செங்கிஸ்கான்
அனபார்ந்த சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்!
தங்கள் தலைமை மீதும் இயக்கம் மீதும் கொண்ட அன்பால் எதிர் இயக்கத்தவரோடு வாதங்களில் ஈடுபட்டு நேற்றுவரை சகோதரத்துவத்துடன் பழகியவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கிறோம் !
நேற்றுவரை நேர்மையாளர்கள் என்று கூறியவர்களை இன்று நேர்மையற்றவர்கள் என்றும் நேற்றுவரை இயக்கத்திற்காக உழைத்தவர் என்று கூறிவிட்டு இவர் என்ன உழைத்தார் இயக்கத்துக்கு? நம் பல்லைக் குத்தி நாமே நுகர்ந்து பார்க்கும் செயலை செய்கிறோம்!
கட்டுக்கோப்பான இயக்கம் ஒழுக்கமிக்க இயக்கம் என்று கூறி விட்டு, கட்டுகோப்பு ஒழுக்கமெல்லாம் ஒன்றுமில்லை என மாற்றார் சிரிக்குமளவு மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொள்கிறோம்!
இயக்கத்துக்கு வக்கீலாக இருந்து வாதாடுவதால் எதிரிகளை உருவாக்கலாமே தவிர எந்தப் பயனுமில்லை ! மாறாக மன உளைச்சலும், நேர விரயமும் பகையும் தான் ஏற்படும் ! இதை நான் அனுபவப் பூர்வமாக கூறுகிறேன்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நான் விலகிய போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குறித்து இழிவு படுத்தும் நோக்கில் துவங்கிய ஒரு இணையத் தளத்துக்கு பதில் கொடுக்க எனது பெயரில் ஒரு இணையத் தளத்தை துவங்கி பதில் கொடுக்க ஆரம்பித்து அதனால் வெறுப்பும் மன உளைச்சலுமே மிச்சமானது ! பேசிச் சேர்த்த நமை எல்லாம் ஏசித் தீர்க்கும் நிலை ஏற்பட்டது !
பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து வெளியேறியதும் அந்த இணையத்தின் செயல் பாட்டை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தஃவா பணிகளில் கவனம் செலுத்தியதன் விளைவால் அந்த வெறுப்பு விலகி எல்லோருடனும் நேசம் விளைந்ததை பார்க்கிறேன்!
ஆகையால் இயக்கத்திற்கு வக்கீலாக இருப்பதை விட்டு இஸ்லாத்திற்கு வக்கீல் ஆகிப் பாருங்கள்! எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார்கள்! மனதிருப்தியும் நிம்மதியும் கிடைக்கும்! இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறலாம்! இதை நான் அனுபவித்து சொல்கிறேன் !
மேலும் சமிபத்தில் தஃவா களத்தில் ஒரு இந்துச் சகோதரர் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது! ” எனக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும் ஆனால் சமீபகாலமாக முஸ்லிகளின் முகநூல் நடவடிக்கைகளைப் பார்க்கும் போதும் தொலைக்காட்சிகளில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து பேசுவதைப் பார்க்கும் போதும் இஸ்லாம் இனிய மார்க்கம் தானா ? எனும் சந்தேகம் எழுகின்றது என்றார் !
நமது நடவடிக்கைகளை வைத்துதான் பிறமத மக்கள் இஸ்லாத்தை பார்ப்பார்கள் ! ஆகையால் பலரும் உள்ள சமூக ஊடகங்கள் எனும் பொதுவெளியில் நமது பிணக்குகளை பேசுவது தவிர்ப்போம்! முடியவில்லையெனில் தனியிழையில் விவாதிப்போம்! நம்மால் இஸ்லாத்துக்கு நல்ல பெயரைப் பெறத் தர முடியவில்லை என்றாலும் கெட்டபெயரை பெற்றுத் தராமல் இருப்போம்!
-செங்கிஸ்கான்
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல !
என்னையும் சேர்த்து பண்படுத்தும் நோக்கில்
{ 3 comments… read them below or add one }
நமது நடவடிக்கைகளை வைத்துதான் பிறமத மக்கள் இஸ்லாத்தை பார்ப்பார்கள் . இதனை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு கணமும் சிந்தித்து செயல் பட வேண்டும்.
All the living hoods are created as Muslims by The Great Allah. He has given the thinking power only to we human beings. Let us think of Allah and blindly obey his orders. We have not been given the sixth sense, to test the GREATEST. It is only to test ourselves. ” ALLAHU AKBAR “
அருமையான பதிவு.தெளிவாக கற்றவர்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசுவதால் அவர்கள் இயக்கத்திற்கான வக்கீல் இல்லை.தெருச் சண்டையிடும் மூன்றாம் தரத்தவர்……………….