இந்திய ஜனநாயக தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குரிமை-ஓர் ஆய்வு

Post image for இந்திய ஜனநாயக தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குரிமை-ஓர் ஆய்வு

in பொதுவானவை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7.

எந்த ஒரு மதத்துக்காரனும், தான் பிறந்த மண்ணை நேசிக்கிறான். பிறந்த மண்ணை நேசிப்பது மனிதனிடம் உள்ள இயற்கையான உணர்வு. தேசப்பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்த மானிடப் பண்பு. நபி(ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். ஆனால் மக்காவாசிகளின் எல்லை மீறிய கொடுமைகள்; நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட சோகம் கலந்த வார்த்தைகள் மக்கா மண்ணின் மீதுள்ள அவர்களது நேசத்திற்கு சான்றாக அமைந்தன.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி ‘மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்’ (முஸ்னத் அபூயஃலா).

நபி (ஸல்) அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தோழர்களும் பிறந்த மண்ணை நேசித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபின் அங்குள்ள இடத்தின் சுழல் ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சலில் விழுந்த அபூபக்கர் சித்திக்(ரலி),  பிலால்(ரலி) போன்றவர்கள்  பிறந்த மண்ணை நினைத்து புலம்பிய கவிதைகள் பிரச்சித்தமானது.

‘இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற்றரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் வரக் கூடாதா?; மஜன்னாவின் (மக்காவின்; ஒரு இடம்) நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா? ஷாமா, துபைல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? என பிலால் தனது தேச உணர்வின் மன உலைச்சலை கவியாக பாடியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்:புகாரி.1889, 3926.

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளத்தையும், மார்க்கத்தையும் அடையாளப்படுத்துவதிலும் நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதிலும் தான் கவனம் செலுத்துகின்றனர். மாற்றமாக, நாட்டின் தேசிய நலனில் அக்கறை காட்டுவது குறைவு என்ற மனப்பாங்கே பெரும்பான்மை சமூகத்திடம் பொதுவாகக் காண முடிகிறது. ஆனால்  நபி (ஸல்) சிறுபான்மை சமூகமாக மக்காவில் வாழும் போது மக்காவை அதிகம் நேசித்திருக்கின்றார்கள் என்பதை பல ஹதீஸ்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

நாட்டுப் பற்று, தேசிய உணர்வு என்பது ஒரு மனிதன் தனது பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிட மாட்டாது. அதற்கு அப்பால் அவன் தன் நாட்டு மக்களை நேசிப்பான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று.

தேசப்பற்றுள்ள ஒரு குடிமகன் நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் விடுதலைக்காக போராடுவது உண்மையான நாட்டுப் பற்றாகும். தேசப் பற்று குறித்த அல் குர்ஆனிய சிந்தனையும் இதுவே.

எனவே ஒரு முஸ்லிம் தனது தேசத்தை சார்ந்து நிற்றல் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக புரிந்து கொள்வது பல்லின சமூகத்தில் இணங்கி வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும். எனவே இந்தப் பின்ணணியில் இந்தியப் சூழலில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையான நாம் தேசத்தை கட்டியெழுப்புவதில் உண்மையான உணர்வோடு பங்களிப்பு செய்வது ஒரு தார்மீகக் கடமையாகும்.

நாட்டு மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேச விவகாரத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பு, வாக்குரிமை என்ற வடிவத்தில் நமக்கு கிடைத்துள்ளது. முஸ்லிம் அல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் அதற்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய  வாக்களிப்பதற்கும் இஸ்லாம் கூறும் சட்ட அடிப்படை சான்றுகளைப்  பார்ப்போம்.

இஸ்லாத்தின் பார்வையில் வாக்குரிமை

தேர்தலில் வாக்களிப்பது என்பதன் பொருள் குறித்த ஒரு நபரை மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் அல்லது சட்டசபைக்கு செல்வதற்கு தகுதியுள்ளவர் என்று சாட்சி சொல்வதாகும். நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதென்பது குறித்த வேட்பாளரின் திறமை, நேர்மை, நம்பகத்தன்மையில் அவர் மிகவும் பொருத்தமானவர் என்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர் என்றும் வாக்காளர் வழங்கும் சாட்சியாகும்.

தேச மற்றும் பொதுமக்கள்  நலன்கள் தேர்தல்களில் தங்கியிருப்பதால் வாக்குரிமையுள்ள சகலரும் தகுதியான வேட்பாளருக்கு சாட்சி பகர்வது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை என்றே இஸ்லாமிய சட்டவல்லுனர்கள் குறிப்பிடுவர். அதாவது தேசத்தின் பொது நலனைக் கருத்தில் கொண்டு சிறுபான்மையாக வாழும் குடிமகன் முஸ்லிம் அல்லாத ஒருவருக்காக வாக்களிப்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் கடமையாகும் என்ற தரத்தில் தான் நோக்கப்படும்.

காரணம் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள சாட்சி பகர்தல் என்ற வார்த்தையானது வாக்களித்தல் என்பதற்கு சமனானதே என இஸ்லாமிய சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்களிடம் கருத்தொற்றுமை நிலவுகிறது. தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான, சான்று அளிப்பதற்கான அதிகாரப்பூர்வமான  அழைப்பாகும். ‘சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது’ என அல்குர்ஆன்.2:282. கூறுவது கவனிக்கத்தக்கது.

அவ்வாறே வாக்குரிமையை பகிஷ்கரிப்பதும் மறைப்பதும் குற்றம் என்ற கருத்தை அல்குர்ஆன் மேலும் வலியுறுத்துகிறது. ‘சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தல் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன்.2:283) பாவத்திற்கு உள்ளாகும் இடமாக உள்ளம் குறிப்பிடப்பட்டுள்ளதானது இந்த பாவத்தின் கடுமையை எடுத்துக்காட்டப் போதுமாகும்.

வாக்காளர் தன் சார்பாக குரல் கொடுப்பதற்கும், உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேச நலன்களையும், மக்கள் நலன்களையும் பேணுவதற்கும்  ஒரு முகவரை அல்லது பிரதிநிதியை தெரிவு செய்கிறார் என்பது இதன் பொருள். இதுவும் வாக்குரிமை குறித்த சட்டபூர்வமான ஒரு பார்வைதான் என அறிஞர் பத்ஹி அபுல்வர்த் கூறியுள்ளார்கள். தேர்தல்களின் போது தகுதியான, மிதவாத சிந்தனைப் போக்கு கொண்ட அல்லது தீமைகளை குறைப்பதற்கு உதவுவார் என்று கருதப்படும் ஒருவருக்கு ஆதரவாக வாக்குரிமையை பயன்படுத்துவது கட்டாயக் கடமை எனவும் நியாயமான காரணமின்றி வாக்களிக்காமல் ஒதுங்குவது குற்றம் எனவும் பேரறிஞர் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இந்த பத்வா செல்லுபடியாகும். என அவர் மேலும் உறுதிப்படுத்தி குறிப்பிட்டுள்ளாரகள்.

இதே கருத்தை,அறிஞர்களான அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்பர், அறிஞர் ஸலாஹ் ஸுல்தான், கலாநிதி யூஸுப் கர்ளாவி போன்ற பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறே பல நாடுகளில் உள்ள உலமா சபை தீர்மானங்களும் வாக்குரிமையை பயன்படுத்துவது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கடமை என்று தெரிவித்துள்ளன.

தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்

தேசத்தின்  நலன்களை முன்னுரிமைப்படுத்தி தேர்தல் காலங்களில் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்துவது ஷரீஆவின் பார்வையில் வாஜிப் என்பதே இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் பலர் வெளியிட்டுள்ள தீர்ப்பாகும். சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிடுகிறார்.

காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும் என்ற அடிப்படையில் அதற்கு அவர் ஆதராரம் காட்டுகிறார். இவ்வாதாரத்தை அவர் விளக்கும் போது, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் எதிரிகளிடமிருந்து தங்களது உயிரை பாதுகாக்கும் வகையில் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்ற பல வரலாற்று சம்பவங்கள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை சரிதையில் உள்ளதை குறிப்பிடுகிறார்.

செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்துள்ள குறைஷிக் காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடை சமூகம் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு முழுமையான உயிர் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அந்த பாதுகாப்பு அறிவிப்பு ஒரு உடன்படிக்கையாகவே அன்று கருதப்பட்டது. அப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு யாரும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாது. யாராவது அதனை மீறி பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது உடன்படிக்கையை முறித்ததாகவே கருதப்பட்டது. அதற்காக அந்த கோத்திரமே போர் செய்ய களம் இறங்கிவிடுவர்.

அன்று ஜாஹிலிய்யா கால மரபில் இருந்த இந்த பாதுகாப்பு முறைமையை இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் தேவையான போது தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தினர். அது ஈமானனை பாதிக்கும் ஒரு விசயமாக கருதப்படவில்லை. மாறாக உலக விவகாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பயன்படுத்தியதாகவே கருதப்பட்டது. இம்மையின் நலன்களை அடைவிதில் ஒரு வழிமுறையாகவே அதனை நாம் காண்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது கூட, முஷ்ரிக்கான “முதுயிம் பின் அதி”யின் பாதுகாப்புடனேயே மக்கா திரும்பினார்கள். காரணம் நபிகளார் சுதந்திரமாக மக்கா திரும்ப முடியாத அளவிற்கு எதிர்ப்பும் கொலை அச்சுறுத்தலும் அன்று இருந்தது. எனவே உயிர் பாதுகாப்பு பெறாமல் மக்காவினுல் நுழைவது அழிவை தன் கையால் தேடிக்கொண்டதாவே அமையும் என்று கருதியே அன்றிருந்த பாதுகாப்பு மரபை நபிகாளர் தனக்கு சார்பாக பயன்படுத்த முனைந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முஷ்ரிகான முதுயின் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுஇமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் மக்காவில் நுழைந்தார்கள்.

அப்போது குறைஷித் தலைவன் அபூ ஸுப்யான் (அன்று இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்தவர், மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை தழுவினார்) எதிரிலே வந்து நீர் முஹம்மதின் பின்னால் அவரைத் தெடர்ந்து வருவது ஏன்? அவருக்கு நீ பாதுகாப்பு கொடுத்து வருகின்ற ஒருவாரா எனக் கேட்டான். நான் சும்மா வரவில்லை. முஹம்மதுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முதுஇம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஸுப்யானும் அங்கீகரித்தார். இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகள் ஸீராவில் அதிகமாகவே காணமுடியும்.

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான வழிகாட்டல்களாகும். அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது சத்தியத்தை உரைப்பதற்கான அல்லது தீமையை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமையை எதிர்ப்பதற்கான சாத்வீகமான போரட்ட சாதனமும் இதுதான். எனவே இறைதூதர் (ஸல்) அவர்கள் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டினார்கள். ஒப்பிட்டு நோக்கும் போது இது தேர்தலில் பங்கு பற்றுவதற்கான தெளிவான ஆதராமாகும்.

அந்நிய  அரசாங்கத்தில் சில நலன்களை பெறுவதற்காக ஆதரித்து வாக்களிப்பது ஷரீஆ அங்கீகாரமுடையதே என்பது இதனால் தெளிவாகின்றது. அதனை பகஷ்கரிக்கும் போது ஏற்படும் சீர்கேடும், தீமைகளும் பரவுவதற்கு உடந்தையாக  இருந்ததாகவே அர்த்தம். அதனால் தான் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்ற கருத்தை நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் கொண்டுள்ளனர்.

இங்கு வாக்குரிமை என்பது இறை நிராகரிப்பு அரசுக்கு ஆதரவாக இருப்பதல்ல. மாறாக, முஸ்லிம்களின் நலனுக்கான விருப்ப வாக்கை கொடுப்பதாகும். இதற்கு பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக மக்கா காலப் பிரவில் பாரசீகத்துக்கு  எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். பாரசீக நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம். மாறாக அது கிறிஸ்தவர்கள் மீதான விசுவாசமாக நோக்கப்படவில்லை. இது குறித்துஅல் குர் ஆன்.அத்தியாயம், ஸுரா ரூமின் ஆரம்ப வசனங்கள் பேசுகின்றன.

அவ்வாறே அபிசீனியாவில்  நஜ்ஜாசியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜுத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் என நபி(ஸல்)அவர்கள்  கூறியதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவை உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலன்கள் கருதி பற்றோடும் விசுவாசத்தோடும் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார் கள், ஒத்துழைத்துள்ளார்கள் என்பதையே காட்டுகின்றன.

எனவே நாம் எதிர்வரும் மே 16  ந்தேதி வாக்களிப்பது என்பது ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுகின்றோம் என்பதுதான் பொருள். இதில் சொந்த பந்தம் பார்ப்பது, ஊர் உறவு பார்ப்பது, முகத்தாச்சினை பார்ப்பதுதான் பாவம். தேசத்தினதும் முஸ்லிம்களினதும் நலனையும்  முற்படுத்தி அல்லாஹ்வின் முன்னிலையில் சொல்லும் சாட்சி என்று தான் அதனை நோக்க வேண்டும். எமக்கு நிறமோ, கட்சியோ, ஆட்களோ, இயக்கங்களோ முக்கியமில்லை. நாட்டின் நலனுக்கும் இனங்களுக்கிடையான சகவாழ்விற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கான சாத்தியப்பாடு கூடுதலாக உள்ள அரசு உருவாகுவதற்கும் தான் நாம் வாக்களிக்கப் போகின்றறோம். அதனால் அந்த வாக்குரிமை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு வாஜிபாக உள்ளது.

ஊழல் நடைபெறும் போதும் வாக்குரிமை கடமைதான்

சிலர் வாக்களித்து என்ன பயன்? அங்கு ழுழுக்க முழுக்க ஊழலும் மோசடியும் தானே நடைபெறுகிறது. இப்படி இருக்கும் போது ஓட்டுப் போட்டா என்ன போடாட்டா… என்ன என்று சலிப்புடன் ஒதுங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு வேளை தேர்தல் ஊழல், மோசடி நிறைந்த நிலையில் அமையும் என்றிருந்தாலும் வாக்குரிமைய பயன்படுத்துவது கடமை என்றே டாக்டர். ஸலாஹ் ஸுல்தான் அவர்கள் விளக்கியுள்ளார்கள். காரணம் அநியாயம் குறித்து ஸுன்னாவின் வழிகாட்டல் அப்படித்தான் அமைந்துள்ளது.

‘ உனது கடமையை நிறைவேற்று, உனது உரிமையை அல்லாஹ்விடம் கேள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவே எமது பொறுப்பில் உள்ள வாக்குப் பலத்தை பிரயோகிப்பது அடிப்படைக் கடமை. எனவே முதலில் அதனை நிறைவேற்றுவோம். பின்னர் அநியாயத்திற்கு எதிராக வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோம். இதுதான் சுன்னா காட்டித்தரும் வழிமுறை என மேற் கூறிய ஹதீஸ் எமக்கு கூறுகிறது. .இங்கு அநியாயத்திற்கு எதிராகவும், மாற்றத்திற்கான சாத்வீக போராட்டத்தின் ஒரு ஆயுதமே வாக்குரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கடமையை பாழ்படுத்தக் கூடாது.

தீமையை தடுப்பதற்கு அடுத்த தரப்பின் ஒப்புதல் தேவையில்லை. கடமையை செய்தால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும். வாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாமல், மௌனமாக இருப்பது  நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்று பொருள் அல்லது சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அமைந்துவிடும். எனவே தான் எந்நிலையிலும் வாக்களிப்பது கடமை என்றும் அலட்சியமாக விடுவது பாவம் என்று கூறுகின்றோம்.

வாக்களிப்பது காலத்தின் தேவை

வாக்குரிமையை பயன்படுத்துவது எப்படி ஷரீஆவின் பார்வையி;ல் கடமையோ அவ்வாறே அது காலத்தின் கட்டாயத் தேவையுமாகும். நாட்டில் அரசியல் அராஜகம் செய்து அடிபட்ட பாம்புகள் இன்னும் நாம் சாகவில்லை என அசைந்து, அசைந்து படம் காட்டுகின்ற காலத்தில் நாம் வாழுகின்றோம். இன,மத, முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்காக சில சக்திகள் பகிரங்கமாகவே வேலை செய்கின்றன. சியோனிச,இத்துத்வ  சக்திகள் நாட்டை குட்டிச் சுவராக்க வந்துள்ள இந்த நிலையில் மனம்  போன போக்கில் நாம் வாழமுடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஒரு முஸ்லிம் இருந்திட முடியாது.

நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கடமையாகும். வாக்குரிமை தீமை தடுப்பதற்கான மிகப் பலமான சாதனம். இது நமது தேசத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெறும் பாக்கியத்தை கொண்டுவருவதற்கு போதுமான ஒரு அரசியல் பெறுமானம். இந்த அரிய அருமையான சந்தர்ப்பத்தை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதனை கைநழுவ விட்டால் இம்மையிலும் மறுமையிலும் கைசேதம்தான் மிஞ்சும். வேண்டுமென்று விட்டால் பாவமும் பலியும் சேர்ந்தே பின் தொடரும்.

சிறுபான்மை அரசியல் போராட்டத்தை அனுமதிக்கும் சட்டவிதிகள்

இந்தியா  வாழ் முஸ்லிம்கள் தேசத்தின் நலன்களை கட்டியெழுப்புவதில் பங்காளிகளாக இருப்பதும் ஒரு தார்மீகக் கடமையாகும். ஒரு முஸ்லிம் சிறந்த தனிமனித ஆளுமைகளை உருவாக்கும் பிரச்சாரனாகவே வாழ்ந்து மடிவான். பிரச்சாரத்தை அவனது வாழ்வியல் கடமையாகவே அவன் கருதுவான். அந்த வகையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் தனது நாட்டின் அரசியல் வாழ்விலும் தேர்தல் வழிமுறைகளிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டால் அதுவே ஒரு சிறந்த, உயர்ந்த தஃவாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் என்பது அரசியல் போராட்டத்திற்கான ஒரு பலமான சாதனம். சிறுபான்மையாக வாழும் இந்திய முஸ்லிம்கள் அதில் பங்கு பெற்று போராடுவதற்கு ஷரீஆ அங்கீகாரம் உண்டு. பின்வரும் சட்டவிதிகள் அரசியற் போராட்டம், வாக்களித்தல் என்பவற்றை அனுமதிப்பதாகவும் வலியுறுத்துவதாகவும் அமைந்து காணப்படுகின்றன.

  1. 1. ”ஒரு கடமையை நிறைவேற்றல் இன்னொன்றில் தங்கியிருக்குமாயின் அந்த விசயத்தை நிறைவேற்றுவதும் கடமையாகும்” இது ஒரு சட்ட விதி. இந்த வகையில் முஸ்லிம்கள் தமது மார்க்க, கலாசார, சமூக உரிமைகளைப் பெறும் அரசியற் போராட்டம், தேர்தலில் கலந்து கொள்வதில் தங்கியிருக்குமாயின் தேர்தலில் பங்கு கொள்வுதும் அவர்கள் மீது கடமையாகும். வாக்களிப்பு என்ற கடமையை புறக்கணித்து விட்டு மாற்றம் வேண்டும் என கனவு காணமுடியாது.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களை வைத்துள்ளதாக கூறும் தவ்ஹீது அமைப்பு ஒன்று தேர்தலில் யாருக்கு ஆதரவு  என்ற  நிலைப்பாட்டை எடுக்காமல், தன்னைக் சார்ந்த முஸ்லிம்களை கை கழுவியாதும் அல்லாமல்,வெற்றியை தீர்மானிக்கும்  கூட்டு சக்தியை பலவீனப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது. எதிரியின்  கைகளை பலப்படுத்தும் துரோகத்தை செய்து வருவது ஒரு சாபக்கேடு.

  1. 2.  ‘எந்த ஒரு விசயமும் அதற்கான நோக்கங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்”. இது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்னொரு சட்ட விதியாகும். எனவே அரசியல் போராட்டத்தில் கலந்து கொள்வது முஸ்லிம்களின் உரிமையைப் பெறல், மார்க்க சுதந்திரத்தைப் பெறல், கலாசார தனித்துவத்தை, அடையாளத்தைக் காத்தல் என்ற எண்ணத்தோடும் நோக்கத்தோடும் இருப்பின் அது கூலியை பெறும் ஒரு வணக்கமாகும். காலத்தின் தேவையை பொறுத்து கடமையும் கூட.
  2. 3. ‘தீமைகளுக்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல்” என்பதும் ஒரு ஷரீஆ சட்ட விதியாகும். அரசியல் போராட்டத்தின் முக்கிய ஆயுதமான தேர்தலில் பங்கு கொள்ளாது ஒதுங்குவது மார்க்க சமூகக் கூட்டிருப்புக்கு அபாயமாக அமையும். நாட்டில் முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்ட நிலைக்கு உள்ளாவர், நிறைய நன்மைகளை இழப்பதோடு பல சீர்கேடுகளும் தீமைகளும் உருவாகவும் இடமுண்டு. எனவே சிறுபான்மையினர் வாக்குரிமையை பயன்படுத்தாமல் இருப்பது ஒரு பெரும் குற்றமே.
  3. 4. ‘அத்தியாவசிய நிலைகள் தடுக்கப்பட்டவற்றையும் ஆகுமாக்கும்” மற்றும் ‘தேவையும் அது தனிப்பட்டதாயினும் பொதுத் தேவையாயினும் அத்தியாவசிய நிலையின் தரத்தைப் பெறலாம்’ என்ற சட்டவிதிகள் அரசியல் போராட்டம் சிறுபான்மை முஸ்லிம்களின் ஒரு தேவை. அது சமூகத்தின் உரிமைகளைக் காக்க வேண்டிய அத்தியாவசிய நிலையில் உள்ளது. எனவே இந்நிலையில் சில தீமைகளையும் இழைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகுகிறது. அதாவது ஷரீஆவுக்கு மாற்றமான விசயங்களைக் கொண்டுள்ள விதிகளை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியுள்ளது. அல்லது அப்டியான கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டியுள்ளது. சாத்வீகமான அரசியல் போராட்டத்தின் தேவை இத்தீமையை செய்வதை ஆகுமாக்கிறது.
  4. 5. ‘இரண்டு தீமைகளில் தாக்கம் குறைந்ததை தெரிவு செய்தல்” என்பதும் ஒரு சட்டவிதியாகும். இதே கருத்தை கொடுக்கும் இன்னும் பல சட்டவிதிகள் நிறையவே காணப்படுகிறன்றன. நன்மை மாத்திரம் உள்ள ஒரு விடயத்தை தேர்வு செய்வது இலகுவானது. தீமை மாத்திரம் உள்ள ஒன்றை தவிர்ந்து கொள்வதும் இலகுவானது. இரண்டும் கலந்து அல்லது இரண்டும் தீமைகைளாக இருந்து எதை தேர்வு செய்வது என்று வரும்போது சொந்த நலன் பாராது ஷரீஆவின் நிலைக்களனில் நின்று குறைந்த பாதிப்பை தரும் தீமையை தேர்வு செய்வது அனுமதிக்கப்பட்டதாகும். எனவே சட்ட  மன்றம் செல்வது, இரு வேட்பாளர்களில் இருவருமே பொறுத்தமற்றவர் என்று கருதப்படும் போது ஒருவரை ஒப்பீட்டு ரீதியில் முற்படுத்தி தேர்வு செய்வது கடமை என்ற கருத்தை இந்த விதி கூறுகிறது.
  5. 6. ‘நன்மைகளை  நிலை நிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது” என்பது இன்னொரு முக்கியமான சட்டவிதியாகும். சிறுபான்மையாக இருந்து அரசியல் போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் தேச நலன்களையோ, சமூக மேம்பாட்டையோ அடைவது எப்படிப்போனாலும் கூர்மையடைந்துள்ள தீமைகளை குறைப்பது முதல் கட்ட தேவையாகும். எனவே கூர்மையடைந்துள்ள அதிகார வெறியை, அரசியல் சீர்கேடுகளை குறைப்பதற்காக தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது கண்டிப்பான தேவையாகும். இங்கே தீமைகளை தடுப்பது முதன்மை படுத்தப்படுகிறது.

இந்த விதிக்கு சான்றாக  நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கை சம்பவத்தைக் குறிப்பிடலாம். நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவை இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டிய அதே அடித்தளத்தில் மீண்டும் இடித்துக் கட்டுவதை மிகவும் விரும்பினார்கள். இருப்பினும்; புதிதாக இஸ்லாத்தை தழுவியர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கஃபாவின் மீது வைத்துள்ள மதிப்பும் கண்ணியமும் மாசுபடும் என்றும் கஃபாவை புனர்நிர்மானம் செய்வதை கைவிட்டு விட்டார்கள்.

கஃபதுல்லாவை ஆதியில் இருந்த அஸ்திவாரத்தில் கட்டுவது சர்வதேச உம்மத்துக்கான ஒரு பொது நலன். அதனால் உருவாகும் பித்னா அந்த நலனை மிகைத்துவிடும் தீங்காகும் எனவே தீங்கை தடுப்பதை இங்கு நபி (ஸல்) முதன்மை படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் புகாரியில் பதிவாகியுள்ளது. எதிர்பார்க்கப்படும் அரசியல் தீமைகளை தவிர்ந்து கொள்வதற்காக வாக்குரிமையை பயன் படுத்துவது கடமையாகும்.

நன்மைகளை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த. ஆயுதம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம். அந்த வாக்குரிமையை மிகச்சரியாக பயன்படுத்துவது முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும்.

எனவே எதிர்வரும் மே 16  ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அசட்டையாக இருப்பது அராஜகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உதவியதாக அமையும். அதாவது மிகப்பெரிய தீமையை தடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தடுக்காமல், அலட்சியம் செய்த பாவம் என்றே கருதப்படும். ஒரு தவறை தெரிந்து செய்தால் அது கொடிய குற்றமாகும்.

அவ்வாறே வாக்குரிமை ஒரு சாட்சியம். பொய் சாட்சி சொல்லுவது பெரும்பாவம். எனவே எமது சாட்சியம் நேர்மையானதாக இருக்க வேண்டும். பொருத்தமானவர் ஒருவர் இருக்க தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி பொருத்தமற்றவருக்கு வாக்களிப்பது மாபெரும் தவறும் பாவமுமாகும்.

தமிழ் நாட்டின் குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை,அமைதி,நல்லிணக்கம், சமாதானம், பொருளாதார சுபீட்சம், போன்றவற்றை உருவாக்குவதற்கு அதிகபட்சம் உழைப்பார் என்று கருதும் வேட்பாளருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கு நாட்டின் பெருந் தீமையொன்றை ஒழிப்பதற்காக நீங்கள் செய்யும் உதவியாகும். தூய எண்ணத்துடன் அது நடந்தால் கூலி நிச்சியம். அல்லாஹ் விளைவுகளை பார்த்து கூலி வழங்குவதில்லை. எண்ணத்திற்கே வெகுமதி தருகின்றான்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

குறிப்பு:  இலங்கை சகோதரர். முஹம்மத் பகீஹுத்தீன்.அவர்கள்  “சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குரிமை – ஷரீஆவின் பின்னணியில் ஒரு பகுப்பாய்வு”என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தழுவல்.

{ 1 comment… read it below or add one }

முஹம்மத் அலி ஜின்னா June 12, 2016 at 7:32 pm

தந்தை பெரியார் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்:

முஸ்லிம் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

ஒரு முஸ்லிம் தலைவரின் கீழ் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து செயல்பட வேண்டுமென எதிர்பார்ப்பது கானல் நீர். எதிர்ப்பு வரத்தான் செய்யும், உன் வழி உனக்கு என் வழி எனக்கு எனும் மனநிலை எழத்தான் செய்யும். “அரசியலில் யாரும் நிரந்தர நன்பருமல்ல எதிரியுமல்ல” எனும் சித்தாந்த்தை புன்முறுவலோடு ஏற்பதைவிட்டால் வேறு வழியில்லை. ஆக வேற்றுமையில் ஒற்றுமை காண்பதெப்படி என சிந்திப்பதே அறிவுடைமை.

“தந்தை பெரியார் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் முஸ்லிம் லீக், தந்தை பெரியார் மனித நேய கட்சி, தந்தை பெரியார் தலித் இஸ்லாமியர் விடுதலை கட்சி, தந்தை பெரியார் சமூகநீதிக் கட்சி” என பத்து பதினைந்து கட்சிகளை தொடங்குங்கள். அனுபவமுள்ள அரசியல் தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுங்கள். அரவணைத்து செல்லுங்கள். எதிரிகளை நன்பராக்கி கொள்ளுங்கள்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ம.ம.க’வும், முஸ்லிம் லீக்’கும் இணைந்து செயல்பட்டதைப் போல், தி.க. பின்புலத்தில் வியூகம் வகுத்து ஒன்றிணைந்து செயல்படுங்கள். “பெரியாரிஸ்ட், தலித், முஸ்லிம்” மக்களை உங்கள் கட்சியில் கொண்டு வாருங்கள். பெருவாரியான வாக்குக்களை வெல்ல முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் வாக்கு வங்கியை உடைத்து நம்ம ஆளை வெல்ல வைக்கும் அரசியல் வித்தையை கற்றுக்கொடுங்கள். முஸ்லிம் கட்சிகள் வெல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் பட்டி தொட்டிகளில் இஸ்லாத்தை எடுத்து சொல்ல வழியாவது திறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுடைய பச்சைக்கொடியில், பிறை நட்சத்திரமும் தந்தை பெரியாரின் போட்டோவும் போடுங்கள். கீழே “இது ஒரு திராவிட இயக்க சகோதர கட்சி” என சொல்லுங்கள். கட்சி சின்னம் ரெடி.

தந்தை பெரியார் டீ சர்ட் பிரிண்ட் போடுங்கள். அனைத்து முஸ்லிம் தெருக்களிலும் பள்ளிவாசல்களிலும் சென்று விற்கலாம். இந்த டீ சர்ட்டை போட்டுக் கொண்டு, தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் என எங்கே சென்றாலும் உங்கள் காரியம் உடனுக்குடன் நடக்கும்.

உங்கள் வீட்டு முன்னால், இந்த கட்சி சின்னத்துடன் பெயர்ப்பலகையை மாட்டினால், அதை பார்த்ததும் RSS/BJP/ஹிந்துத்வாக்காரனுக்கு வேட்டி நனைந்துவிடும். டீ சர்ட், நேம் போர்ட், கிப்ட் பொருட்கள் விற்று கட்சி நிதி திரட்டலாம். உரிமைகளையும் மீட்கலாம். எந்த கொம்பனாலும் உங்களை அசைக்க முடியாது, இன்ஷா அல்லாஹ்.

திறமையுள்ள முஸ்லிம்கள் பெரியார் திடல் சென்று கலந்து ஆலோசித்து முடிவு செய்தால், ரொம்ப நல்லது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க, தந்தை பெரியாரெனும் மாவீரனை வைத்துக்கொண்டு இப்படி அரசியல் அனாதைகளாக முஸ்லிம் சமுதாயம் நிற்கலாமா?.

Reply

Leave a Comment

Previous post:

Next post: