் முனங்கல் ஒலி போன்று இருப்பதாக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
The heaven Atat ( creaking) and it has every right to creak.
And the Atit is the Sarir Ar-Rahl ( camel s creaking) Meaning, if there was a heavy load on top of the camel , you would hear to it a creaking sound due to heavy weight of the load.
வானத்தின் ஈர்ப்பலை இரைச்சலின் ஒலிப்பதிவு.
மேலும் அல்லாஹ்வின் ஏழு வானங்களிலும் வானவர்கள் நெருக்கமாக இருந்து அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவதையும் அறிய முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் “இஸ்ரா” என்ற விண்வெளி மிஹ்ராஜ் பயணத்தில், ஏழாம் வானத்தில், அங்கு,”பைத்துல் மஹ்மூர்” என்னும் வளமான இறையில்லம் எனக்கு காட்டப்பட்டது. நான் அதைக்குறித்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன், இதுதான் “அல் பைத்துல் மஹ்மூர்” ஆகும் இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால், திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்களின் கடைசியாக நுழைந்ததாகிவிடும்” என்று கூறினார்கள்.. -புஹாரி.3207.
அல்-தபரீ விரிவுரையில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், எல்லா வானங்களிலும் வானவர்கள் நிறைந்துள்ளனர், எந்தளவு என்றால் நான்கு விரற்கடை இடைவெளியிலும் ஒரு வானவர் நின்ற நிலையில் அல்லது குனிந்த நிலையில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து கொண்டிருப்பதாக கூறி இவ்வசனத்தை ஓதினார்கள்.
“(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்) குறிப்பிட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் ஒருவருமில்லை.” நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).”மேலும் நிச்சயமாக,நாங்கள் (அல்லாஹ்வை துதி செய்து) தஸ்பீஹ் செய்பவர்களாகவே இருக்கின்றோம்.” – அல் குர்ஆன். 37:164-167.
விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது காலம் சுருங்கும். இயற்பியல் கோட்பாடுகள் மூலம் காலப்பயணம் (Time Travel) சாத்தியம் என ஐன்ஸ்டீன் முதல் ஸ்டீபன் ஹாக்கிங் வரை பல அறிவியல் அறிஞர்களால் கூறப்பட்டிருந்தாலும், செயல்முறையில் இதனை இன்னும் சாத்தியப்படுத்தியதாக எந்த பதிவும் இல்லை. கால வெளியில் பயணம் செய்ய வேண்டுமென்றால்: ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பயணிக்க வேண்டும். அப்படி பயணம் செய்ய பயன்படும் அந்த பாதைகளை Worm Holes என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மனிதனால் போக முடியாத அளவில் காணப்படும் அந்த துளைகள், இந்த பேரண்டத்தில் பல கோடிக் கணக்கிலிருக்கின்றன
நபி (ஸல்) அவர்கள் விண்ணேற்றம் செய்த “இஸ்ரா’ மற்றும் “மிஹ்ராஜ்” பயணம் கூட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தை (Special Relativity Theory) அனுபவப்பூர்வமாக விளக்குகிறது. ஐன்ஸ்டின் கூறியது
இதுதான்.”ஒளியின் வேகத்தில் செல்லும்போது அளவில் சுருக்கம் ஏற்படும். எடைகூடும். காலம் சுருங்குதல்” போன்ற என்ற வினோதங்கள் நடைபெறும் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில், மக்காவிலிருந்து பைத்துல் முகத்திஸ் (ஜெருஸலம்) சென்று,அங்கிருந்து ஏழாம் வானம் வரை சென்று அல்லாஹ்விடம் உரையாடி கடமையான ஐவேளை தொழுகையை பெற்று வந்தார்கள்.நாம் பூமியில் கணக்கிடும் கால நேரத்தைக் கொண்டு இப்பயணத்தை விளக்கமுடியாத அளவில் இப்பயணம் ஒரு அற்புதமாக உள்ளது.மேலும் அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்,
நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.. – அல் குர்ஆன்.22:47.
