அடிப்படை விளக்கம்
அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.
அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.
படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.
அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
….. அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)
இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.
நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.
இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:
1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.
3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.
எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், “ஸித்தீக்’ என்ற உண்மையாளர்கள், “ஷஹீத்’ என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், “ஸôலிஹ்’ என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.
அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)
மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவைகள்:
1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது “இலாஹ்’ என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் “உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்’ என்பதாகும்.
2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.
3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது “தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.
4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.
5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.
இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட “ஆயத்துல் குர்ஸி’ என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:
1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.
2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும். அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.
3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.
4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது. அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.
5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் “குர்ஸி” ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.
6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.
“குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்” என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.
العقيدة الواسطية
شيخ الإسلام ابن تيمية
DARUL HUDA
{ 1 comment… read it below or add one }
ALLAH AKBAR ALLAHAKBAR ALHAMTHULILLAHIRAPPILAALAMEEN VERYGOOD ARTICAL THANKS