உண்மை வெளிப்பட்டே தீரும்! இதனை உணர்ந்து கொண்டால் போதும்!

Post image for உண்மை வெளிப்பட்டே தீரும்! இதனை உணர்ந்து கொண்டால் போதும்!

in பொதுவானவை

குருடனும், பார்வையுடையோனும் சமமாக மாட்டார்கள். [அவ்வாறே] விசுவாசம் கொண்டு நற்செயல் புரிவோரும், [விசுவாசம் கொள்ளாது] பாவம் செய்வோரும் சமமாக மாட்டர்கள்.

நீங்கள் வெகு சொற்பமாகவே [இதனை கொண்டு] நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.

[விசராணைக்] காலம் [உறுதியாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை.எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் [இதனை] நம்புவது இல்லை. [அல் குர் ஆன் 40:58& 59]

உண்மை இஸ்லாம் எவருள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து அதனால் அவர் தெளிவடைகிறாரோ அவரே பார்வை உள்ளவர்.

ஊடுருவி புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவன் குருடனாவான்.

சிந்தித்துத் தெளிவது மனித பகுத்தத்றிவுக்கு மகுடமாகும். உண்மை எது ? பொய்மை எது ?

நன்மை எது ? தீமை எது ? இதைக் கூட உணராத மனித சமுதாயம் உறுதியாக இருக்கவியலாது.

ஆனால் , உண்மை என்று தெளிந்த பின்பும் ,அதைகொண்டு செயல் படத் துணியாதவர்கள் உலகில் பலருண்டு. நன்மை என்று உணர்ந்த பிறகும் அதை நாடாதவர் எண்ணிக்கையில் அடங்காதவர் ஆவார்,

நியாயத் தீர்ப்பு நாள் உறுதியாக உண்டு என்று தெளிவாக பகிரங்கமாக திருமறை அறிவித்த பிறகும்கூட அதை நம்பி இறையச்சம் கொள்ளாதவர்கள் நம்மிடம் வாழ்கின்றார்கள். அவர்களின் வழிதவறிய வாழ்க்கையே இதற்கு சான்றாக உள்ளது.

நம்பிக்கையற்றவர்களுக்கு, நம்பிக்கை ஊட்டுவது கடினம்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தின் வழி தங்களின் உல்லாச-ஆடம்பர மனித தன்மையற்ற பேய் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்கள், எங்கனம் உண்மையை உணர முடியும்.

[மனித] வாழ்க்கையை [எல்லாம் வல்ல இறைவனை அடி பணிந்துவணங்கி] வாழ்வதற்கே என்பதை உணர்ந்து கொள்பவர்கள் எத்தனை பேர்?

உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்பதில் சோதிக்கும் பொருட்டே அவன் வாழ்வையும், மரணத்தையும் படைத்திருக்கிறான்.அவன் [யாரையும்] மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன் அல்குர்ஆன் 67:20

[எனக்கு வழிபட்டு என்னை] வணங்குவதேயேன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை, அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் விரும்பவில்லை அன்றி [எனக்கு] ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறு விரும்பவில்லை.

[நபியே நீர் கூறும்] உறுதியாக அல்லாஹ்தான் [யாவரையும்] உணவளிப்போனும், அசைக்க முடியாத பல சாலியுமாவான் அல்குர்ஆன் 51:56-58

பொதுவாக மனித வாழ்வு ஆணவத்திற்க்கும், அவசரத்திற்க்கும் இடையே அலைமோதி கொண்டிருக்கிறது.

நான் தான் பொருள் ஈட்டுகிறேன்: என்னால் தான் பலரும் உண்டு உடுத்தி உறைகின்றனர்.

என்னுடைய சொந்த அறிவை கொண்டே பதவியை உயர்த்திக்கொண்டு உல்லாச வாழ்வுக்கு அடித்தளமிடுகிறேன். என்றேல்லாம் கூறித் திரிபவனாக மனிதன் வாழ்கிறான். மேலும் தன் எண்ணத்திற்க்கும் ,செயலுக்கும் தன்னம்பிக்கை என விளங்குகின்றான்.

தன்னை படைத்தவன் மீது அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை வைப்பதையே [ தன் + நம்பிக்கை ] தன்னம்பிக்கையாகும். இதை ஓத்துக்கொள்ள மறுக்கும் மனிதனை எங்கனம் விமர்சிப்பது.?

உயிரிணங்களில் மிகச் சிறிய எரும்பு கடிக்கும்போது துடிக்காமல் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?

தன் அழகைப் பற்றியும், பலத்தை பற்றியும் பெருமையடித்து கொள்ளும் மனித இனம் சிந்தித்து பார்த்ததுண்டா ?

அறிவு-ஆற்றல்- அருள்- பலம்- அழகு- அன்பு யாவற்றையும் முழுமையா தன்னகத்தே கொண்டவன் அல்லாஹ் அன்றோ ?

மலர்களுக்கு வண்ணங்களைத் தந்து மணத்தையும் தந்தவன் மாபெரியவன் அல்லனோ? மற்றவர்கள் செய்த உதவிக்கு, நன்றி பாராட்டதவன் ‘நன்றி கெட்டவன்’ அல்லன்! இறைப் படைப்புகளைக் கண்டும் அதன் மகத்துவத்தை உணர்ந்தும் எல்லாம் வல்லவனைப் பற்றி எண்ணிப்பார்க்காதவனே ‘நன்றி கெட்டவன்’ ஆவான். ‘அவர் அப்படிச் சொன்னார்; இவர் இப்படிச் சொல்கிறார்’ என்று சிந்திக்காமல் சொல்வது தான் மனித தர்மமா?

கொலைக் குற்றத்தை இன்ன மனிதன் தான் செய்தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும், அவனுக்காக வழக்காடி அவன் குற்றத்தை மறைத்து ‘நிரபராதி’ முலாம் பூசி விடுதலை வாங்கித்தருபவன் சிறந்த வழக்குரைஞராகலாம்; ஆனால் நீதியைக் கொன்று,உலகில் குற்றங்கள் பெருக காரணமாக இருப்பவன் அவ்வழக்குரைஞன் என்பது தெரிந்த-பகிரங்கமான உண்மை தானே!

காலங்காலமாக சமுதாயத்தில் ஊடுருவி விட்ட ‘ஷிர்க்-பிதத்’துகளுக்கு புது விளக்கம் கொடுத்து-உலகியல் எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசி, இறைமறை கூற்றுகளையும்-நபிமொழி போதனைகளையும் மக்களுக்கு மறைத்து விட்டால்’ நெடுங்காலம் இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வாழ்ந்துவிடுவார்களா? என்ன! போலிமார்க்க அறிஞர்களே இன்றைய சமுதாய அநீதிகளுக்குக் காரணம் என்பதை உணரலாம்.

உண்மை வெளிப்பட்டே தீரும்! இதனை உணர்ந்து கொண்டால் போதும்!

புலவர் செஜ்ஃபர் அலி பி லிட்

Comments on this entry are closed.

Previous post:

Next post: