வித்ரு தொழுகை
“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ
“இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
“வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
வித்ரு தொழும் முறை
மூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது! அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
“மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
ஐந்து ரக்அத்
ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஏழு ரக்அத்
ஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
ஒன்பது ரக்அத்
ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
குனூத் ஓதுதல்
வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:
நபி صلى الله عليه وسلم ஓதிய கூனூத்
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْ مَنْ هَدَيْتَ وَعَافِنْيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلََََّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَاقَضَيْتَ فَاِنَّكَ تَقْضِيْ وَلاَ ُيقْضى عَلَيْكَ اِنَّهُ لاَيَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ
பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.
இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
பிரயாணத் தொழுகை
கடமையான தொழுகையை குறித்த நேரத்தில் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. எனினும் பிரயாணிகளுக்கு அல்லாஹ் சில சலுகைகளை தந்துள்ளான். இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். அதைப் போன்று நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழலாம்.
சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரயாணம் செய்தாலே ஜம்வு (இருநேரத் தொழுகையை சேர்த்து தொழுதல்) கஸ்ர் (நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக குறைத்து தொழுதல்) செய்யலாம்.
“நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் கஸ்ர் செய்வார்கள்” அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்
இந்த ஹதீஸில் மைலா? பர்ஸக்கா? என்று அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். மைலை விட பர்ஸக் என்பது கூடுதலான தூரமாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் பர்ஸக்கை நாம் எடுத்துக்கொள்வோம். மூன்று பர்ஸக் என்பது 4 மைல்களாகும். அன்றைய அரபியர்களின் கணக்குப்படி இன்றைய அளவு சுமார் 25 கிலோ மீட்டர் ஆகும். எனவே, ஒருவர் 25 கி.மீ பிரயாணம் செய்தால் ஜம்வு-கஸ்ர் செய்யலாம்.
“தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத் தான் கடமையாக்கப்பட்டது. பிரயாணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த)ஊரில் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
“மதினாவில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாக தொழுதேன். நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்கா செல்ல நாடி புறப்பட்டார்கள். (இடயில் உள்ள ஊரான) துல்ஹுவைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஜம்வு (சேர்த்துத் தொழுதல்)
லுஹர் நேரத்திலேயே லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழலாம். மக்ரிப் நேரத்திலேயே மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழலாம். மேலும் வெளியூர் செல்ல நாடினால் உள்ளூரிலேயே இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழலாம். எனினும், குறைக்காமல் முழுமையாகத் தொழவேண்டும்.
“சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்” அறிவிப்பவர்: அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
கஸ்ர் (குறைத்துத் தொழுதல்)
பிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு செய்யும் போது (இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்) இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும்.
“ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
பயணியாக இருந்து விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.
“நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்டபோது “ஆயிஷாவே! சரியாகச் செய்தீர்” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை!” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
பாங்கு – இகாமத்
ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவரகள் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْ நூல்: முஸ்லிம்
Comments on this entry are closed.