அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!

in அல்குர்ஆன்

யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும்  இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா(அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை)

    அரபு  நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத,    கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை)  அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم   அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு   நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம்   வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ   இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம்   என்றால் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு   நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட   நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள்   என்பதை உணர்த்தத்தான்.

      நபி  صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்டமுடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் கொடிகட்டிப் பறந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

    பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த  பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை  பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத  செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

    இப்படி பங்கு  போடுவதிலும், வேறு பல சில்லரைக் காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால்,  அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றைய அரபு   நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை   பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும்,  சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

    மனித   வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு  வீழ்ந்து கிடந்தனர். இறுதி நபி அந்த அரபு மக்களிடையே வரும்போது அந்த மக்கள்   ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், நரக நெருப்பின் விழிம்பில் இருந்ததாகவும்   அல்லாஹ் அல்குர்ஆன் 3:103 வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். அப்படியானால் அதைவிட  இழிவான, மோசமான கீழ்த்தரமான வேறு நிலையே மனித வர்க்கத்தில் இல்லை என்பதுதான்  அதன் பொருள். அரபு மக்களிடையே இருந்த பிரிவுகள் போல் உலகில் வேறு எங்கும்   இருக்கவில்லை.

    அப்படிப்பட்ட  அந்த மக்கள் தங்களின் அந்த நிலைக்கு நேர் மாற்றமாக ஒன்றுபட்டு, மனிதனின் ஆக உன்னத நிலை, மனிதப்புனிதன் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆக உன்னத நிலைக்கு   உயர்த்தப்பட்டார்கள். அகில உலக மக்களுக்குக் முன்மாதிரியாக, வழிகாட்டிகளாக ஆனார்கள். எப்படி? அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே  உயர்ந்தார்கள் எப்படி? அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ்த்திக் காட்டியது?  ஆம்! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனே இந்த அற்புதத்தை   நிகழ்த்திக் காட்டியது.

    ஆயினும் இந்த அற்புத மாற்றம் மிக எளிதாக நிறைவேறிவிடவில்லை. மிகமிக கடின முயற்சிக்குக் பின்னரே இது சாத்தியமாயிற்று. வழமைப்போல் அந்த காலத்திலும் புரோகிதரர்களே மக்களிடையே   ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “தாருந்நத்வா”(அறிஞர்கள் சபை) என்ற புரோகிதரர்களின்   சபையினரே மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். அந்த மக்கள் எளிதாக அல்லாஹ்வின் இறுதி   வேதமான அல்குர்ஆனை ஏற்றுச் செயல்பட அந்த தாருந்நத்வா அறிஞர்கள் விட்டு   வைக்கவில்லை. அல்குர்ஆனை விட்டு மக்களைத் தூரப்படுத்த என்ன என்ன தந்திரங்களைப்   கையாள முடியுமோ அத்தனைக் தந்திரங்களையும் கையாண்டார்கள்.

    இந்த  முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம்   ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும்   நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது  என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா   புரோகிதரர்கள் செய்தனர்.

    நபி  صلى الله عليه وسلم   அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்டுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நபி  صلى الله عليه وسلم   அவர்களுக்கு எத்தனை விதமான தொல்லைகள், துன்பங்கள் கொடுக்க முடியுமோ   அத்தனையையும் கொடுத்தார்கள். சிலரைக் கோரமாகக் கொலை செய்தார்கள். எப்படியும்   நேர்வழிக்கு வந்தவர்களை மீண்டும் தங்களது வழிகேட்டுப் பாதைக்கு கொண்டு வந்து   சேர்க்க பெரும்பாடு பட்டார்கள். சிலரைக் கொலை செய்தல், கடும் வெயிலில் வெற்று மேனியினராகப் போட்டு வதைத்தல், சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தல் நபி صلى الله عليه وسلم   அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒரு பள்ளத்தாக்கில் ஊர் ஒதுக்கி வைத்தல், இப்படி அந்தப் புரோகிதரர்களால் முடிந்த அத்தனைத் துன்பங்களையும் கொடுத்து  சித்திரவதை செய்தனர். சில முஸ்லிம்களும் இந்தத் துன்பங்களால் ஓய்ந்துபோய் அல்குர்ஆனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பின்வாங்கி இருப்பார்களானால்  இன்று நாமெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்குர்ஆன் வசனம் 5:67 என்ன   கூறுகிறது?

      தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை  (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை   நிறவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து  காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில்  செலுத்தமாட்டான். (5:67)

    இந்த   இறைக்கட்டளையில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை அப்படியே மக்களிடம் எடுத்து வைத்துவிட  வேண்டும். அதனால் மக்கள் துன்பம் இழைக்க முற்பட்டால் அல்லாஹ் உம்மை காப்பாற்றப்   போதுமானவன். எனவே நபி صلى الله عليه وسلم   அவர்கள் இந்த இறைக்கட்டளைகளை உணர்ந்து சத்திய பிரச்சாரத்தில் சிறிதும் கூடுதல், குறைவு செய்யாமல் நிறைவாகவே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களும்  நபித்தோழர்களும் துன்பங்களின் எல்லைக்கே போய் இறைவனிடம் முறையிடும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்  சோதனைக்கு உள்ளாக்கப் பட்டார்கள்.

    இத்தனை   சோதனைகளுக்கும் உட்பட்டு நபி صلى الله عليه وسلم   அவர்கள் அயராது, சளிக்காது அல்குர்ஆனை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து   வைத்துக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் நடைமுறை சாத்தியமில்லை என்று சொந்த   யூகங்ளைப் புகுத்த முற்படவில்லை. அதன் இறுதி முடிவு பல பிரிவினர்களாகப் பிரிந்து   வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாகி   அகில உலகிற்கும் வழிகாட்டிகளாக, முனோடிகளாக இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள்.  

Leave a Comment

Previous post:

Next post: