இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!

in நற்குணம்

சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான்  நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’        நூல் : திர்மிதி

நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.

இதனால்தான் நாவைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் மிக மிக விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொற்கள்தாம் இதயங்களை இணைக்கின்றன. சொற்கள்தாம் இதயங்களைப் பிளக்கின்றன. சொற் கள்தாம் மனங்களை உடைக்கின்றன. சொற்கள்தாம் நெஞ்சங்களை நெகிழச் செய்கின்றன.

மனிதர்களை ஒன்றுசேர்ப்பதும் சொற்கள்தாம். ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போகச் செய்வதும் சொற்கள்தாம். அழ வைப்பதும் சொற்களே. சிரிக்க வைப்பதும் சொற்களே. சிந்திக்கத் தூண்டுவதும் சொற்களே. உணர்வுகளைக் கிளறச் செய்து மனிதர்களை உசுப்பி விடும் வேகமும் சொற்களுக்கு உண்டு. கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை இதமாக அமைதிப்படுத்துகின்ற ஆற்றலும் சொற்களுக்கு உண்டு.

சில சமயம் மனிதனின் எழுதுகோலே அவனுடைய நாவாக ஆகிவிடுகின்றது. “”போர்பான் மன்னர்கள் பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்களேயானால் போர்பான் அரசுக்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது” என நெப்போலியன் கூறினார்.

நாவால் சொல்லப்பட்டாலும் சரி, எழுதுகோல் மூலமாகத் தாளில் வெளிப்படுத்தப்பட்டாலும் சரி, சொற்களுக்கு இருக்கின்ற வலிமையையும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது. தவறான சொற்கள் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விடப் பெரும் குற்றம் வேறு உண்டா? அந்த ஆற்றலைக் கொண்டு சமுதாயத்தில் சீர்திருத்தத்தையும் நன்மையையும் தழைத்தோங்கச் செய்வதற்குப் பதிலாக குழப்பத்தையும் கலகத்தையும் உண்டு பண்ணுவதை விடப் பெரிய கொடுமை வேறு உண்டா?

நம்முடைய ஆளுமையை எதிரொளிப்பது நாம் மொழிகின்ற சொற்களே. தற்செயலாக, நம்மையும் அறியாமல் ஒரு சொல்லைத் தப்பித்தவறிச் சொல்லி விட்டாலும் அது நம்முடைய உள்மனத்தின் அடிக்குரலாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்.

நாம் மொழிகின்ற சொற்கள் நம்மை சுவனத்தின் உயர் நிலைகளில் உயர்த்திக் கொண்டிருக்கும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும். அதே போன்று நாம் சொன்ன ஒரு தவறான சொல், அல்லது தீய சொல் நம்மை மிகப் பெரும் பின்னடைவுக்குள்ளாக்கி விடும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும் என நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

சில சமயம் நாம் சாதாரணமாக, எந்த இழப்பையும் ஏற்படுத்தாது என்று நினைத்துப் பேசி விடுகின்ற ஒரு சொல் நம்மை மோசமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் நபிமொழிகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாவைப் பயன் படுத்துவதில் நாம் எந்த அளவுக்கு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

சமரசம்

{ 4 comments… read them below or add one }

S.ஹலீல் July 5, 2012 at 10:46 pm

நரக நெருப்பிலிந்து தற்காத்துக்கொள்ள நல்ல தரமான கட்டுரை நன்றி

Reply

NISAR AHAMED October 30, 2016 at 9:21 am

அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கும், அறுதலான வார்த்தைகளால் தற்கொலையையும் தவிர்க்கலாம்.

இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும், எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரும். ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டும். கனிவான வார்த்தைகள் உயிரையே காப்பாற்றும்.

காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும். தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.

தன்மையான வார்த்தைகள் மனச்சலிப்பை நீக்கும். நகைச்சுவையான வார்த்தைகள் இறுக்கத்தை; தளர்த்தும்.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அதுபோல வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்.

வாழ்வின் எல்லாச் சூழலிலும் நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால், வாழ்வின் வெற்றிகரமான இணக்கம் நிலவும்.

Reply

Anonymous May 15, 2021 at 4:02 pm

Masha allah arumai sago

Reply

Mohamed Ismail August 5, 2019 at 11:53 am

Manithargaluku thevaiyana Nalla Arivurai….. Zajakallah Khaira…

Reply

Leave a Comment

Previous post:

Next post: