அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?

in மறுமை சிந்தனை

எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான். 

 

    மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.

    அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]  

    இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]  

    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]  

    மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]   

    உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.

    அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.

    அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

    நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

    மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி 

    இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.

    அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.

    அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.

    அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.

    இன்று  சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.
    அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). 

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]   

    அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள்.

இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.

அபூ அப்துர்ரஹ்மான்

{ 3 comments… read them below or add one }

mohamed rawther August 24, 2011 at 6:26 pm

urpa vaalvu arumayana message marumyin valkkaiyai sithippomaaha ameen

Reply

maknaj November 12, 2012 at 2:27 pm

nalla maranaththai santhikka ulaha valvai islam sonna padi amaithuk kolvomaha aameen

Reply

NISAR AHAMED October 5, 2015 at 9:31 pm

தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?
இது 100% உண்மை.
அருமையான பதிவு

Reply

Leave a Comment

Previous post:

Next post: