அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத சமுதாயம்!

Post image for அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத சமுதாயம்!

in பிரிவும் பிளவும்

உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள், கேவலப்படுத்தப்படுகிறார்கள். பற்பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இதுபோன்று முஸ்லிம்களின் அவல நிலைகள் பலவற்றைக் குறித்துப் பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் கட்டுரைகள் வெளி வருவதையும், பேச்சாளர்களில் சிலர் இது குறித்து ஆவேசமாக உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம்மீது கடமையாக ஆகிவிட்டது. (குர்ஆன் 22:38, 30:47, 10:103) என்று அல்லாஹ் குர்ஆனில் உத்திரவாதம் அளித்திருந்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஸ்லிம்களுக்கு உதவிகள் வராமல் உலகில் அவமானப்படுவது ஏன் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமான ஒன்றாகும்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் (குர்ஆன் : 8:2) என்று இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலமாகக் கூறியுள்ளான். அல்லாஹ் கூறும் இந்த உயர்ந்த குணத்தின் அடிப்படையில் தான் முஸ்லிம்களாகிய நாம் இருக்கிறோமா? என்பதை ஒருசில விஷயங்களின் மூலமாகப் பார்ப்போம். (நபியே) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு(தூது)வருக்கும் தூதுச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டது (என்னவென்றால் அல்லாஹ்வுக்கு) நீங்கள் இணை வைத்தால் உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்). (குர்ஆன் : 39:65)

அல்லாஹ்விற்கு இணை வைத்தால் நமது நல்லறங்கள் அழிந்து நரகத்தில் நிரந்தரமாக தங்கி வேதனையை அனுபவிக்க நேரிடும் என்று மேற்கண்ட வசனத்தோடு மேலும் பல வசனங்களை ஆதாரமாகக் கொண்டு கூறினாலும் முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் இணை வைப்பிலிருந்து விடுபடத் தயாரில்லை. எந்தெந்த செயல்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்க கூடியவை என்பதை அறிந்து கொள்ளக்கூடத் தயாரில்லை.

…இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்,… (குர்ஆன் :5:3)

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு கற்றுக் கொடுக்கிறீர்களா? (குர்ஆன் 49:16).
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக ஆக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு உள்ளனரா? (குர்ஆன் : 42:21)

இன்னும் இவைபோன்ற பல வசனங்களில் அல்லாஹ் கூறுவதை மேற்கோள் காட்டி நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக வணக்க வழிபாடுகளை உருவாக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட வணக்க வழிபாடுகள் எல்லாம் பித்அத். இத்தகைய வழிபாடுகள் நம்மை நரகில் சேர்க்கும் என்று உணர்த்திய பிறகும் முஸ்லிம்கள் பித்அத்திலிருந்து விடுபடத் தயாராக இல்லை.

தொழுகையை நிலைநாட்டுங்கள் (குர்ஆன்: 2:43, 110) என்று பல வசனங்களில் முஸ்லிம்களின் முதன்மை அடையாளமான தொழுகையை அல்லாஹ் மிகவும் வலியுறுத்திக் கூறியிருக்கும் வசனங்களைக் கொண்டு முஸ்லிம்களே! ஐவேளைத் தொழுகைகளைப் பேணுதலாகத் தொழுது வாருங்கள் என அழைப்பு விடுத்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து தொழுகையாளிகளாக மாறத் தயாரில்லை. எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்துப் பல பிரிவினராக பிரிந்து விட்ட னரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எந்த சம்பந்த முமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்து கொண்டிருந்த(இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் (பிரிவினைவாதிகளான) அவர்களுக்கு அறிவித்துவிடுவான். (குர்ஆன் 6:159)

இன்னும் இதே கருத்தில் அமைந்த வசனங்களான 6:153, 10:19, 21:92,93, 23:53, 30:32 ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு மத்ஹபின் பெயராலோ, தரீக்காக்களின் பெயராலோ, ஜமாஅத்துகளின் பெயராலோ, இயக்கங்களின் பெயராலோ, கழகங்களின் பெயராலோ, மன்றங்களின் பெயராலோ, சங்கங்களின் பெயராலோ, பேரவைகளின் பெயராலோ, கட்சியின் பெயராலோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்கள் பிரியக்கூடாது என்று கூறினாலும், பிரிவினைகளிலிருந்து முஸ்லிம்கள் விடுபடத் தயாராக இல்லை. அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன் (குர்ஆன் : 22:78) என்ற வசனத்தையும் இன்னும் இதே கருத்தில் அமைந்த 8:40, 9:116, 29:22, 42:31, 67:20 ஆகிய வசனங்களையயல்லாம் ஆதாரமாக காட்டி அல்லாஹ்தான் நமது பாதுகாவலன், உதவியாளன்; எந்த அரசியல் கட்சியும், எந்த இயக்கமும், எந்தத் தலைவரும் நமது பாதுகாவலன் கிடையாது என்று கூறும் போது சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் அதிலிருந்து விடுபடத் தயாரில்லை. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூத ருக்குக் கட்டுப்பட்டிருக்க கூடாதா? எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். குர்ஆன் : 33:66,67,68, 2:166, 167, 40:47,48, 2:170, 5:104, 31:21, 43:23 ஆகிய வற்றை ஆதாரமாகக் கொண்டு அறிஞர்கள், தலைவர்கள், முன்னோர்கள் என யாரையும் பின்பற்றக் கூடாது எனக் கூறினாலும் திருந்துவதற்குத் தயாராக இல்லை. குடி பழக்கம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கம் உடையவர்களிடம் அது சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களை எடுத்துச் சொல்லி அறிவுரை கூறினாலும் திருந்தத் தயாரில்லை.

குடும்ப விவகாரம், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், திருமணம், சொத்துப் பிரச்சனை, வட்டி இன்னும் இதுபோன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொள்வதில்லை. என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்த குர்ஆனை முற்றிலும் வெறுத்து (புறக்கணித்து) விட்டார்கள் என்று இத்தூதர் (மறுமையில்) கூறுவார். (குர்ஆன் 25:30)

இந்த சமுதாயத்தினர் குர்ஆனை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த சமுதாயத்தினர் மீது மிகுந்தபாசம் கொண்ட நபி(ஸல்) அவர்களே குற்றம் சுமத்தும் அளவிற்கு முஸ்லிம்கள் குர்ஆனுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டு வாழ்ந்தால் அல்லாஹ்வின் உதவிகள் இந்த சமுதாயத்திற்கு எப்படி வரும்?

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு :
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த காஃபிர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அல்லாஹ் பேருதவி புரிந்தான். அவர்களின் உள்ளங்களில் அச்சத்தை (அல்லாஹ்) போட்டான். (குர்ஆன் : 33:26, 59:2, 8:12) என்று மூன்று வசனங்களில் அல்லாஹ் கூறுவதை பார்க்கலாம். ஆனால் இன்று உலக அளவில் 150 கோடி முஸ்லிம்கள் இருந்தும் இத்தகையநிலை ஏன் ஏற்பட வில்லை? ஸஹபாக்களுக்குச் செய்த உதவியை போன்று அல்லாஹ் ஏன் நமக்குச் செய்யவில்லை? இதற்கானக் காரணம் என்ன? நபிமொழியைப் பாருங்கள்.

உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும் பிற சமுதாயங்கள் உங்களை கொன்றிட (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) ஆகிவிடுவீர்கள்.

உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங் களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்க ளுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை’ ஏற் படுத்திவிடுவான் என்று பதிலளித்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். ”உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரழி), நூல்: அஹ்மத்21363

50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நாடுகள் இருந்தும் அந்த ஆட்சியாளர்களின் உள்ளங்களில் ”வஹ்ன்” தாராளமாக இருப்பதால்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் எத்தகையவன் முறைகளை செய்தாலும் அதை கண்டு கொள்ளாமல் ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். மேலும் முஸ்லிம்களாகிய நாம் சிறு கூட்டமாக இருப்பதால்தான் தொல்லைப்படுத்த படுகிறோம் என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட நபிமொழி உணர்த்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம்களின் உலக மோகம் :
முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ள வரம்பு மீறி உலகத்தை நேசிப்பது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியுள்ள எச்சரிக்கைகளைப் பாருங்கள்.

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை; (அல்லாஹ்வை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது; விளங்கமாட்டீர்களா? குர்ஆன் : 6:32

…மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது? குர்ஆன் : 9:38

இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். குர்ஆன் 35:5

காஃபிர்கள் நகரங்களில் (சொகுசாக) சுற்றி திரிவது உம்மை மயக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். குர்ஆன் 3:196

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆட்டு மந்தைக்குள் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்கள் ஆட்டு மந்தையிலுள்ள ஆடுகளை(த்தாக்கி) அழிப்பதை விட ஒரு மனிதனுக்குச் செல்வத்தின் மீதும், செல்வாக்கின் மீதுமுள்ள பேராசையானது (உலக மோகம்) அவனது மார்க்கத்தை மிகவும் அழிக்கக்கூடியதாகும்.
அறிவிப்பாளர் : கசல் பின் மாலிக்(ரழி), நூல் : திர்மிதி 2298

உல்லாசங்களை உடைத்துத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), நூல் : திர்மிதி 2229

இன்னும் இவைபோன்ற பல அறிவுரைகள் மூலமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மறுமையை விட அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை தரக்கூடாது என முஸ்லிம்களை எச்சரித்திருந்தும், இந்த உலகத்தின் மீது மோகங்கொண்டு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்து காஃபிர்களைப் போன்று மறுமை வாழ்வை மறந்து நாம் வாழ்ந்தால் இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வெற்றி கிடைக்குமா? சிந்தியுங்கள்.

இழிவு நிலை நீங்க :
(மனிதர்களே) உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக ஆக்கியதைப் போல் இவர்களையும் நிச்சயமாக பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவன் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் இவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அமைதியைக் கொண்டு பயத்தை நீக்கிவிடுவதாகவும் நிச்சய மாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இவர்கள் எனக்கே அடிபணிவார்கள், எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். (குர்ஆன் : 24:55)

முஸ்லிம்களே! ஸ்பெயினை நாங்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். உடலாலும், உயிராலும், பொருளாலும், தியாகம் செய்து இந்திய விடுதலைக்கு நாங்கள் பெரும் பங்கு வகித்தோம் என்று கூறிக் கொண்டிருப்பதாலோ, இழந்த உரிமைகளை மீட்போம் இருக்கும் உரிமைகளைக் காப்போம். அரசியலில் எழுச்சி பெறுவோம், அதிகாரத்தை நம தாக்குவோம். பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை, இன்னும் இவை போன்ற பல வகையான கோஷங்களை எழுப்புவதாலோ மட்டும் முஸ்லிம்கள் நிம்மதியான வாழ்வு வாழ வழி ஏற்படாது. அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து நற்செயல்கள் புரிந்து அல்லாஹ் வுக்கு எவரையும் எதையும் இணையாக்காமல் முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே ஆட்சியதிகாரத்தோடு நிம்மதியான வாழ்வும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் வாக்குறுதி அளித்துள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ் வாக்கு மீறமாட்டான். குர்ஆன் 3:9-ல் அல்லாஹ் தனது நூலில் வாக்குறுதி ஒன்றை அளித்தால் அதில் ஒருபோதும் எந்த மாற்றமும் செய்யமாட்டான் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டால் நிச்சயமாக குர்ஆனில் அல்லாஹ் வாக்களித்துள்ள ஆட்சியதிகாரத்தை முஸ்லிம்களிடம் தருவான். அதற்காக முஸ்லிம்களாகிய நாம் தயாராக வேண்டாமா?

குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் ஒன்றிணைவோம்:
நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (ஜமாஅத் தாக) அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்… (குர்ஆன் 3:103)

அவனே(அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயிரிட்டான். (குர்ஆன் 22:78)

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அனைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறவனை விடஅழகிய சொல்லை கூறுபவன் யார்? (குர்ஆன் : 41:33)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டுமே சொல்லி செயல்பட்டார்கள். இதைப் போன்றே நாமும் மத்ஹபு மற்றும் இயக்கப் பிரிவுகளிலிருந்து விலகி முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே உண்மையான வெற்றியைப் பெறமுடியும். மாறாக நாம் நமது விருப்பங்களை மார்க்கத்தில் நுழைத்து அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து பிரிவினைகளை ஆதரித்தால் ஒருபோதும் வெற்றி இலக்கை அடைய முடியாது.

இனி வரும் காலங்களில் பிரிவினைவாதம் தொடருமானால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் உருவாகும் என்பதை எச்சரிக்கின்றோம். முஸ்லிம்களே! அறிவைக் கொண்டு மட்டும் நாம் திட்டங்கள் தீட்டி வெற்றி பெற முடியாது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிவதன் மூலமாகத்தான் முழுமையான வெற்றியை பெற முடியும். அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று வெறும் வாயளவில் கூறாமல் அதை நடை முறைப்படுத்தி காட்டுவோமாக! அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
(குர்ஆன் : 5:100) (மேலும் பார்க்க: 8:46)

(இறை நம்பிக்கை கொண்டவர்களே) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (குர்ஆன் : 3:160)

முஹம்மது ஸலீம், ஈரோடு

{ 3 comments… read them below or add one }

A.ABDULRAJAK April 4, 2015 at 1:28 pm

dear muslims
last month the indian home minister told the press that the 73 groups of muslims living in india. the non muslim can understand the our groups .
most of indian muslims not studied about original islam as well as common education.so we are in below level . we need urgent agenda for common education and islamic education from school level.

Reply

umar June 19, 2015 at 6:07 pm

allah akpar

Reply

A.ABDULRAJAK August 2, 2015 at 12:46 pm

dear brothers

Abdul kalam was a jin or human ?

we know DR.abdul kalam died this week . Tamil nadu non muslim people told abdul kalam is ” AGNI PUTHIRAN”and posture . They donot know about islam.

But sunnath al jammath people also posturing “agni puthiran” . Islamic basic knowledge also they donot know. Jin is created from fire (agni) . Human is created from essance of clay (soil). ABDUL KALAM WAS A SON OF SOIL. NOT A SON OF FIRE.

Reply

Leave a Comment

Previous post:

Next post: