அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்…

in சமூகம்

நீங்கள் சற்று ஆழ்ந்து நோக்கினால் உங்கள் வாழ்க்கையின் கேடுகளுக்கு அறியாமையைத் தவிர மற்றொரு காரணமும் புலப்படும். ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ மனிதன் என்ற பெயரல்ல என்பதைப் புரிந்து கொள்ளச் சொற்ப அறிவு போதுமானது. எல்லா மக்களும் மனித குலத்தின் அங்கங்களே. மக்கள் அனைவருக்கும் வாழும் உரிமை உள்ளது. தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அனைவரும் உரிமையுடையவர்களே! அனைவரும் அமைதி, நீதி, மரியாதை, கண்ணியம் ஆகியவற்றிற்கு உரியவர்களே!

மனிதனின் சுபிட்சத்திற்குப் பொருள் மக்கள் அனைவரின் சுபிட்சமாகும். ஒரு குடும்பத்தினுடைய அல்லது ஒரு சமூகத்தினுடைய சுபிட்ச நிலை மட்டும் அல்ல. ஏனெனில் சிலர் இன்புறப் பலர் துன்புற்றால் மனிதன் சுபிட்சத்தை அடைந்துள்ளான் என்று கூற இயலாது; மனித வாழ்வின் வளம் என்பதன் பொருள் மக்கள் அனைவரின் வாழ்க்கை வளமே ஆகும். ஒரு சாராருடைய அல்லது ஒரு சமூகத்துடைய வளமாக இருக்க முடியாது. ஒருவர் வாழ்ந்து பத்து பேர் வீழ்ந்தால் நலிவடைந்தால் அதை மனித இனத்தின் செழிப்பு என்று கூறிவிட முடியாது.

இந்த  தெளிவான கருத்தை நீங்கள் சரியானதென்று ஏற்றுக் கொண்டால், மனித இனம் தனது சுபிட்சத்தையும், நலன்களையும் எவ்வழியில் எய்த முடியும் எனச் சிந்தியுங்கள். மனித வாழ்வு சுபிட்சம் அடைவதற்கு ஒரே வழி, யார் எல்லா மக்களையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறாரோ அவரே மனித வாழ்வின் சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

யார் சுய நலத்தை கருதவில்லையோ யார் அதிகாரம் செலுத்துவதில் அறியாமையால் தவறிழைக்க மாட்டாரோ, யார் ஆசை மேலீட்டினால் அதிகார உரிமையைத் தகாத முறையில் பயன்படுத்த மாட்டாரோ, யார் ஒருவருக்கு பகைவனாகவும் மற்றவருக்கு நண்பராகவும், ஒருவரிடம் பரிவாகவும் மற்றவரிடம் பாரபட்சமாகவும், ஒருவருக்கு செவி சாய்க்காமலும் மற்றவருக்கு வசப்பட்டும் நடக்க மாட்டாரோ அவருடைய ஆணைகளுக்குட்பட்டால் தான் அந்த சுபிட்சம் கிடைக்கும். நீதியை நிலை நாட்ட இதுவே வழியாகும். இவ்வாறு மட்டுமே எல்லா மக்களுக்கும் எல்லா சமூகங்களுக்கும் எல்லா வகையினருக்கும் நியாயமான அவர்களுடைய உரிமைகள் கிடைக்கும்.

இவ்வுலகில் இத்தகைய நீதி வழுவாத நடுநிலை தவறாத, சுய நலமற்ற மனித பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாராக இருக்க முடியும்? அனேகமாய் உங்களில் எவரும் அத்தகைய ஒருவர் நம்மிடையே இருப்பதாக பதிலளிக்க துணியமாட்டார். இத்தகைய எல்லா அம்சங்களும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானவை. மற்றவர் யாரும் இம்மகிமை கொண்டவரல்ல. மனிதன் எவ்வளவுதான் விசாலமான உள்ளத்தைக் கொண்டவனாயினும் சுயநலம் அற்றவனாயினும் அவனுக்கென்று சில விருப்பு வெறுப்பு உள்ளவனாகவே இருக்கின்றான்.

மனிதனுக்கு  சிலரிடம் பற்று  அதிகமாகவும் சிலரிடம்  குறைந்தும்  இருக்கம் , சிலரிடம் அவனுக்கு அன்பிருக்கும் சிலரிடம் இருக்காது. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர் எவரும் இருக்க முடியாது. எங்கே இறை மேலாதிக்கத்திற்கு பதிலாக மனிதர்களின் ஆதிக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகின்றதோ அங்கே ஏதாவது ஒரு வகையில் அநியாயமும் கொடுமையும் நிச்சயம் காணப்படுகின்றன.

இந்தப் புரோகிதரர்களையும் குருமார்களையும் அரசர்களையும் முதலாளிகளையும் கவனியுங்கள். இச்சாரார் அனைவரும் பொது மக்களைவிடத் தங்களை உயர்ந்தவர்களாகத் தாங்களாகவே கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் சக்தியாலும் செல்வாக்கினாலும் இவர்கள் உண்டாக்கி யிருக்கும் உரிமைகளை சாதாரண மக்களுக்கு அளிப்பதில்லை. இவர்கள் கண்ணியமானவர்கள் பிறர் இழிவானவர்கள். இவர்கள் உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள். இவர்களின் மன இச்சைகளுக்காக மகிழ்ச்சிக்காக மக்களுடைய உயிர், உடமை, மானம், மரியாதை ஒவ்வொன்றும் பலியிடப்படுகின்றது. இந்த நியதிகளையெல்லாம் ஒரு நீதியாளனால் வகுக்கப்பட்டிருக்க முடியுமா? இவற்றில் அவர்களின் தன்னலமும் ஒருதலைப்பட்சமும் தென்படவில்லையா?

தங்களுடை வலிமையினால் பிற சமூகங்களை அடிமைபடுத்தியுள்ள இந்த சர்வாதிகார சமூகங்களைப் பாருங்கள். இவர்களின் எந்த சட்டத்தில் எந்த நியதியில் இவர்களின் சுயநலம் கலக்காமல் உள்ளது? ஒவ்வொரு வகையிலும் தங்களை பிறரைக் காட்டிலும் உயர்த்தியே வைத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக பிறருடைய நலன்களைப் பலியிடுவதைத் தங்களுடைய உரிமை என்றே கருதுகிறார்கள்.

இவர்கள்  மற்ற மனிதர்களைப்  போல் சாதாரண  மனிதர்கள்  என்பதை உலகம்  அறிகிறது. ஆனால் இவர்களோ தங்களைக் தெய்வங்களாகக் காட்டிக் கொள்கிரார்கள். மக்களும் இவர்களை தங்களுடைய வாழ்வும் சாவும் இவர்கள் கையில் இருப்பது போலவும் கருதி இவர்கள் முன்னிலையில் கைகட்டி, சிரம் தாழ்த்தி,  அஞ்சி அடங்கி  நடக்கிறார்கள்.  இவர்கள்  மக்களின் பணத்தை பல வகையிலும் பறிக்கிரார்கள். இதைத் தங்களுடைய நலன்களுக்காக கணக்கின்றி வாரி இறைக்கிறார்கள். இது நீதி யாகுமா? நியாயமாகுமா? யாருடைய பார்வையில் எல்லா மக்களின் உரிமைகளும் நலன்களும் ஒரே மாதிரியாக உள்ளனவோ அத்தகைய நீதியாளனால் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்க முடியுமா?

உலகில் எங்கெல்லாம் மனித சட்டத்தை இயற்றியுள்ளானோ, அங்கெல்லாம் அநீதி நிச்சயமாக நடந்துள்ளது என்பதை உங்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன். சில மனிதர்களுக்கு அவர்களுடைய நியாயமான உரிமைகளைக் காட்டிலும் மிக அதிகமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மனித பலவீனமே. அவன் ஒரு விஷயத்தில் தீர்வு காணத் தொடங்கும் போதெல்லாம் அவனுடைய உள்ளத்திலும் சிந்தனையிலும் அவனுடைய சுய, குடும்ப, குலம் அல்லது சமூக நலன்களின் எண்ணம் நிலைத்த வண்ணமே இருக்கின்றது. சொந்தக்காரர்களிடம் உள்ள பரிவு பிறர் உரிமைகளிலும் நலன்களிலும் ஏற்படுவதில்லை.

மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களிடையே பிறப்பு, குலம், சமூகத்தின் அடிப்படையில் வேறுபாடு செய்யாமல் பண்பு, செயல், தகுதி அடிப்படையில் மட்டும் வேறுபாடு செய்யும் இறைவனின் சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்வதே இந்த அநியாயத்திற்கான பரிகாரமாகும்.

அபுல் அஃலா மெளதூதி

Leave a Comment

Previous post:

Next post: