அல்லாஹ்வும் அவன் தூதரும் (ஸல்)

in பொதுவானவை

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் கொண்டு திருப்தியடைந்து “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; (என்றும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மேலும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்” என்றும் அவர்கள் கூற வேண்டாமா? 9:59

பொறுப்புள்ள பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? ஏறத்தாழ ஐந்து வயதிலிருந்தே தங்களுடைய பிள்ளைகளைக் கண்டிப்புடன் கூடிய அன்பு காட்டி வளர்க்கத் துவங்குகிறார்கள். அதிகாலையிலேயே எழுப்பி விட்டு, காலைக் கடனை முடிக்கச் செய்து மதரசா டியூசன் என்று அனுப்புவது, அதன் பின் பள்ளிக்கூடம் அனுப்புவது, மதியம் பள்ளியிலிருந்து திரும்பியதும் சாப்பாட்டை முடித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் விளையாட்டு என்றால் தங்கள் கண்ணெதிரே விளையாடச் செய்வது, மீண்டும் மதரசா டியூசன் என்று அனுப்புவது பிறகு இரவுச் சாப்பாட்டை முடித்து நேரத்தோடு தூங்க வைப்பது என்று நாள் முழுதும் ஒருவித கட்டுப்பாடான வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதன் காரணம் என்ன?

தங்கள் பிள்ளைகளுக்குக் கூடா நட்பு ஏற்பட்டு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர் காலத்தில் தறுதலையாக, தற்குறியாக, கண்டவர்களிடமெல்லாம் கையேந்துபவர்களாக ஆகி விடக்கூடாது. தன்னம்பிக்கையுள்ளவர்களாக சொந்தக்காலில் நிற்பவர்களாக என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்நீச்சல் போடுபவர்களாக, பெற்றோரைப் பேணுபவர்களாக ஆக வேண்டும் என்பதற்காகத் தான். இதையெல்லாம் அந்தச் சிறு வயதில் அவர்களிடம் சொன்னால் அவர்களுக்கு விளங்காது. அவர்கள் பெரியவர்களாகி உயர்ந்த அந்தஸ்துள்ள வாழ்க்கையை அடையும் போதுதான் அது விளங்கும். அவர்கள் ஏன் அவ்வளவு கட்டுப்பாடு காட்டி வளர்த்தார்கள் என்பதும் விளங்கும். பெற்றோரின் அருமையும் தெரியும்.

இதையேதான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்(ஸல்) சொல்கிறார்கள்.

அதாவது, இந்த சமுதாயத்தின் பிள்ளைப் பருவமென்பது நபி(ஸல்) வாழ்ந்த குர்ஆன் இறங்கிய அந்த கால கட்டமாகும். அந்தக் கால கட்டத்தில் ஜனநாயகமோ கம்யூனிசமோ இருக்கவில்லை. அந்த கால கட்டத்தில் வாழ்ந்த அந்த மக்களிடம் இயக்கங்கள் கூடாது, போராட்டம் கூடாது, பேரணி கூடாது, இட ஒதுக்கீடு கூடாது என்று பேசியிருந்தால் அவர்களால் அதை விளங்கியிருக்க முடியுமா? அப்படீன்னா என்ன என்று கேட்டிருப்பார்கள் அல்லவா? அதனால்தான் அந்த மாதிரி நேரடியான வார்த்தைகள் குர் ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெறவில்லை. மாறாக, அன்று வாழ்ந்த அவர்களும் இன்று வாழ்கிற நாமும் இன்னும் நமக்குப் பின்னால் வரப்போகிறவர்களும் யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லாத ஒரு வாழ்க்கை நெறியை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்(ஸல்) நமக்கு தந்திருக்கிறார்கள். அதற்குள், மேலே சொல்லப் பட்ட வார்த்தைகள் எல்லாம் இலை மறைகாயாக இருக்கின்றன.

அதாவது, அதிகாலையில் எழும்புதல், ஐங்கால தொழுகைகளைத் தவறாது பேணி நிலைநாட்டுதல், ஹலால், ஹராம் பேணி நடத்தல், குர்ஆனையும் ஹதீஸையும் நேரடியாகப் படித்து அதன்படி நடத்தல், தூய்மை, கடின உழைப்பு, பொறுமை, வீண் விரயம் செய்யாமை (சிக்கனம்) மது சூது, விபச்சார விலக்கு, ஒற்றுமை, ஒரே தலைமை, பைத்துல்மால், கலப்படம் செய்யாமை, அளவை நிறுவையில் மோசடி செய்யாமை, இருப்பதைக் கொண்டு திருப்தி படுதல், வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் உணவால் நிரப்புதல், பகிர்ந்துண்டு வாழ்தல், விட்டுக் கொடுத்தல், அறிவைத் தேடுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி பெற்றோரும் ஆசிரியரும் கூட கற்றுத்தராத பாடத்தை அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும், நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு சேர வாழ்வில் கடைபிடிக்கும் போதுதான் அது விளங்கும். அல்லாஹ்வுடைய அருமையும், அல்லாஹ்வுடைய தூதரின்(ஸல்) அருமையும் தெரியும். அவர்கள் ஏன் அவ்வளவு கட்டுப்பாடு காட்டினார்கள் என்பதும் தானாகவே விளங்கும். அது விளங்கும் போதுதான், அவ்லியாக்களிடம் கையேந்த வேண்டியதில்லை, அரசியல்வாதிகளிடம் கையேந்த வேண்டியதில்லை, இயக்கங்கள், அவற்றின் தலைவர்கள், போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம், மாநாடு, இட ஒதுக்கீடு இவை எதுவுமே தேவையில்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் (ஸல்) மட்டும் போதும் என்பது தெரிய வரும்.

யார் (சத்தியத்தின் அழைப்பை) ஏற்றுக்கொண்டு, நற்செயல்கள் செய்(யத் தயாரா)கின்றார்களோ அவர்களுக்கு (நிம்மதியும்) மகிழ்ச்சியும் நல்ல முடிவும் காத்திருக்கின்றன.- 13:29

Leave a Comment

Previous post:

Next post: