அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!

Post image for அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!

in அறிவியல்

எஸ்.ஹலரத் அலி,  திருச்சி-7

 There is still lots of debate over how Earth's oceans formed  The Earth´s oceans were formed by water from comets

அல்லாஹ் படைத்த  இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரும்படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது ‘தண்ணீர்”. இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது… அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும்போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு விளங்குகிறது. அல்லாஹ்வின் அருட்கொடையான நீரின் மதிப்பு தெரியாத காரணத்தால், இன்று சுற்றுச்சூழல் சீர் கேடானது, நீரை மாசுபடுத்துவதிலிருந்தே ஆரம்பமாகிறது.

நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள், “ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. பிறகு படைக்கப்பட்ட அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்)தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ் பூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர், வானங்கள், பூமியைப் படைத்தான்.
அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி),    புஹாரி. 3191.

  இந்த ஹதீசிற்கு இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள். “அல்லாஹ் அர்ஷை படைக்குமுன்பே நீரைப்படைத்து விட்டான் என்பதை இந்த ஹதிஸ் தெளிவு படுத்துகிறது” என்கிறார்கள்.    பத்ஹுல் பாரி .6/289.

  விண்வெளியில் முதலில் படைக்கப்பட்ட நீரை… பின்பு படைக்கப்பட்ட பூமிக்கு இறக்கிவைத்து… பல்லுயிர்கள்  செழித்து வாழ அல்லாஹ் அருள் செய்தான் என்பதை இவ் வசனம் தெளிவுபடுத்துகிறது.

  நாம் வானத்திலிருந்து (space – heaven) நாம் திட்டமான அளவில் நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் (கடலாக) தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.  அல்குர் ஆன்.23:18.

 இன்று மேகத்திலிருந்து பொழியும் மழையைப் பற்றி மேலுள்ள வசனம் பேசவில்லை. ஆதியில் விண்வெளியில் இருந்து பூமியில் கொட்டிய பெருங்கடல்களை உருவாக்கிய சம்பவமே இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. மழை என்ற சொல்லுக்கு அரபியில் “மதார்”.அல்லது “வத்க்” என்பார்கள். ஆனால் மேலுள்ள வசனத்தில் மழை என்று சொல்லாமல் “மா”ய் நீர் என்றே சொல்வது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் பெறும் மழையெல்லாம் அன்று கொட்டிய நீரேல்லாம் கடலாய் மாறி… அந்த கடல் வெப்பமடைந்து நீராவியாகி மேலேறி கரும்மேகங்களாக உருமாறி குளிர்ந்து இன்று மழையாய் பொழிவதையே!.

 விண்ணிலிருந்து வந்த பெரு வெள்ள நீரானது, கடலாக மாறி… இந்தக் கடல் நீர் ஆவியாகி மேகமாகி தூய மழை நீராக மண்ணில் வீழ்ந்து ஆறுகளாக ஓடுகின்றன. இந்த நீரிலிருந்தே அனைத்து உயிர்களும் பல்கிப் பெருகின. இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்.

 எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றுள் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களைக் கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.    அல் குர்ஆன். 24;45.

 இன்றைய  நவீன அறிவியலும், அல் குர்ஆன் சொல்லுவதை உண்மைப்படுத்துகிறது.

 பொதுவாக அறிவியலாளர்கள், பூமிக்கு நீர் வந்த முறைக்கு  இரண்டு கருதுகோளை முன்வைக்கிறார்கள். ஒன்று பூமி உருவான போதே அதனுள் நீர் இருந்தது, இரண்டாவது கருத்து, விண்வெளியில் உள்ள வால் நட்சத்திரங்களும், குறுங்கோள்களும் பூமியை பல லட்சம் ஆண்டுகள் தொடர்ச்சியாக மோதின. அவற்றிலிருந்த நீரே கடலாக உருவானது.

 இந்த இரண்டாவது கருத்தே சரியானது என்று சர்வதேச ஆய்வறிக்கைகள்  கூறுகின்றன. (23 – மே-2019, Astronomy and Astro physics Letters) சர்வதேச அறிவியல் ஆய்விதழான  “அஸ்ட்ரானமி அஸ்ரோ பிசிக்ஸ் லெட்டர்” ல் இது குறித்து விரிவான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பொதுவாக  சாதாரண நீரானது இரண்டு ஹைட்ரஜன் அணுவும், ஒரு ஆக்சிஜன் அணுவும் கலந்த சேர்மமாக உள்ளது. ஆகவே இதன் இரசாயனப் பெயர் H2O. அதே சமயம் (HDO),என்று சொல்லப்படும் தண்ணீரில்  ஹைட்ரஜன் அணுவில் கூடுதலாக நியூட்ரான் இருப்பதால் அதை கனநீர் (HEAVY WATER) என்று சொல்கிறார்கள். சூரிய குடும்பத்தை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுழன்று வருகின்றன. இந்தக் கோள்களில் கடலளவுக்கு பெறும் நீர் இருப்பு உள்ளது. இந்தக் கோள்கள் பூமியில் மோதியே… பூமிக்கு நீரைக் கொண்டு வந்து சேர்த்தன… என்று சொல்லப்பட்டாலும்….

இன்று நமது பூமியில் உள்ள கடல் நீரில் இருக்கும் ஹைட்ரஜன்.. மற்றும் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தில் பெறும் வேறுபாடு உள்ளது. குறுங்கோள்களே பூமிக்கு நீரைக் கொண்டு வந்து சேர்த்தன என்றால் இன்றைய கடலில் அதிக கனநீர் அளவு இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை. கனநீர் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி விண்ணிலிருந்து மண்ணுக்கு நீர் வந்தது? சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருந்து, பூமியை நோக்கி  வரும் வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்த போது அவற்றிலுள்ள நீரானது… நம் பூமியிலுள்ள கடல் நீரில் உள்ளது போன்றே ஹைட்ரஜன்,ஆக்சிஜன் அளவுகள் இருந்தன.
Image result for comets play key role bringing water to earth

1980 ம் ஆண்டிற்குப்பின் பூமியை நெருங்கி வந்த பன்னிரண்டு வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக ரோஸெட்டா மற்றும் விர்டனன் (ROSETTA & WIRTANAN COMETS) வால் நட்சத்திரங்களில் பூமியில் உள்ளது போன்றே அதே விகிதாசாரத்தில், பெருங்கடளவு நீர் இருப்பதை உறுதி செய்தனர். விண்ணிலிருந்து வரும் திடீர் விருந்தாளிகளான வால் நட்சத்திரங்களே மண்ணுக்கு நீரை கொண்டு வந்து சேர்த்திருக்கமுடியும் என்று அறிவியலாளர்கள்  கருதுகிறார்கள்.

அல் குர்ஆன் கூறுவது போல்…. தண்ணீர் பெரு வெள்ளக்கடலானது விண்வெளிக்கப்பாலிருந்து இறக்கப்பட்ட ஒன்று என்பதை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! வரும் 2021 ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பூமியை நெருங்கி வரும் ஒரு வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்வதன் மூலம் இந்த உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தலாம் என்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

  https://www.nasa.gov/feature/comet-provides-new-clues-to-origins-of-earth-s-oceans

https://www.technologytimes.pk/comets-key-role-water-earth/

ஆதியில் படைக்கப்பட்டு, மண்ணுக்கு இறக்கப்பட்ட நீரானது பெரும் கடலாக உலகை 70%  சூழ்ந்துள்ளது. இந்த கடல் நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாகி உயரே சென்று கனத்த மேகங்களாக மாறி….குளிர்ந்து மழையாக பொழிகிறது. இதையே அல்லாஹ் கூறுகின்றான்.

கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.- அல் குர்ஆன். 78:14.

நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் மேகத்தை  மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்களை ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டு கொண்டிருப்பதைக் நீர் பார்க்கிறீர்…..   அல் குர்ஆன்.24:43.

உலக உயிரினங்களின் உயிர்த்துளியாகிய மழைத்துளி இல்லையேல் உலகம் இல்லை. இந்த உலகத்தை உயிர்ப்புடன் இயங்கச் செய்யும் ஆற்றல் நீருக்குத் தான் உள்ளது. காரணம் அனைத்து உயிர்களையும் அல்லாஹ் நீரிலிருந்தே   படைத்துள்ளான்.

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்தே படைத்துள்ளான்.   அல் குர்ஆன். 24:45.

அல்லாஹ்வின் அற்புத படைப்பான தண்ணீருக்கு ஏராளமான விசேஷ பண்புகள் இருக்கின்றது. இது போன்ற சிறப்புப்பண்புகள் வேறு எந்தத் திரவத்திற்கும் கொடுக்கப்படவில்லை. எல்லா அடிப்படை இயற்கைப் பண்புகளையும் உடைக்கும் தன்மை நீருக்கு உண்டு. உதாரணமாக, எந்த ஒரு திரவத்திலும் அத்திரவத்தின் திடப்பொருள் மிதக்கிறது. மெழுவர்த்தி பாகில் திட மெழுகு திரியை வைத்தால் அது மிதக்காது,மூழ்கி விடும்.உருகிய வெண்ணெயில் வெண்ணைக் கட்டி மிதிப்பதில்லை, எரிமலைக்குழம்பு பாகு நிலையில் இருக்கும் போது கற்கள் மிதிப்பதில்லை. அதேசமயம் ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போட்டால் அது மிதக்கும். உறைய வைக்கும்போது நீர் விரிவடைவதால் ஐஸ் துண்டுகள் மிதக்கின்றன.

பல மில்லியன் ஆண்டுகளாக உறைதல்,மற்றும் உருகுதல் என்னும் தொடர் வினை நடந்து கொண்டிருப்பதன் காரணமாகவே பெரும் பாறைகள் வெடித்து நீரை சொரிகின்றன. அந்தப்பாறைகள் இரண்டாகப் பிளந்து நொறுங்கி மணலாக மாறிய நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதைத்தான் அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், பிளவுபட்டுத் திடமாகக் அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு…. 2:74.

 நமது துருவப் பிரதேசங்களான ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் பனி மலைகள் உடைந்து பிரமாண்ட கப்பல் போன்று கடலில் மிதந்து செல்வதைப் பார்த்து வருகிறோம். அது போல் பனி உறைந்த ஏரிகளிலும்,ஆறுகளிலும் அவற்றின் மேற்பரப்பு வெப்ப நிலையை விட அதிக வெப்ப நிலையை பராமரிப்பதன் மூலம் உறைந்த நீர்மட்டத்திற்கு கீழ் வாழும் மீன்கள் உறைந்து இறந்து விடாமல் நீர் பாதுகாக்கிறது.கடும் குளிர் காலத்தில் கூட 4 டிகிரி வெப்பநிலையை பராமரித்து முற்றும் நீர் உறைந்து விடாமல் நீர் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

இதனால் குளிர்ப்பிரதேசங்களில் கடல் ஆறு ஏரி போன்ற நீர்நிலைகளின் மேற்பரப்பு உறைந்து பனித்திடலாக மாறினாலும் அதற்கும் கீழ் உள்ள நீரானது உறையாமல் நீராக ஓடிக்கொண்டிருக்கும். நீருக்குள்ள இந்த விசேடப் பண்பின் காரணமாகவே, காலங்காலமாக நடக்கும் பருவநிலை மாற்றங்களினாலும்,பனி யுகங்களினாலும் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

உண்மையில் தண்ணீர் என்னும் திரவ,திடப் பொருள், ஆக்சிஜன்,ஹைட்ரஜன் என்ற இரு வாயுக்களின் சேர்க்கையே! இந்த இரண்டு வாயுக்களும் பிரிக்கப்பட்டால்…அவை காற்றில் கலந்து மறைந்துவிடும்.இப்படியான உலகில் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது. இப்படி இரு வாயுக்களையும் பிரிக்க முடியாமல் சேர்த்து வைத்திருக்கும் அந்த பிணைப்பு எது?

நீரின் மூலக்கூறில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுக்கள் மற்ற மூலக்கூறிலுள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் ஓட்டிக் கொள்ளும் இயல்புடையவை. ஒவ்வொரு நீர் மூலக்கூறும்,இது போன்ற நான்கு ஹைட்ரஜன் பிணைப்புகளை வரை உருவாக்கக் கூடி யவை. இப்படி ஒட்டு மொத்தத் திரவமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிணைந்துள்ளது.இந்தப் பிணைப்பை துண்டிக்க அதிக ஆற்றல் வேண்டும். கொதிக்க வைப்பதன் மூலம் நீரை ஆவியாக்கலாம்.

ஹைட்ரஜனின் உறுதியான இந்த பிணைப்புகளின் காரணமாகவே, நமது உடலிலுள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தத்தை மேலிழுத்து செல்ல முடிகிறது. தாவரங்களின் வேரில் உள்ள நீர்ச் சத்தை தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் இலை வரை, புவி ஈர்ப்புக்கு எதிராக கொண்டு சென்று… சூரிய ஒளியில் இலைகள் பச்சையம் தயாரிக்க உதவுகிறது. மற்ற எல்லாத் திரவங்களுடன் ஒப்பிடுகையில் நீரின் பரப்பு இழு விசை ( SURFACE TENSION) என்பது மிக அதிகமானது.

அனைத்தையும் கரைக்கும் தன்மை நீருக்கு மட்டுமே உண்டு. நாம் சமையலில் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு என்னும் உப்பை தனியாகப்பிரித்து… அதாவது நீரிலுள்ள ஹைட்ரஜனானது உப்பில் உள்ள சோடியம் அணுக்களையும் குளோரின் அணுக்களையும் தனித்தனியாகப் பிரித்து நீரினுள் மிதக்கச் செய்கிறது. நாம் உண்ணும உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அணுக்களை, நீரானது பிரித்து உடலின் செல்களுக்கு அனுப்பி வைத்து, ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

நீர் எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நீர் என்பது எங்கும் காணப்படுவது. நாம் தினமும் குடிக்கிறோம், குளிக்கிறோம், கழுவுகிறோம், கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம். ஆகவே அது நம் கண்களுக்கு ஒரு சாதாரணப் பொருளாக தெரிகிறது. அதன் அற்புதம் புரியவில்லை. அதன் மதிப்பும் தெரியவில்லை. உலகின் பல்வேறு தட்ப வெப்ப நிலைகளிலும் நீரானது திரவமாக, திடப் பொருளாக,நீராவியாக பின்னிப் பிணைந்துள்ளது. நீரின் குணங்களை ஆராய..ஆராய அது ஒரு வினோதமான முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இன்றும் உள்ளது. அல்லாஹ் நம்மை எந்த நீரிலிருந்து படைத்தானோ… அந்த நீரின் அருமை பெருமை சொல்லில் வடிக்க முடியாத ஒன்று.!

நீரின் விநோதங்களில் ஒன்று  தான்… குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவில் உறைந்து விடும். பொதுவாக நீர் கொதித்து ஆவியாவதற்கு 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். ஆனால் உலகின் உயர்ந்த (29,029 அடி) மலைச் சிகரமான கடுங்குளிருள்ள (-36 C – 60 C) எவரெஸ்ட் சிகரத்தில் 71  டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நீர் ஆவியாகிவிடும்.அது உயரத்தைப் பொறுத்தும்.. அழுத்தத்தைப் பொறுத்தும் அதன் கொதி நிலை மாறுபடும். ஒவ்வொரு 500 அடி உயரம் செல்லச் செல்ல அதன் கொதி நிலை அரை டிகிரி குறைந்து கொண்டே வரும். இது போல் பூமியுள் ஆழம் செல்லச் செல்ல வெப்பநிலை உயர்ந்து கொண்டே வரும். 100 அடி ஆழத்தில்  நீர் கொதிநிலை அடைய  140 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை.

நம் பூமியின் நிலப்பரப்பு வெறும் 30 %சதவிகிதம் மட்டுமே. மீதி  70 % கடல் நீராக இருக்கிறது. இந்த கடலும் ,97.5% சதவிகிதம் குடிக்கத் தகுதியில்லா உப்பாக உள்ளது. இதில் நிலத்தடி நீர்.  2.5% பனிப்பாறைகளாக துருவப் பிரதேசத்தில் உறைந்து  உள்ளது. உண்மையில் மனிதனின் பயன்பாட்டிலுள்ள நீரின் அளவு ஆறு,ஏரி,குளம், குட்டை,கிணறு  எல்லாமே வெறும்  0.26 % மட்டுமே! இந்த கால் சதவிகித நீரை நம்பியே இவ்வுலக உயிரினங்கள் அனைத்தும் வாழ்ந்து வருகின்றன.

நீரின் முக்கியத்துவம் கருதியே அதை விற்பனை செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. நீரேன்பது அல்லாஹ்வின் அருட்கொடை… ஆனால் இன்று நீர் வர்த்த பண்டமாக கார்ப்பரேட் அரசுகளால் விற்பனைக்கு வந்து விட்டது.

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.        அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.2925.

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.       அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி). புஹாரி.2353,6962.

இன்று இந்திய  அளவில் பாட்டில் தண்ணீர் வியாபாரத்தில் தமிழகமே முன்னிலையில் உள்ளது. சாராய அதிபர்கள், கல்விக் வள்ளல்கள், இவர்களுக்கு அடுத்தபடியாக நீரைக் கொள்ளையடித்து விற்பவர்களே பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். மத்திய  அரசின் 2012 தேசீய நீர்க் கொள்கையினபடி உயிர்காக்கும் நீர் இனி இலவசமில்லை. 1882 ஆம் ஆண்டு சொத்துரிமை கட்டுப்பாட்டுச் சட்டத்தை திருத்தி “ நிலத்தடி நீரின் மீது நிலத்தின் சொந்தக்காரனுக்கு எவ்வித உரிமையும் இல்லை “ என்று புதிய  சட்டம்  சொல்கிறது. சேவைத் தொழில்களான கல்வி,மருத்துவம் இவற்றோடு தண்ணீரும் இன்று விற்பனை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. உலகை ஆளும் பகாசுர கார்ப்பரேட் கம்பெனி அரசுகளின்  கைகளில், தண்ணீர்  சிக்கி சீரழிகிறது. இனி அரசு சாராயம் இலவசமாக கிடைத்தாலும் கிடைக்கலாம்…ஆனால் தாகம் தீர்க்கும் நல்ல தண்ணீர் காசு   இல்லாமல் கிடைப்பதரிது.

நீங்கள் குடிக்கும் தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு சென்று  விட்டால், பிறகு தண்ணீரின் ஊற்றை உங்களுக்கு கொண்டு  வருபவன் யாரென்று கவனித்தீர்களா? அல் குர்ஆன்.67:30.

புவியில் உள்ள திரவங்களிலேயே நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு மட்டும்தான், நமது அன்றாட வாழ்க்கையின் மொழியில் நுழைந்திருக்கிறது. H2O என்பதில் என்னென்ன இருக்கிறது என்பது பற்றித் தெரியவில்லையென்றாலும், H2O என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நீர் என்பது மிகவும் சாதாரணமான விஷயம்போல் தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல.

அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பொருள், நம்முடன் மிகவும் நெருங்கியிருப்பதாலேயே கொஞ்சம் சலிப்பூட்டுவதுபோல் தோன்றலாம். ஆனால், அது எந்த அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது என்பதும், தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பது என்பதும் நீரின் இயல்புக்குள் ஆழமாய் எட்டிப்பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

விதிகளை உடைக்கும்
எல்லா விதிகளையும் உடைக்கும் இயல்புடையது நீர். திரவங்கள் என்றால் என்ன என்பதை விவரிப்பதற்கான பெரிய வரையறையை 19-ம் நூற்றாண்டிலிருந்து வேதியியலாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீரின் விநோதமான பண்புகளை விளக்குவதில், இந்த வரையறைகள் எல்லாம் பெரும்பாலும் பொய்த்தே போகின்றன.

ஒரு பானத்தில் ஐஸ் கட்டியைப் போடும்போது என்ன நிகழ்கிறது என்பதில்தான், நீரின் விநோதமான இயல்பு அடங்கியிருக்கிறது. இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: உங்கள் முன்னே ஒரு திடப்பொருள் இருக்கிறது, அது தன்னுடைய திரவ நிலையின் மீதே மிதக்கிறது! ஆனால், திட மெழுகு திரவ மெழுகில் மிதக்காது; உருக்கிய வெண்ணெயில் வெண்ணெய்க் கட்டி மிதக்காது; எரிமலையிலிருந்து பீறிட்டு வரும் எரிமலைக் குழம்பில் கற்கள் மிதக்காது.

விநோத இயல்பு
உறைய வைக்கப்படும்போது நீர் விரிவடைவதால், ஐஸ் கட்டிகள் மிதக்கின்றன. குளிர்பதனப் பெட்டியின் உறைநிலைப் பெட்டியில் ஓர் இரவு முழுவதும் சோடாவை விட்டுவைத்தால், அதனால் ஏற்படும் விரிவு எவ்வளவு சக்திமிக்கது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்: கண்ணாடியையே சுக்குநூறாகச் சிதறடித்துவிடும்.

நீரின் இந்த இயல்பு கொஞ்சம் விசித்திரமாகவோ, முக்கியமற்றதாகவோ தோன்றலாம். ஆனால், நீரின் எண்ணற்ற விநோதங்களுள் ஒன்றான இந்த விசித்திர இயல்புதான், நமது கோளையும் அதிலுள்ள உயிர்வாழ்க்கையையும் வடிவமைத்தது.

யுகம்யுகமாக நிகழ்ந்த உறைதல், உருகுதல் என்ற தொடர் நிகழ்வுகள் காரணமாகப் பெரும் பாறைகள் வழியாக நீர் துளைத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது, அந்தப் பாறைகளை இரண்டாகப் பிளந்திருக்கிறது, அவற்றைச் சுக்குநூறாகச் சிதறடித்து மண்ணாக மாற்றியிருக்கிறது.

உறைபனியும் நீரும்

நமது பானங்களில் மட்டும் பனிக்கட்டிகள் மிதக்கவில்லை, நமது பெருங்கடல்களில் பனிக்கட்டிக் கடல்களும் (sea ice) பளபளக்கும் பனிப்பாளங்களும் மிதந்துகொண்டிருக்கின்றன.

உறைந்த ஏரிகளிலும் ஆறுகளிலும் உறைபனி சும்மா அலங்காரப் பொருள்போல இருப்பதில்லை. கீழே இருக்கும் நீரின் வெப்பநிலையைப் பாதுகாத்து, மேற்பரப்பின் வெப்பநிலையைவிட சில டிகிரி அதிகமாக வைத்திருக்கிறது, கடும் குளிர்காலத்திலும்கூட. 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான், நீர் அதன் அதிகபட்ச அடர்த்தியைக் கொண்டிருக்கும். ஆகவே, அந்த வெப்பநிலையில் ஏரி, ஆறு போன்றவற்றின் கீழ் பரப்புக்கு நீர் போய்விடும்.

நீர்நிலைகள் மேலிருந்து கீழாக உறைவதால், நீர்நிலையில் வாழும் மீன்களும் தாவரங்களும் மற்றும் பல உயிரினங்களும் கடும் குளிர் காலங்களில் தப்பிப் பிழைப்பதற்கு, வேறு இடங்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் எப்படியோ எண்ணிக்கையிலும் அளவிலும் அவை பெருகிவிடுகின்றன. புவியின் காலப்போக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த பனியுகங்கள், வேறு பல காலகட்டங்கள் போன்றவற்றை மீறியும் உயிரினங்கள் தப்பிப் பிழைத்ததற்கு மேற்கண்ட விநோதம்தான் காரணம்.

திரவமாக இருப்பது

மற்ற திரவங்களைப் போல் நீர் நடந்துகொண்டிருந்தால் ஈரப்பதமே இல்லாத, உறைந்துபோன நிலத்திலிருந்தும் உறைந்துபோன கடல்களிலிருந்தும் நொய்மையான உயிரினங்களெல்லாம் துடைத்தெறியப் பட்டிருக்கும்.

இது வெறும் தொடக்கம்தான். ஒரு கண்ணாடிக் குவளை நீரை எடுத்துக்கொண்டு அதனூடாகப் பாருங்கள். நிறமில்லா, மணமில்லா இந்த திரவத்தைப் பற்றிய விசித்திரமான விஷயம் என்னவென்றால், இது திரவமாக இருப்பதுதான்.

விதிமுறைகளையெல்லாம் நீர் பின்பற்றியிருக்குமானால் கண்ணாடிக் குவளையில் நாம் எதையும் பார்த்திருக்க முடியாது, நம் கோளில் எந்தக் கடலும் இருந்திருக்காது.

திரவமான வாயு

புவியில் உள்ள ஒட்டுமொத்த நீரும் நீராவியாகத்தான் இருக்க முடியும். உயிரினங்கள் வாழ முடிந்திருக்காத புவி என்று, அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன் உலர்ந்த மேற்பரப்பில் கொதித்துக்கொண்டும் அடர்த்தியாகவும் இருந்திருக்கக்கூடிய வளிமண்டலத்தின் ஒரு பகுதியாக நீராவியின் வடிவில் நீர் இருந்திருக்கும்.

நீர் மூலக்கூறு என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய கனமற்ற இரண்டு தனிமங்களின் அணுக்களால் ஆனது. அதாவது, ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்.

புவி மேற்பரப்பின் சூழல்களைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, நீர் என்பது ஒரு வாயுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடும் (H2S) ஒரு வாயுதான். ஆனால், நீரின் மூலக்கூறு எடையைவிட இரு மடங்கு எடை கொண்டது அது. நீர் மூலக்கூறினுடைய அளவில் மூலக்கூறுகளைக் கொண்ட அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு போன்றவையும் வாயுக்களே.

பிரிக்க முடியாதது

எல்லா விதிமுறைகளையும் நீர் ஏன் வளைத்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீரின் மேற்பரப்பில் கிழித்துக்கொண்டு செல்லும் நீர்ப்பூச்சியைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நீரில் மூழ்காமல் அந்தப் பூச்சியால் எப்படிச் செல்ல முடிகிறது? மற்ற எல்லா திரவங்களுடன் ஒப்பிடும்போது நீரின் பரப்பு இழுவிசை என்பது மிகவும் அதிகம்.

எனவேதான், அந்தப் பூச்சி நீரின் ஆழத்தில் மூழ்கிப்போகவில்லை. நீர் மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை என்பதால்தான், நீருக்குப் பரப்பு இழுவிசை என்ற இயல்பு ஏற்பட்டிருக்கிறது.

நீரின் ஒரு மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் மற்ற மூலக்கூறுகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்களுடன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை. ஒவ்வொரு நீர் மூலக்கூறும், இது போன்ற நான்கு ஹைட்ரஜன் பிணைப்புகள்வரை உருவாக்கக்கூடியவை. இப்படியாக ஒட்டுமொத்தமாகச் சேர்வது, திரவங்களில் நீருக்கே உரித்தான ஒருங்கிணைவுத்தன்மையைத் தருகிறது.

புவியின் மேற்பரப்பில் நீர் ஏன் திரவ நிலையில் இருக்கிறது என்பதற்கான காரணத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: ஹைட்ரஜன் பிணைப்புகள் நீரின் மூலக்கூறுகளையெல்லாம் ஒன்றாக வைத்திருக்கின்றன. அவற்றைப் பிரிக்க வேண்டுமென்றால் சற்றே அதிகமான ஆற்றல் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கொதிக்க வைப்பதன் மூலம் நீரை ஆவியாக்குவதைச் சொல்லலாம்.

உயிர் வளர்ப்பது

நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இதற்கு மேலும் வலியுறுத்திச் சொல்வதென்பது கடினம். நமது உடலின் மிகக் குறுகலான ரத்தக் குழாய்களின் வழியாகவும் நீர் மூலக்கூறுகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு செல்கின்றன என்றால், அதற்குக் காரணம் அந்தப் பிணைப்புகள்தான். பெரும்பாலும் புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே அவை செயல்படுகின்றன.

உடலுக்குள்ளே அவ்வளவு எளிதில் சென்றடைய முடியாத இடங்களுக்கெல்லாம் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துகளையும் நீர் கொண்டுசேர்ப்பது இப்படித்தான். தரையின் ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சி இலைகளுக்கும் கிளைகளுக்கும் அனுப்பி, சூரிய ஒளியில் அவற்றைச் செழிக்க வைப்பது தாவரங்களால் சாத்தியப்படுவதும் இந்த ஹைட்ரஜன் பிணைப்புகளால்தான்.

எல்லாம் சாத்தியம்

நீரின் இந்த ஒட்டும் தன்மைதான், நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கருதும் பல்வேறு நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்துகிறது. அதாவது, நம் வீடுகளில் உள்ள ரேடியேட்டர்களுக்கு நீரைச் செலுத்துவது, டப்பாவில் இருக்கும் ஆரஞ்சு சாற்றைப் பிதுக்கிக் குடிப்பது, நமது தோட்டங்களில் உள்ள பூச்செடிகளுக்குக் குழாய் வழியாக நீரை இறைப்பது போன்ற எல்லாவற்றுக்கும் அந்தத் தன்மைதான் காரணம்.

நீரைக் குறுக்க முடியாது என்பதால்தான் இவையெல்லாம் சாத்தியமாகிறது. ஏனெனில், மூலக்கூறுகளெல்லாம் ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்வதுடன் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. மற்ற திரவங்களில் இருப்பதைவிடவும் இந்த நெருக்கம் அதிகம். ஒன்றைக் குறுக்குவது எந்த அளவுக்குக் கடினமோ, அதேபோல் அதன் ஒரு பக்கத்தில் மட்டும் அழுத்துவதன் மூலம் அதைப் பாயவைப்பதும் மிகவும் எளிது.

அனைத்தையும் கரைக்கும்

நீரை மட்டுமே நீர் ஈர்ப்பதில்லை, அது கடக்க நேரிடும் எல்லாவற்றுடனும் ஒட்டிக்கொள்கிறது. அனைத்தையும் கரைக்கக்கூடிய கரைப்பான் என்ற தகுதியைக் கிட்டத்தட்டப் பெறுவது, நீர் மட்டும்தான். மற்ற சேர்மங்களைத் தனித் தனியாகப் பிய்த்துப்போடக் கூடிய தன்மை கொண்டது அது. சோடியம் குளோரைடு படிகங்களால் ஆன சமையல் உப்பு நீரில் எளிதாகக் கரைகிறது. நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள், உப்பில் உள்ள சோடியம் அணுக்களையும் குளோரின் அணுக்களையும் படிகத்திலிருந்து தனித்தனியாகப் பிய்த்து நீரினுள் மிதக்கச் செய்கின்றன.

கங்களில் தூய்மையான நீரை உருவாக்குவதும்கூடக் கடினமே. நாம் அறிந்திருக்கும் அனைத்து வேதிச் சேர்மங்களும், நம்மால் உணரக்கூடிய வகையில் சிறிதளவுக்காவது நீரில் கரையும். அதனால்தான், நாம் அறிந்த வேதிப்பொருட்களிலேயே மிக அதிக அளவில் வினைபுரியக் கூடியதும் அரிக்கக் கூடியதுமாக நீரே இருக்கிறது.

உடலுக்கு அடிப்படை
ஏராளமான பொருட்களுடன் ஊடாடக் கூடிய இயல்புதான் உயிர்வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இந்த இயல்பால்தான் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும் வேறு பொருட்களையும் நீர் கரைத்து நம் உடலுக்குள் பரவ விடுகிறது. உயிர்வாழ்க்கைக்கு அடிப்படையான டி.என்.ஏ., புரதங்கள், செல்களில் உள்ள சவ்வுகளை உருவாக்கும் மூலக்கூறுகள் போன்றவையும் இன்ன பிறவும் நீரில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.

அதேநேரத்தில் நீரை விலக்கும் எண்ணெய் போன்றவையும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள நூறு கோடிக்கணக்கான புரதங்கள், சரியான அளவில் மடங்கி உருவங்களைப் பெற்றுத் தங்கள் பணிகளைச் சரியாகப் புரிகின்றன என்றால், அதற்குக் காரணம் நீர்தான். நீருடன் உறவாடுவது, அந்தப் புரதங்களைச் சரியான அளவில் முப்பரிமாணங்களை பெறச் செய்கிறது.

எங்கும் எதிலும்
நீங்கள் எந்தத் திரவத்தைப் பற்றி நினைத்துப்பார்த்தாலும் அதில் நீர் இருக்கிறது. ரத்தம், பியர், ஆப்பிள் பழரசம் என்று எதையெடுத்தாலும் எல்லாமே நீர்தான். அதில் சிறிதளவு மற்ற விஷயங்களும் கலந்து பரவியிருக்கின்றன, அவ்வளவுதான். பெட்ரோலியம், சமையல் எண்ணெய் போன்ற தூய்மையான திரவங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் நீருடன் நாம் கொள்ளும் உறவுக்குப் பக்கத்தில், அவையெல்லாம் வரவே முடியாது.

நீர் என்பது எங்கும் காணப்படுவது, நம்முடன் நெருக்கமானது என்பதாலேயே, அதை ஒரு முக்கியமான விஷயமாகவே நாம் கருதுவதில்லை: தினமும் நாம் அதைக் குடிக்கிறோம், தொடுகிறோம், அதைக் கொண்டு கழுவுகிறோம், துவைக்கிறோம், பொருட்களை ஈரப்பதத்துக்கு உள்ளாக்குகிறோம், உலரவைக்கிறோம், நீரைக் கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம், அதில் நீந்துகிறோம்.

முற்றுப்பெறாத புதிர்
வெவ்வேறு தட்பவெப்ப நிலையையும் அழுத்தத்தையும் கொண்டிருக்கும் நீரின் வெவ்வேறு பரப்புகளைத் தேடி பயணம் செய்ய வைக்கும் இயற்கைச் சூழலைக் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். வேறுபட்ட அந்தத் தட்பவெப்பநிலைகளில் நீர் வெகு லாவகமாகத் திடப்பொருளாகவும் திரவமாகவும் வாயுவாகவும் மாறுகிறது (சில சமயங்களில் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளையும் அடைகிறது).

நீரை ஆராய ஆராய, அது மென்மேலும் புதிரானதாகத்தான் தோன்றுகிறது. நாம் அதிலிருந்து உருவானவர்கள் என்பதால், அதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நாம் எதனால் உருவாகியிருக்கிறோமோ, அது இப்படிப்பட்ட ஒரு புதிராக இருக்கிறது என்பதே, ஒருவேளை நமக்கு வியப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

மாணவன் கண்டுபிடித்த விளைவு
நீரைப் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்கு விநோதமாகத் தோன்றினால், கீழே வரும் விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?: குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவாக உறைந்துவிடும். இந்த விசித்திர இயல்புக்கு பெம்பா விளைவு என்று பெயர் (Mpemba effect).

தான்சானியாவைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன் எராஸ்டோ பி பெம்பா, 1963-ல் வகுப்பறைப் பரிசோதனையின்போது கண்டுபிடித்ததால்தான், அந்த விளைவுக்கு இந்தப் பெயர். சூடான ஐஸ்கிரீம், ஜில்லென்ற ஐஸ்கிரீமைவிட வேகமாக உறைந்துபோனதை அவன் கண்டுபிடித்தான். அவனது ஆசிரியர் அதை நம்பாமல், அவனைக் கேலி செய்திருக்கிறார்.

ஆனால், நீரின் விசித்திரமான இந்த இயல்பைக் கண்டுகொண்டவர்கள் பெம்பாவுக்கு முன்னரே இருந்திருக்கிறார்கள்; அரிஸ்டாட்டில், ஃபிரான்சிஸ் பேகன், ரெனே தெகார்தே போன்றோரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

(அலோக் ஜா, ஐ.டிவி நியூஸின் அறிவியல் செய்தித்தொடர்பாளர், நீரைப் பற்றி ‘தி வாட்டர் புக்’ என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.)

தி கார்டியன்’, தமிழில்: ஆசை

Leave a Comment

Previous post:

Next post: