அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?

Post image for அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா?

in இஸ்லாம்,பிரிவும் பிளவும்

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நெறிநூலில்

‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3)

‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19)

‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85)

இது போன்ற பல வசனங்களில் தான் அங்கீகரித்துள்ள வாழ்க்கை வழிமுறைகளை மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் அதன்படி வாழ்ந்துகாட்டவும் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக் கொள்ளும் அடியார்களுக்கு முஸ்லிம்கள் என்று அல்லாஹ்வே அழகிய பெயரிட்டுள்ளான்.

‘…..அவன்தான் (இதற்கு) முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்……” (அல்குர்ஆன் 22:78)

இன்னும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள் என்றும் நம்மை கருணையுடன் எச்சரிக்கின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3:102)

இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இஸ்லாம் எனும் அல்லாஹ்வின் மார்க்கம் பற்றியும் அதன்படி வாழ்ந்திட்ட நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைப் பற்றியும் நாம் ஒவ்வொருவரும் குர்ஆன் மூலமாக விள ங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையுள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் உண்மையில் அல்லாஹ்வின் மார்க்கத்தின்படி வாழ்கின்றோமா? என்று சுய பரி சோதனை செய்யத் தவறினால்! இன்னும் நாம் நல்லறங்களாக பிறர் சொல்லக் கேட்டு அல்லது பார்த்து செய்யும் அமல்கள் மார்க்கத்திற்குட்பட்டதா?  ரசூல்(ஸல்) அவர்களின் வழி முறையா? என்று சுய பரிசோதனை செய்யத் தவறினால், நாம் மறுமையில் நஷ்டமடைந்தவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்க நேரிடும். காரணம் அல்லாஹ் தன் கட்டளைகளையும் தன் தூதரையுமே பின்பற்ற எச்சரித்துள்ளான். நம் முன்னோர்களையோ, இவ்வுலகில் அறிஞர்கள், மேதைகள் என்று அழைக்கப்படுபவர்களையோ அல்ல.

இந்தக் கட்டளைகளை முறையே நாம் உணர்ந்து கொள்ளாத காரணத்தால் ரசூல் (ஸல்) அவர்கள் வழிகாட்டிய முஸ்லிம் சமுதாயம் இன்று பல பிரிவுகளாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இறக்கியருளிய குர்ஆன் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல், அதனை நம் வீட்டு அலங்காரப் பொருளாக ஆக்கிக் கொண்டதால் இந்த இழிநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.

முஸ்லிம்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் கண்களால் காண்பதையும், காண இயலாததையும், நம்மையும், இன்னும் எத்தனையோ படைப்புகளையும், பிரபஞ்சத்தையும், பிரமிக்க வைக்கும் சிறப்புடனும் நேர்த்தியுடனும் அல்லாஹ் படைத்துள்ளான். அத்தகைய ஆற்றல்மிக்க அவன் அருளிய மார்க்கத்தை பின்பற்றுவோர், இவ்வண்ணம் பல பிரிவுகளாக பிரிந்து சிறுமையடைய சாத்தியம் உண்டா? இல்லை.

முஸ்லிம்கள் தம் மார்க்கத்திற்கு சாட்சியாக இருக்கின்றார்கள் என்று அல்லாஹ் நம்மை தன் குர்ஆனில் பெருமைப்படுத்தியிருக்கும்போது அதற்கு தகுதியான நிலை நம்மிடையே உள்ளதா என்று சிந்திப்போமானால் நாம் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது புரியும். நாம் அறிந்தோ அறியாமலோ மத்ஹப், தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற பிரிவுகளைப் பின்பற்றி நம்மை ரசூல்(ஸல்) அவர்கள் நிலைநிறுத்திய ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து பிரித்துக் கொண்டதால் நாம் வழி தவறி விட்டோம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடம் நான் பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் ஹனஃபி யாக அல்லது ஷாஃபி, ஹம்பலி, மாலிக்கி, JAQH, TNTJ, INTJ, ISM, IAC, IIM, அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, AQH, காதிரியா, ஷாதுலியா, நக்ஷபந்தியா, அகில இந்திய தௌஹீத் ஜமாஅத், ஒருங்கிணைந்த தௌஹீத் ஜமா அத் etc., etc..போன்ற அமைப்புகளின் கொள்கைகளை பின்பற்றிய முஸ்லிமாக வாழ்ந்தேன் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோமா? அல்லது, என் இறைவனே உன்னுடைய குர்ஆனையும் உன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றி உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிமாக என்னால் இயன்ற நல்லமல்களை செய்து வாழ்ந்திருந்தேன் என்று கூற விரும்புவோமா? சிந்தித்துப் பாருங்கள்.

முஹம்மது(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்களிடையே பொறாமை, பகைமை, நயவஞ்சகம், பதவி ஆசை, மார்க்கப்பற்றில் குறை போன்ற குணமுள்ள பலர் இருந்திருந்த போதிலும், இவை மனித வர்க்கத்தின் இயல்பு என்பதை உணர்ந்து அப்படிப்பட்டவர்களையும் அரவணைத்து ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாக பிரிவுகள் இல்லாமல் நபி(ஸல்) செயல்படுத்திக் காட்டினார்கள். மக்களிடையே நற்குணங்கள் வளர்வதற்கு அல்லாஹ்வைப் பற்றியும், மறுமை நாளைப் பற்றியும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவர்களாக இருந்தார்கள். இதுவே முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டலாக இருந்ததென்று குர்ஆனும் பல ஹதீசுகளும் எடுத்தியம்பும் உண்மை.

இன்று எத்தனையோ மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நல்லெண்ணத்தில் தங்கள் செயல்பாடுகளை ஆரம்பித்தாலும், ரசூல்(ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிகளில் தங்கள் மனோ இச்சைகளின்படி பல பெயர்களில் இயக்கங்களையும், கழகங்களையும், தொண்டு நிறுவனங்களையும் தோற்றுவித்து முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள். அவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் தானே சொல்கின்றார்கள் என்று நாமும் அவர்களுடன் அவர்களது கொள்கைகளை பின்பற்றியவர்களாக வாழ்கின்றோம். ஒவ்வொரு முஹல்லாவிலும் முஸ்லிம்கள் பல பிரிவுகளாக இருப்பதன் காரணம் நாம் ரசூல்(ஸல்) அவர்கள் பெயரிட்டு வலியுறுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற கூட்டமைப்பு முறையை பின்பற்றத் தவறியதேயாகும்.

‘என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்.

நாம் மீண்டும் ஒன்றுபட்ட சமுதாயமாக மாற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உள்ளது. அது, ஸஹீஹான ஹதீசாக புகாரி ஆங்கில மொழிபெயர்ப்பு 4: 803, 9: 206

நம்;மிடையே மார்க்கத்தை சரிவர அறியாதோரும், மார்க்க கடமைகளில் குறைவுள்ளோரும் இருப்பின் அவர்களிடமிருந்து நம்மை பிரித்துக் காட்ட சுன்னத் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் என்பன போன்ற பிரிவுப் பெயர்களால் நம்மை வேறுபடுத்திக் கொள்ளாமல் ஒரே ஜமாஅத்தாக இருந்து நமக்குள் மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்து கொண்டும் வாழ வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறை.

ஒவ்வொரு முஹல்லாவாசிகளின் நலனுக்காக மார்க்கப்பணிகள், இறையில்லம் பராமரிப்பு, வாழும் இடங்களின் வளர்ச்சிப் பணிகள், சமுதாய சிறார்களின் மார்க்கம் மற்றும் உலகக் கல்வி வளர்ச்சி சார்ந்த பணிகள், பைத்துல்மால் அமைத்து முறையே ஸக்காத் வசூல் செய்து உரியவர்களுக்கு கொடுத்துதவும் பணிகள் இது போன்ற மார்க்கம் அனுமதித்துள்ள எல்லாப் பணிகளையும் அழகிய முறையில் நிறைவேற்ற இயலும்.

அதை விடுத்து, ஓரு முஹல்லாவில் பல இயக்கங்களை பின்பற்றுவோரும், பல பெயர்களில் தொண்டு நிறுவனங்களும் இருப்பின் அங்கே பல கொள்கைகளை பல தலைவர்களை பின்பற்றும் நிலை ஏற்பட்டு ஜமாஅத் ஒற்றுமைக்கு வழியில்லாது போகும். அல்லாஹ்வின் நல்லடியார்களே இங்கு கூறப்பட்டிருப்பது சத்தியத்தை எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதாலும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது பலர் விளங்கிக் கொண்டிருப்பது போல் தனி பிரிவு அல்ல” அது தனி மனித சொத்து அல்ல” முஸ்லிம்கள் ஒற்றுமை யுடன் வாழ்வதற்கு அல்லாஹ் தன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் செயல்முறை மூலம் நமக்கு காட்டித்தந்துள்ள மிகச் சிறந்த வழிமுறையே என்பதை விளக்கவேயாகும்.

இதனை சற்று சிரமப்பட்டு படித்துணருங்கள். மார்க்கத்தை நாம் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நாமே நஷ்டமடைந்தவர்களாவோம். நமது செயல்களுக்கு மறுமை நாளில் நம்மிடமே கேள்வி கணக்கு கேட்கப்படும்”  நாம் பின்பற்றும் அறிஞர்களிடமோ தலைவர்களிடமோ அல்ல.

ஒவ்வொரு காலத்திலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு (Public Awareness) காரணமாகவே அவர்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன. அதுபோல் மார்க்க விழிப்புணர்வு பெற ஒவ்வொருவரும் குர்ஆனை பொருள் உணர்ந்து படியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பிறப்பித்திருக்கும்; கட்டளைகளை புரிந்து கொள்ளுங்கள். நபிவழியை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளுங்கள். மார்க்க அறிஞர்கள் கூறும் அறிவுரைகளை கண்மூடி பின்பற்றாமல் அவர்கள் கூறியது உண்மையா என்பதை தனியாகவோ, கூட்டாகவோ குர்ஆனில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.

இப்போதுள்ள இயக்க, கழக, கொள்கைத் தலைவர்கள் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையை உண்மையில் விரும்புபவர்களாக இருந்திருந்தால் தங்களின் வேறுபட்ட நிலைகளுக்கு ஹதீஸ்களை ஆதாரம் காட்டும் அவர்கள், ஸஹீஹான ஹதீஸாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிச் சென்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் மார்க்கப் பணி என்று மக்களிடம் பணம் வசூல் செய்வது, பள்ளிகள் கட்டுகிறோம் என்று வசூல் செய்து இயக்க கொள்கைப் பள்ளிகளாக ஆக்கிக் கொள்வது, இது எங்கள் கொள்கைப்பள்ளி உங்கள் பள்ளியல்ல என்று சண்டையிட்டுக் கொண்டு மாற்று மத சமூகத்திற்கு முஸ்லிம்களை கேலிக்கூத் தாக்குவது, இஸ்லாமிய ஆண்களையும் பெண்களையும் சாலை மறியல், பந்த் போன்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திராத வழிகளில் போராடத் தூண்டுவது போன்ற பணிகள் தான்.

அறிஞர்கள், தலைவர்கள் ஒன்றுபடுவார்கள் என்று நாம் காத்திருந்து நம்மை மரணம் முந்திக் கொண்டால் நம் நிலை என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பின் பற்றும் பிரிவுகளை விட்டு முற்றிலும் விலகி  நபி(ஸல்) அவர்களின் வழியில் ஒன்றுபடுங்கள். நம் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

‘அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ் வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே என்று கதறுவார்கள்.

மேலும் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம்” ஆகவே அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்.

ஆகவே எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும் பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கதறுவார்கள்) (அல்குர்ஆன் 33:66,67,68)

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அல்லாஹ் நம்மை அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தின்படி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழச் செய்து ஈருலக வெற்றியை நல்கு வானாக. ஆமீன்.

 

{ 3 comments… read them below or add one }

Rafiudeen December 1, 2014 at 6:06 am

shafi, hanafi ,maliki ,hanbali, is not like TNTJ,JAQ ets brother .I think we need a deep understanding to solve the above problem. Then only we can solve the problem. JKH

We should first know What is following the Imam & What is going back with (TNTJ,JAQ etc.) .Both are not same .JKH

Reply

M.M.A.NATHARSHA December 1, 2014 at 2:49 pm

GOOD ARTICALS AND TRUE OUR ALL MUSLIM BROTHERS TO FOLLOW THIS.

Reply

abdullah April 18, 2015 at 5:09 pm

நிச்சயமாக அல்லாஹ்வுடைய மார்க்கம் பிரிவுகளை கற்றுகொடுக்கவில்லை நிச்சயமாக மத்ஹபுகள் எல்லாம் இஸ்லாமில்லை.

Reply

Leave a Comment

Previous post:

Next post: