இஸ்லாத்தில் சிறந்தது எது?

Post image for இஸ்லாத்தில் சிறந்தது எது?

in இஸ்லாம்,நபிமொழி

 ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’   என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற   முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி) ‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக்   கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும்   அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)   அறிவித்தார்.  (புஹாரி) ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’   என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம்   கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்” என அப்துல்லாஹ்   இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  (புஹாரி) ‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே   வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது   பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில்   உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்   சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில்   அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று   கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.   (புஹாரி)

 

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட)   கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும்   சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?’ என்று   கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, ‘அல்லாஹ்வின்   கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம்   மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்’ என்று கூறினார்கள். கேள்வி   கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்” என அபூ   மூஸா(ரலி) அறிவித்தார்.  (புஹாரி)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான்   கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில்   கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்”   என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர்.   எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான்   அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். (புஹாரி)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம்   எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும்,   வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில்   தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்   குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு;   இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய   பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்   கூறினார்கள். (புஹாரி)

 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
“செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும்   அவனுடைய தூதரையும் நம்புவது” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது)?’ எனக்   கேட்கப்பட்டபோது, ‘இறைவழியில் போர்புரிதல்” என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது?)’   எனக் கேட்கப்பட்டபோது ‘பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்” என்று பதிலளித்தார்கள். (புஹாரி)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது   எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று   கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு   தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)”   என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில்   சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன்.   நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.  (புஹாரி)

Leave a Comment

Previous post:

Next post: