இசையும் அரசியலும்

in பொதுவானவை

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

இஸ்லாம் நல்ல விஷயங்களை பார்ப்பதையோ, கேட்பதையோ தடை செய்யவில்லை. இசையில் மருத்துவ குணம் இருக்கிறது. எனவே, நல்ல கருத்துக்களை சொல்லும் பாடல்கள், கவிதைகள் இசையோடு கலந்திருந்தாலும் அதைக் கேட்கலாம், அதில் தவறில்லை. இப்படி ஒரு சாரார்.

மற்றொரு சாரார், அரசியலில் ஈடுபட்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று நடத்தியதால்தானே நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எனவே, அரசியலில் ஈடுபட்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று நடத்தலாம். அதில் தவறில்லை என்று சொல்கின்றனர்.

இசை என்பது மதுவில் ஒரு வகை. இந்த இசைமதுவானது அறிவை மயக்கக் கூடிய, மழுங்க வைக்கக் கூடிய ஒன்று. இந்த இசைமது ஏற்படுத்தும் கேடுகள் பற்றிய விரிவான ஆக்கங்கள், உரைகள் ஏற்கெனவே வந்து விட்டதால் மீண்டும் அவற்றை இங்கே எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். அதே போல், அரசியல் என்பது சூதாட்டத்தில் ஒரு வகை.

சூதாட்டம் என்றால் என்ன?

எதன் மீதாவது பேராசை எனும் போதை அல்லது மயக்கம் கொண்டு, அதைப் பெற, அல்லது அடைய, அல்லது சம்பாதிக்க, அல்லது சாதிக்க அது அதற்கான முறையான உழைப்பு இல்லாமல், வெற்றியை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, வெற்றி, தோல்வி நிச்சயமில்லாத ஒரு குறுக்கு வழியை நம்பி, தன்னிடம் உள்ள மதிப்பு மிக்க எதையாவது பணயமாக வைத்து களமிறங்குவது, களமாடுவதற்கு பெயர்தான் சூதாடுதல், சூதாட்டம் என்பது.

இன்று சர்வதேச அளவில் அரசியலில் நடந்து கொண்டிருப்பது இந்த சூதாட்டம்தான். இன்று சர்வதேச அளவிலான மிகப் பெரிய, மெகா சூதாட்ட களம் அரசியல்தான். அன்றாடம் உலக நடப்பை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சிந்திப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். எனவே, இந்த அரசியல் சூதாட்டத்தை பற்றியும் இங்கே விரிவாக எழுத வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். எனவே, நேரடியாக விஷயத்துக்கு போய் விடலாம்.

(மறுமையில் சொர்க்கத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும்) அதில் போதையே இருக்காது; அவர்களுடைய அறிவும் மயங்கி விடாது.-37:47

“அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான் (போதை வஸ்துதான்)’ என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். – புகாரீ- 4619

(நபியே! இசை)மது மற்றும் (அரசியல்)சூதாட்டம் பற்றி (அவற்றில் பிரயோஜனங்கள் இருக்கின்றனவே என்று அவர்கள்) உங்களிடம் கேட்கின்றனர். (உண்மைதான்) அவ்விரண்டிலும் மனிதர்களுக்கு பிரயோஜனங்கள் இருக்(கத்தான் செய்)கின்றன. ( கூடவே) கெடுதல்களும் இருக்கின்றன; அவைகளில் உள்ள பிரயோஜனங்களை விட அவைகளிலுள்ள கெடுதல்கள்தான் மிக அதிகம். (என்று) நீங்கள் கூறுங்கள்-2:219

(இசை)மது மற்றும் (அரசியல்)சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி (உங்கள் மனதிலிருந்து) அல்லாஹ்வை மறக்கடிக்கவும், தொழுகையிலிருந்து உங்களைத் தடுத்து விடவும்தான் ஷைத்தான் விரும்புகிறான். (எனவே) இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றிலிருந்து விலகிக் கொள்வீர்களா?-5:91

“நம்பிக்கையாளர்களே! (இசை), மது, (அரசியல்), சூதாட்டம், (வணங்குவதற்காக) நட்டுவைக்கப்பட்டவை, (குறி சொல்லும்) அம்புகள் (கருவிகள்) இவையெல்லாம் ஷைத்தானின் அருவருப்பான செயலாகும்” ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (விலகினால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (5:90)

மேலே தரப்பட்ட ஆதாரங்கள் இசையை கேட்பதையும், அரசியலில் ஈடுபடுவதையும் முற்றாக தடை செய்வதை அறிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில் நடந்த) “புஆஸ்” எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்து) என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.- முஸ்லிம்-1619

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (சிறுமியாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் (“பனாத்”)வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது. முஸ்லிம்-4827

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு ஹதீஸ்கள் சொல்லும் செய்தி என்னவென்றால், மெட்டு என்றால் என்ன? ராகம் என்றால் என்ன? தாளம் என்றால் என்ன? பாவம் என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? தௌஹீத் என்றால் என்ன? இபாதத் என்றால் என்ன? என்பது பற்றி தெரியாத சிறு பிள்ளைகள், எதையாவது வைத்து அடித்து அல்லது விளையாடி மகிழ்வதற்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பமில்லை.

Leave a Comment

Previous post:

Next post: