இமாம்களின் வரலாறு
இமாம் புகாரீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர்.
இயற்பெயர் : முஹம்மத்
தந்தை பெயர் : இஸ்மாயீல்
பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த ஊரில் பிறந்ததால் புகாரீ (புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார்.
பிறந்த நாள் : ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13, வெள்ளிக்கிழமை
கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா, மதீனா, சிரியா, மிஸ்ர்
இமாம் புகாரியின் மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்
தற்போது நடைமுறையில் புகாரீ என்று குறிப்பிடப்படும் ஹதீஸ் நூலுக்கு இமாம் புகாரீ அவர்கள் வைத்த பெயர் : “ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் ஹதீஸி ரஸுலில்லாஹி வ ஸுனனிஹி வஅய்யாமிஹி” (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிமுறைகள் தொடர்பாக அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு) ஆனால் அந்தப் பெயர் மக்களிடம் சென்றடையவில்லை. புகாரி என்பதே அந்த நூலின் பெயராக ஆகி விட்டது.
இவர் தொகுத்த மற்ற நூல்கள் : அல்அதபுல் முஃப்ரத், அத்தாரிகுல் கபீர், அல்லுஃபவுஸ் ஸகீர் இன்னும் பல நூல்கள் தொகுத்துள்ளார்.
இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்புப் பெருநாள் அன்று சனிக்கிழமை
இமாம்களின் வரலாறு
இமாம் முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் பெற்றுள்ளார்.
இயற்பெயர் : முஸ்லிம்
தந்தை பெயர் : ஹஜ்ஜாஜ்
பிறந்த ஊர் : குராஸான் பகுதியில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர்
பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204 அல்லது ஹிஜ்ரீ 206
கற்றமுறை : இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்கலையில் வல்லுனராக ஆவதற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை அங்கு காணப்பட்டது. தனது 14 ஆம் வயதிலே இந்த அறிஞர்களிடமிருந்து கற்க ஆரம்பித்தார்கள்.
கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : நைசாபூரைச் சுற்றியுள்ள சில ஊர்கள், ரய், இராக்கில் உள்ள கூஃபா, பஸரா, மற்றும் பக்தாத், ஹிஜாஸ், ஷாம், மிஸ்ர்
இவருடைய ஆசிரியர்களில் சிலர் : இமாம் புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, யஹ்யப்னு மயீன், அபூபக்கர் பின் அபீ ஷய்பா
இவரது மாணவர்களில் சிலர் : முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப், அபூஹாதிம், இமாம் திர்மிதி, இப்னு ஹுஸைமா, மற்றும் இப்னு அபீ ஹாதம்
இறப்பு : இமாம் முஸ்லிம் அவர்கள் ஹிஜ்ரி 261 ஆம் ஆண்டு ரஜம் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று நைசாபூர் என்ற தமது ஊரிலே மரணம் அடைந்தார்கள்.
இமாம்களின் வரலாறு
இமாம் அஹ்மத்
இயற்பெயர் : அஹ்மத்
குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்
குலம் : இவரது தாயும் தந்தையும் அரபு குலத்தைச் சார்ந்தவர்கள்.
பிறப்பு : இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.
கல்வி : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக் கொண்ட பின் இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களைக் கற்றார்.
இவர் முதன் முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றார். இவர் காலத்தில் இருந்த பல கல்வித் துறைகளில் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் எழுதிய முஸ்னத் அஹ்மதும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு இவர் எழதிய நூலும் இவர் ஹதீஸ் கலையில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.
இவரது ஆசிரியர்கள் : இமாம் ஷாஃபி, அபூயூசுஃப் சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹுஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.
இவரது மாணவர்கள் : இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவூத், இமாம் நஸாயீ, ஆகியோர் இவரிடம் பயின்ற மாணவர்கள். இன்னும் அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் சாலிஹ் போன்றோரும் இவரிடம் பயின்ற மாணவர்கள்..
படைப்புகள் : இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிக் வல்மன்சூக், அஸ்ஸுஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸு சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகிய புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.
மரணம் : இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.
இமாம்களின் வரலாறு
இமாம் நஸாயீ
இயற்பெயர் : அஹ்மத்
குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்
தந்தை பெயர் : ஷுஐப்
பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.
கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.
இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து
மாணவர்கள்: இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.
ஆசிரியர்கள் : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.
படைப்புகள்: அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.
மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம் ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.