அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
1. நீதியான அரசன்:
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்
வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.
3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)
காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.
6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்
இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.
ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும். இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!
இஸ்லாம் கல்வி.காம்
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
{ 7 comments… read them below or add one }
அல்ஹம்துலில்லாஹ் . நம்மை நாம் உரசிப் பார்க்க இது ஓர் அற்புதமான கட்டுரை.
இதில் ஏதாவது ஒரு கூட்டத்தில் நாமும் நம் குடும்பத்தினரும் இருக்கவேண்டுமே என்ற ஆவலும் ஆசையும் ஏற்படுகிறது. அல்லாஹ் போதுமானவன் . முயற்சிப்போம். அவனிடம் இறைஞ்சுவோம்
i am inshaf. from: ghaffooriyya arabic college, maharagama,sri lanka. i like this article is very beautifull.
Emathu samooham innum kari padintha kannaadi polawe irukkintrathu. . .ithu pontra Muhammad (pbuh) avarhalin waarthaihalai padiththu athil oru kootathil ennayum, emmayum serthida Allah arul puriwanaha. . .
this is very good for every muslims. i like very much. my support for everybody.
Alhamdhu lillah. zasakallah hair to written article imam. i read this 7 mob in tahlim but now i got full explanation about the quality of this 7 mob who under the shadow of Allah in kiamath Day.
அல்ஹம்துலில்லாஹ் . நம்மை நாம் உரசிப் பார்க்க இது ஓர் அற்புதமான கட்டுரை.
இதில் ஏதாவது ஒரு கூட்டத்தில் நாமும் நம் குடும்பத்தினரும் இருக்கவேண்டுமே என்ற ஆவலும் ஆசையும் ஏற்படுகிறது. அல்லாஹ் போதுமானவன் . முயற்சிப்போம். அவனிடம் இறைஞ்சுவோம்AAMEEN YAARABILAALAMEEN
DEAR BROTHERS,
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்
Donot pray sunnath and nabil salah in mosque. ( SOME EXCEPTIONAL CASE ALLOWED ). Normal people shall pray sunnath and nabil salah at home.