அறுநூறு இறக்கைகள் கொண்ட, ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களுடன், ஒரு காலடி தூரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு பயணம் செய்யக்கூடிய “புராக்” என்ற வாகனத்தில் பயணிக்கும்போது வெளி-நேரம் (Space-Time) சுருங்கிவிடுவதால் ஓர் இரவில் நடந்த மிஹ்ராஜ் காலப்பயணம் (Time Travel) அறிவியல் ரீதியாகவே உண்மையாகிறது.
நமது கணக்குப்படி ஒளியின் வேகம் நொடிக்கு 30,00,00 K.M.(2,86282 மைல்).ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரீல்(அலை) அவர்களின் வேகமும்,புராக் வாகனத்தின் வேகமும் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.
சொர்க்கம், நரகம் உண்டா என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் அறிவியல் உலகில்,அவை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் கூறியதை இன்றைய அறிவியல் உலகமும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறுவது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் – கேன்ஸ்ரி 55 இ (Cancri 55 e).!சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும். குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது (Eerie composition)அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம் (Two faces or Hemispheres)உள்ளது. கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு ‘முகம்’ ஆனது கொதிக்கும் எரிமலைக்குழம்பால் மூடப்பட்டிருக்கிறது மற்றொரு முகமானது நிரந்திர இருளான நிலையில் (Perpetual state of darkness) இருக்கிறது.
சூரியனை நோக்கி உள்ள கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் பகுதியானது சுமார் 2,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது.
அது மட்டுமின்றி அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை (Hydrogen Cyanide) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பைபிள் விவிலிய விளக்கங்களின் படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஏற்று இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ..!
பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படிதான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ.
அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ, பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் (Spitzer Space Telescope) கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நிலவு பூமியோடு பூட்டப்பட்டுள்ளது போல, கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது சூரியனோடு பூட்டப்பட்டுள்ளது. எனவே தான் அக்கிரகத்தின் ஒரு பகுதியானது எப்போதுமே கொளுத்தும் சூரியனை எதிர்கொள்கிறது மறுபக்கம் நிரந்தரமாக இருளில் மூழ்கி கிடக்கிறது.
இவைகள் மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்ததற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இது போன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதனால்தான் இதை நரகம் என்று குறிப்பிடுகின்றனர்.
“ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள்.அப்போது அவர்கள், “இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?, என்று கேட்டார்கள்.நாங்கள், “அல்லாஹ்வும்,அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம்.
நபி (ஸல்) அவர்கள்,”இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்க்குள் தூக்கி எறியப்பட்ட கல்லாகும்.அது இந்த நேரம் வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்; அபூ ஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்.5466.
ஒளி ஆற்றல் மங்கி மறைந்து, கருந்துளைகளாக மாறும் நட்சத்திரங்களின் “கிறீச்” ஒலி பூமியை அடைய 130 கோடி ஒளியாண்டு ஆகிறது. நமது நட்சத்திரமான சூரியனிடமிருந்து ஒளி, பூமிக்கு வர எட்டு நிமிடங்களாகிறது. நரகத்தில் போடப்படும் கற்கள் அதன் அடி ஆழத்தை அடைய எழுபது வருடங்கள் தேவைபடுகிறது. அல்லாஹ்வின் அற்புதங்கள் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஆனால் அனைத்தும் உண்மையானவை.
ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் சொன்ன வான் வெளி ஈர்ப்பாற்றல் இரைச்சல் ஒலி அலையை,(Gravitational wave sound) இன்றைய இயற்பியல் விஞ்ஞானிகள் உண்மைப்படுத்தி விட்டார்கள்.! காலப்பயனத்தை (Time Travel) மிஹ்ராஜ் பயணம் மெய்ப்பிக்கிறது. நரகம் இருக்க வாய்ப்புள்ளது என அறிவியல் உலகம் கருதுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளினோம். அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.”
– அல் குர்ஆன்.38:29.
{ 2 comments… read them below or add one }
Masha Allah what an explanation,Allah is great.
ungalukku melum allah pala ariviyal visayangalai vilakkuvadarku ungal arivai visalapaduthuvanaga..