நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ, துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)
நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய இக்கால கட்டத்தில் முறையான மார்க்க அறிவு இல்லாத எத்தனையோ முஸ்லிம்கள் புரியும் மூடப் பழக்கங்களும், அனாச்சாரங்களும் நம்முடைய இறை நம்பிக்கையைத் தகர்த்து சின்னாபின்னப் படுத்துவதை கண்டு வருகிறோம்.
உதாரணமாக, உலக ஆதாயம் கருதி தமிழகம் முழுவதும் பரவலாக ஓதப்பட்டு வரும் மவ்லூது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள் இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவைகளை ஆராயும்போது முஸ்லிம் சகோதரர்கள் தம்மை அறியாமலேயே ஷைத்தானின் கோரப்பிடியில் சிக்கி ஈமானை இழக்கிறார்கள். இவ்வுலக தேவைகளையும், மறுஉலக தேவைகளையும் பூர்த்தி செய்து தருபவன் அல்லாஹ் ஒருவன்தான்.
ஒரு உண்மை முஸ்லிம் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய நல் அமல்களைச் செய்து அவனது திருப் பொருத்தத்தைப் பெருவதில்தான் கவனமாக இருப்பான். அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் ஏவியவற்றை எடுத்து நடந்து, தடுத்தவற்றை விட்டும் முழுமையாகத் தவிர்த்து நடப்பான். முஸ்லிம்களுக்கு இம்மை, மறுமை இரு உலக தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகமே இருக்க முடியாது.
அல்லாஹ்வின் மகத்தான பண்புகளை அவனது படைப்புகளுக்கு கொடுத்து இயற்றப்பட்ட கவிகளுக்கு மார்க்க அறிவு குறைந்த பொதுமக்கள் தான் பலியாகிறார்கள் என்றில்லை, கற்றறிந்த “மவ்லவிகளும்” இந்த ஷிர்க்கான கவிதைகளுக்கு துணைபோவதை நாம் சர்வ சாதரணமாகக் காண்கிறோம்.
மவ்லிதும், புர்தாவும் பகழ்பாக்கள் எனவே அதனை ஓதுவதில் தவறில்லை என்று மவ்லவிகள் கூறுகின்றனர். எந்த முஸ்லிமாவது தம் வீட்டில் ரசூல்(ஸல்) அவர்களது புகழ் பாடவேண்டும் என்ற நிய்ய(எண்ண)த்தில் தான் மவ்லிது, புர்தா ஓதுகிறாரா? இல்லை….. நிச்சயமக இல்லை. ரபிய்யுல் அவ்வல் 12 நாட்களிலும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் முறை வைத்து ஏற்பாடு செய்கிறார்களே, இது நபி(ஸல்) புகழ் பாடவா? (அது புகழே அல்ல என்பது வேறு விஷயம்)
தங்களுக்கு பரகத் வருவதற்கும், கஷ்டங்கள் நீங்குவதற்கும் தான் மவ்லிது, புர்தாக்களை ஓதி வருகிறார்கள். இந்த நிய்யத்து ஈமானையே பாழாக்கி விடும் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?
மேலும் வெள்ளி, திங்கள் கிழமை இரவுகளில் ஓதப்பட்டு வரும் புர்தா நிகழ்ச்சிகளில் வினோத வேடிக்கைகளை செய்து காட்டுகிறார்கள். புர்தா மஜ்லீஸ் நடைபெரும் ஊரில் பல குடும்பங்களிலிருந்து “பாட்டிலில் தண்னீரை ஊற்றி” அந்த சபையில் வைத்துவிடுவார்கள். புர்தாவை ஓதுபவர்கள் அனைவரும் அப்பாட்டிலில் ஊதி சப்ளை செய்யும் காட்சி ஈமானுள்ள முஸ்லிம்கள் வெட்கித் தலை குனியச் செய்யும் காட்சியாகும்.
தண்னீரை அருந்தும் முன்பு அதனை ஊதிக் குடிக்காதீர்கள் என்று சொன்ன நபி (ஸல்) அவர்களின் ஹதீதை மறந்துவிட்டார்கள் போலும்!
நபி (ஸல்) அவர்கள் தண்னீர் பாத்திரங்களில் மூச்சு விடப்படுவதையும் அல்லது அதில் ஊதப்படுவதையும் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)
ஆலிம்கள் குழப்பத்தில் இருந்தால்தானே தெளிவு பெருவதற்கு! சமீப காலங்களில் மவ்லிது, புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் வெளிவந்து உள்ளன. இவற்றை கவனமாக ஊன்றிப் படிக்கும் எண்ணற்ற முஸ்லிம்கள் தமது தவறிலிருந்து விலகி, தவ்பா கோருவதை பார்த்து வருகிறோம். ஆனால் மவ்லவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலர் தெளிவு பெறுவதைக் காண முடிவதில்லை. காரணம் அவர்கள் குழப்பத்தில் இருந்தால்தானே தெளிவு பெருவதற்கு! அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மவ்லிது புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் அனைத்துமே அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது என்றாலும் இந்த ஷிர்க், பித்அத்தான செயல்களுக்கு துணை போகக் காரணம்? அவர்கள் இந்த உலகத்தின் அற்ப சுகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அல்லாஹ் தன் திருமறையில் மிக அழகாக இதை விளக்குகிறான்.
“எனினும் நீங்களோ மறுமை சிறப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் நிலையில் (அதை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்” (அல்குர்ஆன் 87:16,17)
மவ்லிது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள், இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவை ஷிர்க், (இணை வைத்தல்) பித்அத்(புது வழி) என்பதை அறிந்தும் அதை விட்டும் விலக முடியாத இக்கட்டான மன நிலையில் இருக்கும் சில சகோதரர்களையும் பார்க்கிறோம். இவ்வளவு காலம் “நன்மைகள் வரும்” என்ற நிய்யத்தில் ஓதி வந்தவர்கள் இப்போது திடீரென்று நிறுத்திவிட்டால் “ஏதேனும் ஆபத்துக்கள்” வந்து விடுமோ, எதிர் பாராத கஷ்டத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி தொடர்ந்து ஓதி வருகிறார்கள். இத்தகைய எண்ணம் நமது ஈமானையே அழித்துவிடும் என்பதை கவனத்தில் வையுங்கள்!
நன்மையும், தீமையும் தருவது அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரணிக்கச் செய்வானாக! மேலும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவானாக!
அபூதஸ்னீம்
{ 1 comment… read it below or add one }
please i like to know about ஈமானும் அமலும் , பத விளக்கம் ,இடை தொடர்பு , குரான் ஹதீஸ் விளக்கம் to my study about Islam