மதப்புரோகிதரர்கள் இடைத்தரகர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கல்லையும், மண்ணையும், பறவைகளையும் அனைத்து படைப்புகளையும் தெய்வமாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அற்ப்பத்தனத்தை கண்டிக்கப் புறப்பட்ட இந்தப் பகுத்தறிவாளர்கள், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, பொய் கடவுள்களைக் கண்டிக்கப்போய், உண்மையான இறைவனையும் கண்டிக்கத் துணிந்து விட்டார்களே!
இது நியாயமா? கடவுளின் பெயரால் மதப்புரோகிதரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உண்மையான இறைவனை மறுக்கத்துணிந்த இந்த பகுத்தறிவாளர்கள் அரசியல் பெயரால் இன்றைய அரசியல்வாதிகள் அதைவிடக் கடுமையாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே அந்த அரசியலையும் மறுக்கத் துணியாதது ஏனோ? மாறாக இன்றைய சாக்கடை அரசியலில் பகுத்தறிவாளர்களும் முக்கிக்குளிப்பது ஏனோ? தங்களுக்குள்ள அற்ப அறிவைக் கொண்டு கண்முன்னால் காணும் அரசியலை அறிவதுபோல் கண் முன்னால் தெரியாத, அறிவுக்கு எட்டாத இறைவனை அறிந்து கொள்ளும் ஆழ்ந்தறிவு இல்லாதவர்களாக இருப்பதால்தானா?
கண்ணால் இரையைக் கண்டபின் அதற்காக ஓடிவரும் பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல், இறைவனையும் மறுமையையும் கண்ணால் கண்டபின் ஓடிவரும் பரிதாப நிலையிலா பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு படிக்க அனுப்புகிறார்கள். முதிர்ந்த அறிவைப் பெறாத பிள்ளைகளோ தங்கள் பிற்கால வாழ்க்கையை கண்ணால் காணாததால், அதன் முக்கியத்தை உணராது, பள்ளிக்கூட வாழ்க்கையின் அற்ப சுகங்களையும், உல்லாச ஊர் சுற்றல்களையும் பெரிதாக எண்ணிப் படிப்பைப் பாழாக்கி எதிர்கால வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்கின்றனர். மாணவர்கள் தங்கள் பகுத்தறிவு செய்த துரோகத்தைத் தங்களது பிற்கால வாழ்க்கையில் பட்டு அனுபவித்தபின் உணர்ந்து வேதனைப்படுகிறார்கள். நிதர்சனமாக கண்டுதான் செயல்படுவேன் என்ற பகுத்தறிவு வாதத்தின் நிலையும் இதுதான்.
முதிர்ச்சி பெறாத மாணவ அறிவை உடையவர்களாகத்தான் பகுத்தறிவாளர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா? மாணவன் பிற்கால வாழ்க்கையில் பகுத்தறிவின் துரோகத்தைப் பட்டு உணர்வதுபோல் இந்தப் பகுத்தறிவாளர்களும் மறுமையில் இறைவன் தனது தூதர்கள் மூலம் அறிவித்த உண்மையை ஏற்கும் பக்குவம் பகுத்தறிவுக்கு இல்லாமல் போனதே என்று எண்ணி, வேதனைப்பட இருக்கிறார்களா? அல்லது நாளை மறுமையில் பட்டபின் புத்திவரப்போகிறதா?
பல்லாயிரக்கணக்கான மனிதப்புனிதர்களான இறைத்தூதர்கள், இறைவனிடமிருந்து நேரடிச் செய்தி பெற்று இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று உலகிற்கு அறிவித்தது இந்தப் பகுத்தறிவாளர்களுக்குப் பொய்ச்செய்தியாம்; அறிவிலும், ஆற்றலிலும் குறைவான அரை வேக்காடுகள் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மனித அபிப்பிராயங்கள் பேருண்மைகளாம். மனிதனை தெய்வமாக்கும் மூடநம்பிக்கைக்கும், அதைப்பார்த்து ஏமாந்து படைத்த ஒரே இறைவனையே மறுக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?
இந்த பகுத்தறிவாளர்கள் பேரறிஞர்களாக மதிப்பவர்கள் ஆதம், நோவா, ஏப்ரஹாம், இஸ்ஹாக், இஸ்மாயீல், தாவூத், சுலைமான், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது இன்னும் இவர்கள் போன்ற எண்ணற்ற இறைத்தூதர்களை விட எந்த வகையில் சிறந்தவர்கள் என்பதை விளக்குவார்களா? இத்தனை ஆயிரக்கணக்கான மேதைகளின் தகவலுக்கு மாற்றமாக அப்படி ஒரு இறைவன் இல்லை, இறைவனைக் கற்பிப்பவன் முட்டாள், இறைவனை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று கற்பனையில் உளறிக்கொட்டிய அரைக்கிணறு தாண்டிகள் பெரும் பகுத்தறிவாளர்களா? பேரறிஞர்களா? இதுதான் பகுத்தறிவாதமா?
இந்தப் பகுத்தறிவாளர்கள் எதனைப் பகுத்தறிவு என்கிறார்கள்? புதிதாகக் கண்டு பிடித்துவிட்டார்களா? அல்லது இதுவும் காட்டுமிராண்டிப் பத்தாம் பசலிக் கொள்கைதானா என ஆராய்வோம். இறைவனை மறுக்கும் மூடக்கொள்கை காட்டுமிராண்டிகள் காலத்திலிருந்தே இருக்கிறது. இவர்களின் புதிய கண்டுபிடிப்போ, பகுத்தறிவில் பட்டதோ அல்ல. அதுதான் போகட்டும். இன்று இவர்கள் பெரிதாக பீற்றிக்கொள்ளும் தீண்டாமை மற்றும் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள், மூடச்சம்பிரதாயச் சடங்குகள், அனாச்சாரங்கள், நல்ல காலம், கெட்ட காலம், சகுனங்கள் இன்னும் இவை போன்றவற்றை எதிர்ப்பதாவது இவர்களது பகுத்தறிவில் உதித்ததா என்று ஆராய்ந்தால், அவையும் பத்தாம் பசலிக் காலத்திலிருந்தே இறைத்தூதர்கள் கடுமையாக எதிர்த்தவையே.
இறைத்தூதர் ஆதம்(அலை) அவர்களிலிருந்து நூஹ்(அலை) இறைத்தூதர் வரை ஆதத்தின் சந்ததிகள் கொலை, கொள்ளை, குடி சூது, விபச்சாரம் போன்ற பாவமான செயல்களைச் செய்தார்களேயல்லாமல் மனிதனை இறைவாக்கும் இணைவைக்கும் தவறைச் செய்யவில்லை. இறைவனை மறந்து காலத்தின் மீதும், நேரத்தின் மீதும், சகுனங்களின் மீதும், மற்றும் படைப்பினங்களின் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. தவறுகளைச் செய்யும் மனிதன், தான் செய்வது தவறுதான் என்பதை உணர்ந்திருந்ததால், தனது தவறை எண்ணி வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் நிலையிலேயே இருந்தான். இறைவனும் மனிதனை மன்னித்துக்கொண்டே இருந்தான்.
இது மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் ஷைத்தானுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. தான் கடும் முயற்சி செய்து மக்களைப் பாவம் செய்யவைத்தும், அவர்கள் பாவமன்னிப்பு கேட்டு மீண்டு விடுகிறார்களே என அங்கலாய்த்தான். எனவே மனிதனை புண்ணியமாக நல்ல காரியமாக நினைத்துப் பெரும்பாவத்தைச் செய்யவைக்க வழி என்ன என ஆராய்ந்தான்.
அதன் விளைவு, மனிதர்களிலே வாழ்ந்து மடியும் நல்லோர்களை சமூக சேவயாளர்களைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் விதைத்து, அவர்களுக்காகச் சமாதி கட்டி சிலை வடித்து மரியாதை என்ற பெயரால் ஆரம்பித்து, பின் அதனையே கடவுள் வணக்கமாக மாற்றிப் படைத்த இறைவனுக்கு இணை வைக்கும் கொடுமையை வேரூன்றச் செய்தான். மனித வர்க்கம் ஷைத்தானின் மாய வலையில் சிக்கிச் சீரழியலானது. அவர்கள் சிலை வணக்கத்தைக் கடவுள் வணக்கமாக, நண்மையானதாக பக்தியாக எண்ணிச் செய்ய ஆரம்பித்ததால் அது குறித்து வருந்தி பாவ மன்னிப்பு கேட்கும் நிலையையும் இழந்து விட்டார்கள். ஷைத்தான் தனது முயற்சியில் வெற்றியடைந்தான்.
ஷைத்தானை மறுக்கும் பகுத்தறிவாளர்களும் அவனது இந்த சூழ்ச்சிக்கு இரையாகி இருக்கிறார்களே. இன்று தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பெரியார் சிலை வடித்து அதற்கு மாலை மரியாதை செய்து வருவது எல்லை மீறி துதிபாடுவது இதனை நிரூபிக்கிறதே. சிலைக்கு படிமம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் அது மூட நம்பிக்கை ஆகாதா? இன்னும் 1000 வருடங்களுக்குப்பின் பெரியார் சிலையும், இன்று பகுத்தறிவாளர்கள் எள்ளி நகையாடும், செருப்பு மாலை அணிவித்து இழிவு படுத்தும் எண்ணற்ற கடவுள் சிலைகளோடு சங்கமமாகி விடாதா?
அப்படிப்பட்ட இழிசெயலையே மூட நம்பிக்கையையே பகுத்தறிவாளர்கள் தமிழமெங்கும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் இதனைப் பகுத்தறியும் தூர நோக்கு பகுத்தறிவாளர்களிடம் இல்லையே! முதிர்ச்சி அடையாத மாணவ பகுத்தறிவையே கொண்டிருக்கிறார்களே! இன்றைய பகுத்தறிவாளர்களின் தமிழகம் தழுவிய பெரியார் சிலை வடித்தலை ஆய்ந்துணர்பவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பெரியார் சிலையின் பரிணாம வளர்ச்சி எங்கு போய் முடியும் என்பதை உணரமுடியும்.
K.M.H