அபூ அப்தில்லாஹ்
குர்ஆன் கூறுகிறது :
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல்லாஹ்விடம்) மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13)
இன்னும், நீங்கள் எல்லோரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின்மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற் றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103)
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார்(கருத்து) வேறுபாடு கொண்டு பிரிந்துவிட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (3:105)
நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே, இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்றவேண்டாம்; அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவராக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (6:153)
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்கு சம்பந்தமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (முடிவில்) அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, நான்(அவனுக்கு) இணைவைப் போரில் உள்ளவனல்லன். (12:108)
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியி ருக்கிறான்; ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்தது என்னவென்றால், நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே; இணைவைப்போருக்கு நீங்கள் எதன் பக்கம் அவர்களை அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது; தான் நாடிய வர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)
அவர்கள், தங்களிடம் ஞானம்(நெறிநூல்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி, அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் நெறிநூலிற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக் கின்றனர். (42:14)
இந்த ஒன்பது வசனங்களையும் மீண்டும் மீண்டும் நேரடியாகப் படித்து அவற்றின் சாரமும் சத்தும் உள்ளத்தில் நிறைந்திருக்கச் செய்யுங்கள். உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் மனிதக் கருத்துக்களை சிறிது நேரத்திற்கேனும் ஒதுக்கி வையுங்கள். அப்போதுதான் இந்த குர்ஆன் வசனங்களின் நேரடியான, சரியான, நேர்வழியான கருத்தை உள்வாங்க முடியும்.
அப்படி முழுமையாக முறையாக இந்த வசனங்கள் அனைத்தையும் விளங்கினால் மட்டுமே 49:13 இறைவாக்குக் கூறும் ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று பிரித்து அறிந்து கொள்ள உதவும் அடையா ளப் பெயர் வேறு; 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 இறைவாக்குகள் கூறும் சமுதாயத்தைக் கொள்கையளவில் பிளவுபடுத்தி ஒருவரை ஒருவர் முட்டி மோதச் செய்யும் கலவரங்களைத் தூண்டும் கொள்கை அடிப்படையிலான பிரிவுப் பெயர்கள் வேறு என்பதையும் முன்னையது அனு மதிக்கப்பட்டது பின்னையது கொடிய ஹராம் அனுமதிக்கப்படாதது என்பதைத் திட்டமாகத் தெளிவாக அறிய முடியும்.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் 49:13 இறை வாக்குக் கூறும் அடையாளப் பெயர்களான முஹாஜிர், அன்சார், குறைஷ், பனூ ஹாஷம், பனூ குறைளா, பனூ நளீர் போன்ற அடையாளப் பெயர்களையும், இக்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் குடும்பப் பெயர்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.
அன்று அவர்களில் யாரும் நாங்கள்தான் நேர் வழியில் இருக்கிறோம். மற்றவர்கள் வழிகேடர்கள் என்று சொன்னார்களா? முஹாஜிர்களாகிய நாங் கள்தான் நேர்வழியில் இருக்கிறோம். மற்றவர்கள் அனைவரும் வழிகேடர்கள் என்று சொன்னார்களா? நாங்கள்தான் சுவர்க்கத்துச் ஜமாஅத் எனப் பீற்றினார்களா? அவர்கள் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு என்று சமுதாயத்தைப் பிளவுபடுத்தினார்களா? ஒருவருக்கு ஒருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்தார்களா? அவர்கள் செய்த எந்தச் செயலையும் விளம்பரப்படுத்தி மக்களிடம் பிரபல்யமாகத் துடித்தார்களா? இப்படிப்பட்ட தறுதலைத்தனமான எந்தச் செயலையும் அடையாளப் பெயர்களை உடையவர்கள் செய்ய முற்பட்டதில்லை.
வேண்டுமானால் உலகியல் காரியங்களை வைத்துக் கிளைக்குக் கிளை, கோத்திரத்திற்குக் கோத்திரம் முழுமை பெற்ற இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த முன்னர் வீண் பெருமை பேசி பெரும் பிரிவு கள் ஏற்பட்டுச் சண்டைகள் நடந்ததை அல்குர்ஆன் 3:103 இறைவாக்குக் கூறுகிறது. அப்படிப்பட்டச் செயல்கள் பெருத்த வழிகேடு, நரக நெருப்பின் விளிம்பில் கொண்டு சேர்க்கும் என்பதும் விளங்குகிறது. அறிவுடையோர் விளங்குவார்கள்!
இன்னும் முஸ்லிம்களில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு தனித்தனிப் பெயர்களையும், தனித்தனி குடும்பப் பெயர்களையும் வைத்துக் கொள்ள மார்க்கத்தில் தடை சிறிதும் இல்லை. தனித்தனி நிறுவனங்களுக்கும், தனித்தனி பத்திரிகைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் வைக்கத் தடை இல்லை. உலகியல் ரீதியாக சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்களுக்குத் தனித்தனிப் பெயர் வைக்கவும் தடை இல்லை. இவர்களில் யாரும் நாங்கள்தான் நேர்வழி ஜமாஅத், சுவர்க்கத் ஜமாஅத், மற்றவர்கள் வழிகேடர்கள், நரகத்திற்குரியவர்கள் எனத் தம்பட்டம் அடிப்பதில்லை. எனவே உலகள வில் அடையாளம் தெரிந்து கொள்ள 49:13 இறை வாக்கு அனுமதித்துள்ள பெயர்களை வைத்துக்கொள்ள மார்க்கத்தில் தடையில்லை என்பதை ஆதாரமாகக் காட்டி தனித்தனிக் கொள்கை அடிப்படையிலான பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்துவது பெரும் வழிகேடு. குர்ஆனின் பல வசனங்கள் தெளிவாக, நேரடியாக மறுக்கும் கொள்கை அடிப்படையிலான பெயர்களுக்கு மார்க்கம் முற்றிலும் முழுவதுமாகத் தடை செய்துள்ளது என்பதை மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.