ஹிஜ்ரி 1424-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லத் தயாராகி விட்டது. நம்முடைய ஆயுளில் நம்முடைய மீண்டும் ஒரு ஆண்டை இழந்து விட்டோம். இப்படியே ஒவ்வொரு ஆண்டையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோமே நம்முடைய ஆயுள் பனிக்கட்டிபோல் கறைந்து கொண்டிருக்கிறதே ஒரு நாளைக்கு நம்முடைய அசல் ஆயுள் முடிந்து நாமும் இவ்வுலகை விட்டு விடைப்பெற்று செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமே? நாம் பொய்யூரிலிருந்து செல்ல இருக்கும் மெய்யூருக்கு வேண்டிய சாதனங்களை தயாரித்து வைத்திருக்கிறோமா? போன்ற சிந்தனைகள் நமக்குள் இருந்ததுண்டா? இவ்வுலகில் ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பிக்கும்போது நம்முடைய வியாபார ஸ்தலங்களில் இருக்கும் (stock) பொருட்களை எடுத்து வரவு செலவு பார்த்து லாப நஷ்ட கணக்குப் பார்க்க தவறுவதில்லையே?
இந்த அக்கறையும் ஈடுபாடும் நம்மிடம் மிக அதகமாகவே இருக்கிறதே. அழிந்து போகும் அல்லது விட்டுச் செல்லும் செல்வம் குறித்து இந்த அளவு அக்கறை காட்டுகிறோமா? அதே சமயம் அறிவுக்கு உட்படாத நம்மோடு எடுத்துச் செல்லும் செல்வம் குறித்து அக்கறை காட்டுகிறோமா இல்லையே. இதன் பொருள் என்ன? நாம் உண்மையிலேயே அறிவாளிகளாக இருந்தால் இந்த அக்கறை இன்மை நம்மிடம் இருக்குமா?
நம்மிலே பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை நாம் அறிவோம். அவர்கள் சென்றுள்ள ஊர்கள் அவர்களது சொந்த ஊர் அல்ல. பிழைப்புத்தேடிச் சென்ற ஊராகும். அவர்களின் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர் அங்கே இல்லை. இங்குதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிழைக்கச் சென்ற ஒருவர் தனது சொந்த ஊரையும் சொந்த பந்தங்களையும் மறந்து பிழைக்கச் சென்ற ஊரே சதம் என்று எண்ணி அங்கு தனது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்கிறார், இங்கு தனது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக எதையும் சேமித்து வைக்காமல் அங்கேயே தாம் தூம் என்று செலவழித்து வருகிறார், சொந்த ஊரை மறந்து வந்த ஊரே நிரந்தரம் என்று மணப்பால் குடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இந்த நிலையில் பிழக்கச் சென்ற அந்நாட்டு அரசு திடீரென ஒரு சட்டம் இயற்றுகிறது. தனது குடிமக்களைத் தவிர வெளியூர் பிரஜைகளெல்லாம் இன்னும் 24 மணிநேர அவகாசத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இல்லையென்றால் பல வந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்று சட்டம் போடுகிறது. பிழைக்க வந்த ஊராக எண்ணி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்நபரின் நிலை இப்பொழுது என்னவாகும். சொந்த ஊரையும் உற்றார் உறவினரையும் மறந்து பிழைக்க வந்த ஊரே கதியென்று வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்டு வெறும் ஆளாக சொந்த ஊர் வந்திருக்கும் அவருக்கு ஊரில் ஏதும் மதிப்பு மறியாதை கிடைக்குமா? அல்லது மனைவி மக்களாலும் உற்றார் உறவினராலும் இகழ்ந்துரைக்கப்படுவாரா இல்லையா. இப்பொழுது அவரது உள்ளம் எந்தளவு வேதனையில் தத்தளிக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். இந்த துர்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அவர் தனது சொந்த ஊரை மறந்து பிழைக்க வந்த ஊரே நிரந்தரம் என்று தப்புக்கணக்குப் போட்டு பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்ததன் பேராபத்தை இப்போதுதான் அவர் உணர்கிறார். ஆனால் அது அவருக்குப் பலனளிக்காது.
ஏறக்குறைய இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த நபரின் வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர். இவ்வுலம் அவர்களின் பிழைக்க வந்த ஊர், அவர்களின் சொந்த ஊர் மறு உலகமாகும். இவ்வுலகில் கஷ்டப்பட்டு உழைத்து மறு உலகிற்கு வேண்டிய பொருளாதரத்தை (அருளை) தேடிக்கொள்ள வேண்டியவர்கள், ஆனால் தங்கள் நிலை மறந்து இவ்வுலமே நிரந்தரம் என நினைத்து இவ்வுலக வாழ்க்கையைச் சீராக்குவதிலும் செம்மைப்படுத்துவதிலும் காலத்தைக் கழித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் அசல் ஆயுள் முடிந்ததும் அவர்கள் பிழைக்க வந்த இவ்வுலக விட்டு அவர்களின் சொந்த ஊரான மறு உலகிற்கு நிர்பந்தத்தால் விரட்டி அடிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெருங்கையுடன் செல்லும் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்த்தித்துப் பாருங்கள். அவர் அனுபவிக்கப் போகும் வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஏதாவது அளவு இருக்க முடியுமா?
அறிவுள்ளவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தூர நோகுள்ளவர்களுக்கு இந்த அறிவுரைகள் போதும். இதற்கு மேலும் நிரந்தரமான மறு உலகை அற்பமாக என்ணி மறந்து அழிந்து போகும் இவ்வுலகைச் நிறந்தர உலகாக எண்ணி தங்கள் வாழ்நாளை வீண்நாளாகக் கழித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவ்வுலக வியாபாரத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்குப் பார்ப்பதைவிட அதிகமாக மறு உலக விஷயத்தில் இலாப நஷ்ட கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஐங்கால தொழுகைகளை முறைப்படி தொழுது வருகிறோமா! தேடிய செல்வத்திற்கு ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விட்டோமா? ஏழை எளியவர்களிடம் அன்பு பாராட்டி அவர்களுக்குரிய உதவி உபகாரங்களைச் செய்கிறோமா? உற்றார் உறவினர்களை அவர்கள் வெட்டிச் சென்றாலும், நாம் அரவனைத்து செல்கிறோமா? பொதுவாக மனித பண்பாட்டுடன் மனித நேயத்துடன் வாழ்கிறோமா? போன்ற கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி அவற்றிற்குரிய விடைகளை காண முற்படுவார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த கூட்டத்தில் நம்மையும் இணைத்தருள்வானாக.