“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது

in அறிவியல்

“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது.

(Can You Prevent Pregnancy with the Pullout Method?)

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

குழந்தை பிறப்பை தடுப்பதற்கும், தள்ளிப்போடவும் பல்வேறு கர்ப்பத்தடை வழிமுறைகள், உலகெங்கும் மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அவற்றில் மிகப் பழமையான வழிமுறை,”அஸ்ல் செய்தல்” என்பது. புணர்ச்சியின் போது ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில், பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதற்குப் பெயர் “அஸ்ல்’. (Coitus interruptus) ஆணின் விந்தானது பெண்ணின் உறுப்பில் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் கர்ப்பம் உண்டாகாமல் தடுத்து விடலாம். இந்த எளிய வழி முறை இன்றும் மக்களால் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆயினும் இம்முறையால் 100 % முழுமையாக வெற்றியை அடைய முடியாது என்று இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதைதான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறிவிட்டது.

விந்து வெளிவருமுன் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவதன் மூலம் கர்ப்பமுறுவதை தடுத்து விடலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனாலும் பரவலாக பெண்கள் கர்ப்பம் தரிப்பதை பார்க்க முடிகிறது. இது எப்படி நிகழ்கிறது? இதன் காரணம் என்ன? என்பதை ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து வருகின்றனர். உடலுறவின் போது, விந்து வெளியேருவதற்கு முன்னதாக “மதி” என்னும் திரவம் வெளிப்படும். (Pre-ejaculatory fluid) இது லூப்ரிகேசன் என்னும் மசகுத் தன்மையை ஏற்படுத்தி, விந்துவில் உள்ள உயிரணுக்கள் எளிதாக வழுக்கிச் செல்ல வழி ஏற்படுத்தும். இந்த திரவத்தின் மூலமாக விந்தணுக்கள் கலந்து கர்ப்பமுறச் செய்வதாகவே பெரும்பாலோர் கருதுகிறார்கள்.

ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவ ஆய்வாளர் மைக்கேல் ஈசன்பர்க் இது குறித்து கூறும்போது, மக்கள் நடைமுறைப்படுத்தும் அஸ்ல் என்னும் (withdrawing) “வெளியே எடுத்தல்” வழிமுறையில் முற்றிலுமாக கர்ப்பம் ஏற்படுவதை தடுக்க இயலாது. 30 % – 40 % தோல்வியே ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் பல, மதி எனும் திரவத்தில் விந்தணுக்கள் கலந்து இருக்கலாம். அல்லது இதற்கு முன்பு உறவு கொண்டபோது வெளியேறிய உயிரணுக்கள் அங்கு தங்கி இருக்கலாம். ஆனால் கர்ப்பம் தரிப்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அமெரிக்காவில் குழந்தை பெற்ற தாய்மார்களில் பாதிப்பேர் விருப்பம் இன்றி பெற்றவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் கர்ப்பத்தடை வழி முறைகளின் தோல்வி.

இது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளை கடந்த 16- May .2019 ‘சயின்டிபிக் அமெரிக்கன்” ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

https://www.scientificamerican.com/article/can-you-prevent-pregnancy-with-the-pullout-method/?redirect=1

யூதர்களின் வேத நூலான தவ்ராத்தில் “வெளியே எடுத்தல்” சம்பந்தமான ஒரு செய்தி கூறப்படுகிறது. இஸ்ரேலியர்களின் குல வழக்கப்படி, ஒரு குடும்பத்திலுள்ள சகோதரரில் ஒருவன் இறந்து போனால், அவனின் விதவை மனைவியை வேறு அந்நியனுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அவளை இறந்தவனின் சகோதரனுக்கே (கொழுந்தன்) மனம் முடித்து வைக்க வேண்டும். பிறக்கும் ஆண் குழந்தையானது இறந்து போனவன் வாரிசாக வளரும்.. அவனது சொத்துக்களுக்கு வாரிசாக இருக்கும் என்று பைபிள் கூறுகிறது. – பழைய ஏற்பாடு. உப ஆகமம்.25:5,6.

இதன்படி யாக்கோபுவின் பதினோரு புதல்வர்களில் ஒருவனான யூதாவுக்கு மூத்த மகனாக ஏர் என்பவனும் இரண்டாவதாக ஓனான் என்பவனையும் பெற்றார்.

யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்கு “தமார்” என்னும் ஒரு பெண்ணை மன முடித்தார்.

யூதாவின் தலைமகன் ஏர் கர்த்தர் முன்னிலையில் கொடியவனாக இருந்ததால், கர்த்தர் அவனை சாகடித்தார்.

அப்போது யூதா தம் இளைய மகன் ஓனானை நோக்கி, ” நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ்! சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றச் செய்” என்றார்.

அந்த வழி மரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றாதவாறு தன் விந்தை தரையில் சிந்தி வந்தான். பைபிள்- பழைய ஏற்பாடு, ஆதி ஆகமம்.38: 6-9.

உடலுறவின் போது விந்தை அதில் செலுத்தாமல், வெளியில் எடுத்து விடும் செயலுக்கு ஓனனிசம் ( Onanism) என்று அழைக்கப்படுகிறது. (Onanism is the act of “spilling one’s seed” in any place other than a women’s vagina.).

இஸ்லாத்தை பொருத்தவரை குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடை போன்ற மனித செயல்களுக்கு ஆதரவாகவோ, அல்லது எதிர்ப்பாகவோ இல்லை. ஏனென்றால் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவளிக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தான் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில், அவர்களைக் கொலை செய்வது பெறும் பாவமாகும். – அல் குர்ஆன். 17:31.

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அல் குர்ஆன். 11:6.

எனவே தான் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் ஆர்வ மூட்டினார்கள். ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எந்த பெண்ணை மணமுடிப்பது சிறந்தது? என்று ஆலோசனை கேட்டார்.

” உன்னிடம் அன்பு செலுத்துபவளையும், உனக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொடுப்பவளையும் திருமணம் செய்துகொள். நாளை கியாமத் நாளில் மற்ற உம்மத்துக்களை விட என் உம்மத்து அதிகளவில் இருப்பது கண்டு பெருமைப் பட விரும்புகிறேன்.” என்று கூறினார்கள்.

 

அபூ தாவூத்.2050. ஸஹீஹ், ஷேக் அல்பானி யின் ” இர்வா அல் கலீல்.”1784.

 

நபி (ஸல்) அவர்கள் அருகில் “அஸ்ல்” ( புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், ” என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பாலுட்டும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது ‘அஸ்ல்” செய்து கொள்வார். அவ்வாறே, தம் அடிமைப் பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம் (அப்போது அஸ்ல் செய்து கொள்வார்.)” என்று விடையளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ” அவ்வாறு செய்யாமல் இருப்பதால் உங்கள் மீது எந்தக் குற்றமில்லை. அதுவெல்லாம் விதியாகும்.” ” படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்” என்று கூறினார்கள். – முஸ்லிம்.2840, 2841

அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ” புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ” விந்தின் அனைத்து (உயிரணு)க் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்) அல்லாஹ் ஒன்றை படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது.” என்று கூறினார்கள். முஸ்லிம்.2842.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ” என்னிடம் ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்கு பணிவிடை செய்பவளாகவும், தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்று வருகிறேன். ( அதே சமயம்) அவள் கருவுற்று விடுவதை நான் விரும்பவில்லை.” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் “அஸ்ல்” செய்துகொள்! ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் வந்து சேரும்” என்றார்கள்.

அம்மனிதர் சில நாள் கழித்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ” அந்த அடிமைப் பெண் கருவுற்று விட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கு வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேனே!…. நான் அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதரும் ஆவேன்.” என்றார்கள். முஸ்லிம். 2843,2844.

ஒரு மனிதர் அஸ்ல் (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்தாலும் அப்பெண் கருவுற்று விடுவதற்க்கான அசல் காரணம் தெரியாமல் இன்றைய நவீன அறிவியல் உலகம் திண்டாடித் தவிக்கிறது. அது அல்லாஹ் விதித்த விதி என்பதை அவர்கள் அறிய மறுக்கிறார்கள்.

அல்லாஹ் தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கிறான்; அல்லது அவர்களுக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்; – நிச்சயமாக, அவன் மிக்க அறிந்தவன்; பேராற்றலுடையவன். – அல் குர்ஆன். 42:49,50.

குழந்தை பிறப்பை தடுப்பதற்க்காக எந்த முறையைக் கையாண்டாலும், அது 100 சதம் வெற்றியை கொடுப்பதில்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுப்பதை அல்லாஹ் நாடி விட்டால், அதை தடுப்பதற்கு எந்த கர்ப்பத் தடை சாதனங்களாலும் முடியாது என்பதை இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக்கொள்கிறது.

ஒரு துளி விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு உயிரணு மட்டுமே குழந்தையை தீர்மானிக்கிறது என்ற நவீன அறிவியல் உண்மையையும் அன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டார்கள். (முஸ்லிம்.2842)

இந்த ஒரு உயிரணுவை தடுப்பதற்கு மனிதர்கள் சக்தி பெற மாட்டார்கள்.இது அல்லாஹ்வின் விதியில் முன்பே எழுதப்பட்ட ஒன்று. அல்லாஹ் வகுத்த விதியை எவராலும் மாற்ற முடியாது.

ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான். அல் குர்ஆன். 80:19.

{ 1 comment… read it below or add one }

SHA NAWAS June 17, 2019 at 8:01 am

இவ்வுலகில் வாழும் வரை அல்லாஹ் பல விஷயங்களை மனிதனுக்கு சோதனையாக, அவன் அறிவைக் கொண்டு சிந்தித்து செயல் படுவதற்கான சூழலை ஏற்படுத்துகிறான். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள செய்தியும் ஒரு முக்கியமான விஷயம். என்னுடைய கருத்து :- அல்லாஹ்வுக்கு பயந்து செயல்பட வேண்டும். அதே சமயம் இன்றைய கால கட்டத்தில் ஹராமான விஷயங்கள் செய்வது எளிது. அந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது என்பது ஒருவரின் இறையச்சத்தை பொறுத்தது. காண்டம் பயன் படுத்துவது கூட சில நேரங்களில் சரியான செயலாக அமையலாம்.

Reply

Leave a Comment

Previous post:

Next post: