பெண் வீட்டார் திருமண விருந்தை ஏற்கலாமா?

Post image for பெண் வீட்டார் திருமண விருந்தை ஏற்கலாமா?

in பொதுவானவை

ஓர் அடிப்படை உண்மையை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் விளங்கிச் செயல்பட்டால், முஸ்லிம் சமுதாயம் மீண்டும் அதன் உன்னத நிலையை அடைந்துவிடும். அந்த உண்மை இது தான்! இஸ்லாமிய மார்க்கத்தில் இவை எல்லாம் ஹலால்; இவை எல்லாம் ஹராம் என்றுத் திட்டமாக, தெளிவாக அல்குர்ஆனிலும், இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது(ஸல்) அவர்களாலும் விளக்கப்பட்டு விட்டன. அல்குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டு நபி(ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின்னர், மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றும், பிரிதொன்றை ஹராம் என்று சட்டம் கூற உலகில் யாருக்கும் அனுமதி திட்டமாக இல்லை. அப்படித் தங்கள் மனோ இச்சைப்படி ஒன்றை ஹலால் என்றும் பிரிதொன்றை ஹராம் என்றும் சுயமாகச் சட்டம் சொல்லுகிறவர்கள் தங்களுடைய மனோ இச்சையை ரப்பாக்கிக் கொண்ட வழிகேடர்களாக மட்டுமே இருக்க முடியும்.

அதற்கு மாறாக அப்படிப்பட்ட அநாச்சாரங்கள் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்களா? அல்லது அன்று இப்படிப்பட்ட அநாச்சாரங்கள் இடம்பெறும் தமது பந்துக்களின், அறிமுகமானவர்களின் திருமண நிகழ்வுகளில் நபி(ஸல்) அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்கள் என்று அறிவிப்பு இருக்கிறதா? இல்லையே!

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதி நிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி (ரலி) முஸ்லிம் 78)

“ஒரு தவறு நடக்கக் கண்டால் சக்தி இருந்தால் அதைக் கைகளால் தடுக்கவும். அதற்குச் சக்தி இல்லை என்றால் நாவினால் தடுக்கவும், அதற்கும் சக்தி இல்லை என்றால் அதை மனதால் வெறுக்க வேண்டும் இதுதான் ஈமானின் இறுதி நிலை?” என்பதுதான் ஹதீஃத். இவர்களோ வெறுத்து ஒதுங்குங்கள் என்று திரித்து வளைத்துக் கூறி மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்கிறார்கள். இந்த ஹதீஃதில் வெறுங்கள் என்றிருக்கிறதே அல்லாமல் ஒதுங்குங்கள் என்ற பதம் எங்கே இருக்கிறது?

“எடுத்துச் சொல்வது மட்டும்தான் உமது கடமை. அவர்களைத் திருத்தி நேர்வழிக்குக் கொண்டு வரும் அதிகாரம் உமக்கு இல்லை” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் நேரடியாகக் கடுமையாக எச்சரித்திருந்தும், அதைக் கண்டு கொள்ளாமல், அப்படிப் புறக்கணித்தால்தான் தவறு செய்யும் அவர்கள் திருந்தி நேர்வழிக்கு வருவார்கள் என்று பகல் கனவு காண்கின்றனர். அல்லாஹ்வின் தூதருக்கே இல்லாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம் தங்களுக்கும் இருப்பதாகப் பெருமையடிக்கிறார்கள்.

மார்க்கத்தில் இல்லாத மார்க்க முரணான சுன்னத் கல்யாணம், பூப்பு நீராட்டு விழா, காதணி விழா, திருமண நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளுக்கு அழைக்கப்பட்டு அவற்றைப் புறக்கணித்தால் அதில் நியாயமிருக்கிறது. ஆனால் ”திருமணம் எனது சுன்னத்து, அதைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல” என்று நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்திச் சொல்லப்பட்ட திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அதைப் புறக்கணிப்பவர்கள் நபிவழி நடப்பவர்களா? அவர்கள் நம் வீடு தேடி வந்து திருமணத்தில் கலந்து துஆ செய்ய அழைக்கிறார்களா? அவர்கள் செய்யும் அனாச்சார சடங்குகளில் கலந்து கொள்ள அழைக்கிறார்களா? அங்கு போவதால் அவர்கள் செய்யும் அனாச்சாரச் சடங்குகளுக்கு நாமும் துணை போவதாக ஆகுமா? ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று பல வசனங்கள் கூறுவதின் பொருள் என்ன? அவர்கள் செய்யும் அத்தவறுகளைச் சுட்டிக் காட்டி எச்சரிக்காமல் இருந்தால், மெளன சாமியாராக இருந்து கொண்டு அத்திருமணங்களில் கலந்தால் நாமும் குற்றவாளியாக ஆகிறோம்.

இவர்களின் குருட்டு வாதம் என்னவென்றால், அவர்கள் செய்யும் தவறுகளைப் சுட்டிக் காட்டிவிட்டுப் பின்னர் எப்படி அப்படிப்பட்டத் திருமண நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்கிறார் என்பதுதான். இவர்களின் வீண் வரட்டுக் கெளரவம், பெருமை, தவறுகளை எச்சரித்துவிட்டுப் பின்னர் அத்திருமணத்தில் எப்படிக் கலந்து கொள்வது என்ற நச்சுக் கருத்தை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர், அத்தவறுகளைச் சுட்டிக் காட்டி எச்சரிக்காமல் மெளன சாமியாராக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலை!

இன்னும் பெண் வீட்டுச் சாப்பாடு ஹராம். அதைச் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் விதிக்காத சட்டத்தை இவர்களாக விதித்து அண்ணன் தம்பி, தங்கைகளுக்கிடையே, அக்காள், தம்பி, தங்கைகளுக்கிடையே நெருங்கிய இரத்த உறவு பந்துக்களிடையே விரோத குரோதத்தை வளர்த்து இரத்த உறவுகளைத் துண்டிக்கும் கொடிய காரியத்தைச் செய்து வருகிறார்கள். பெண்ணுக்கு மஹர் கொடுத்து மண முடிப்பதும், திருமணத்தன்று கொடுக்கும் வலிமா விருந்தை மாப்பிள்ளை கொடுப்பதே சுன்னத்- நபிவழி.

மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் யாசிப்பதால் பெண் வீட்டார் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி திருமண விருந்தைத் தருகின்றனர். இது எந்த அடிப்படையில் ஹராமாகும். சாப்பிடக் கூடாது என்ற ஹராமான சட்டத்தைச் சொல்ல முடியும்?

இவர்கள் நேர்வழி நடப்பவர்களாக இருந்தால், பிச்சை- யாசகம் கேட்காத மாப்பிள்ளைகளை உருவாக்க வேண்டும். ஏழைகளின் வீட்டுக் குமார்கள் 30,35 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பரிதாப நிலை சமுதாயத்தில் இருக்கவே கூடாது. அந்த நல்ல நிலையை உருவாக்க வக்கற்றவர்கள், கைக் கூலி-வரதட்சணைக் கொடுப்பது, சீர் செனத்திக் கொடுப்பது, திருமண விருந்து கொடுப்பது ஹராம் என்று எந்த முகத்தோடு சட்டம் சொல்கிறார்கள். இவர்களின் இந்தக் குருட்டுச் சட்டம் காரணமாக, இதுவரை எழைக்குமர்கள் கரையேற தாராள உதவி செய்து கொண்டிருந்த பெரும் செல்வந்தர்கள் இப்போது இதுதான் சாக்கு என்று பெண் வீட்டாருக்குத் திருமணத்திற்கு உதவுவது ஹராம் என்று கூறி மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் விளைவு மேலும் அதிகமாகப் பெண் குமர்கள் கரையேறாமல் தவிக்கிறார்கள். இதனால் மாற்றாருடன் ஓடும் அவலக் காட்சிகளைத் தினசரி கண்டு வருகிறோம். இது தான் இவர்கள் சாதித்து வரும் சாதனை.

பெண் வீட்டார் நம் வீடு தேடி வந்து திருமண விருந்துக்கு அழைக்கின்றனர். இது நமக்கு உண்மையான அன்பளிப்பு. திருமண விருந்துக்கு அழையாத முறையில் அங்கு தேடிச் சென்று சாப்பிடுவது ஹராம் என்பது நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை. காரணம் அது அங்கு போய் பிச்சைக் கேட்டுச் சாப்பிடுவது போலாகும். அதற்கு மாறாக ஓர் உணவு எந்த முறையில் வந்தாலும் அது நமக்கு அன்பளிப்பாக வந்தால் அது நமக்கு ஹலால் தான். பரீரா(ரழி) அவர்களுக்கு ஜகாத்தாக வந்த உணவை, தங்களுக்கு அன்பளிப்பாக வந்ததாகக் கூறி நபி(ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டது இதற்குப் போதிய ஆதாரமாக இருக்கிறது. மேலும் அநியாயங்கள், அட்டூழியங்களிலும், ஹராமான வழியில் பொருளீட்டுவதில் முங்கிக் குளித்த அக்கால மன்னர்களின் அன்பளிப்புளை நபி(ஸல்) அவர்கள் மறுக்காமல் ஏற்றது இதற்கு மேலும் ஆதாரமாகும்.

இந்த அடிப்படையில் பெண் வீட்டார் கொடுக்கும் விருந்து அன்பளிப்பைக் கூடாது-ஹராம் என்று கூறி இரத்த உறவுகளைத் துண்டிக்கும் வகையில் சட்டம் சொல்லும் இம்மவ்லவிகளின் வழி கெட்டக் கொள்கையைக் கவனமாகக் கேளுங்கள்! 7:86, 29:29 குர்ஆன் வசனங்கள் மற்றும் சில ஹதீஃத்கள் இவற்றை நிராகரித்து வசூல் வேட்டையைக் குறிக்கோளாகக் கொண்டு ஹராமான வழியில் இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் போன்றவற்றிற்கு மாற்று மதத்தினர், வட்டி மூசா, சாராயக் கடைக்காரன், முற்றிலும் ஹராமான வழிகளில் சொத்துச் சேர்த்தச் செல்வந்தர்களிடமெல்லாம் போய் வசூல் வேட்டையாடுகின்றனர். இது அவர்களுக்கு ஹலாலாம்!

நமக்கு உரிமை இல்லாத ஒன்று நாம் எதிர்பாராமல் நினைத்துக்கூட பாராத நிலையில் நம்மைத் தேடி வருவது அன்பளிப்பு. திருமண விருந்து பெண் வீட்டாரிடமிருந்து வந்தாலும் அது நமக்கு அன்பளிப்பாகும். இது முழுக்க முழுக்க ஹலாலாகும். இதை ஹராம் என்று கூறுபவர்கள் மறுமையை மறந்த சுயநலவாதிகள். அவர்கள் தான் தங்களுக்கு உரிமை இல்லாததை மற்றவர்களைக் கும்பலாகத் தேடிச் சென்று அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியோ, வற்புறுத்தியோ, மிரட்டியோ பெறுவதை மூடத்தனமாக அன்பளிப்பு என்பார்கள். இது உண்மையில் யாசகமாகும்-பிச்சையாகும். மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் கேட்கும் பிச்சையை விடக் கேடுகெட்டப் பிச்சையாகும்.

மாப்பிள்ளையாவது திருமணத்திற்குப் பின்னர் அப்பெண்ணுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் உணவு, உடை, உறைவிடம் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறார். இவர்களோ மக்களை ஏமாற்றி தங்கள் தொப்பைகளை வளர்க்கிறார்களே அல்லாமல் சமுதாயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை. பெரும் நட்டங்களையே சந்தித்து வருகிறார்கள் என்பதற்கு கடந்த 20 ஆண்டுகள் அரங்கெறிவரும் சோக முடிவுகள் போதிய ஆதாரமாகும்.

அவர்கள் மக்களிடம் கேட்கும் இந்தக் கேடு கெட்டப் பிச்சையை, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாத மன்னர்களிடம் பெற்றுக் கொண்ட அன்பளிப்புகளோடு ஒப்பிட்டுப் பேசுவதை விட அறிவீனம் மூடத்தனம் பிரிதொன்று இருக்க முடியுமா? நபி(ஸல்) அவர்கள் கும்பலாக அந்த மன்னர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் கையேந்தினார்களா? யாசகம் கேட்டார்களா? பிச்சை கேட்டார்களா? (நவூதுபில்லாஹ்) எந்த அளவு நெஞ்சழுத்தமும், துணிச்சலும், இறையச்சமில்லா நிலையும் இருந்தால் இவர்கள் வீடு வீடாகப் படியேறி அவர்களிடம் கையேந்தி-யாசிப்பதை, பிச்சைக் கேட்பதை நபி (ஸல்) அவர்களைத் தேடி வந்து மன்னர்கள் அன்பளிப்பு அளித்ததோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவார்கள்? சிந்தியுங்கள்.

ஆம்! நம் வீடு தேடி வந்து திருமண விருந்திற்கு அழைப்புக் கொடுக்கும் பெண் வீட்டு விருந்து ஹராம். சாப்பிடக்கூடாது என்று மூட ஃபத்வா கொடுக்கும் அதே வேளை, இவர்கள் வீடு வீடாகப் போய் படியேறி யாசகம்-பிச்சை கேட்பதை அன்பளிப்பு-ஹலால் என்று பிதற்றும் இவர்களின் முனாஃபிக்கத்தனத்தை நயவஞ்சகத்தனத்தை உணர முடியாத அவர்களின் தொண்டர்களின் நிலை குறித்து வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். பெண் வீட்டு விருந்தாக இருந்தாலும் அது நமக்கு அன்பளிப்புத்தான், ஹலால்தான். அழைப்பை ஏற்பதே நபிவழியாகும்.

{ 2 comments… read them below or add one }

Basheer Ahamed September 17, 2015 at 10:50 pm

Assalaamu Alaikum…
(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(அல்குர்ஆன் : 4:140)

Kalyanathil ithu nadanthal kalandhu kollalama?

Reply

sadiq November 23, 2015 at 3:21 am

pen veetar virunthu yendru nabi valiyeel aatharam unnda?

Reply

Leave a Comment

Previous post:

Next post: