அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்யவில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். (முஸ்லிம்: 4432)
ஒரு மனிதனுக்கு இரண்டு முறைகளில் நோய் ஏற்படலாம். அவையாவன:
1. அவனின் உடலுக்கு ஏற்படும் நோய்.
இதனை உலகில் மனிதனுக்காக அல்லாஹ் படைத்துள்ள மருந்துகளை மனிதன் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
2. மனிதனின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உள்ளத்தில் எழும் நோய்..
இதற்குரிய மருந்து அல்லாஹ்வின் இறைநெறி நூலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் இவ்வாறு விபரிக்கின்றது.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். ”நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லா விதமான கனி(களின்) மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (நோய் தீர்க்க வல்ல மருந்து) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் 16:68,69)
இறைவன் தேனீக்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தி ஒவ்வொரு மரம், மலர்களை சிந்தித்து மனிதன் ஆராய்ச்சி செய்தால் மனிதனுக்கு உபயோகமான நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்கலாம் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துகின்றான். 1433 ஆண்டுகளுக்கு முன்பே உம்மி நபி(ஸல்) அவர்கள் மெளட்டீக வழிகளைத் தவிர்த்து மனிதன் சிந்தித்து ஆராய்ந்தால் மனித வாழ்வுக்கு உகந்த பல மருந்துகளைப் பெறமுடியும் என விளக்கினார்கள். இதன் பயனாக இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பல மருத்துவர்கள் பல ஆராய்ச்சி நூல்களை விட்டுச் சென்றனர். இதன் தாக்கமாக ஸ்பெயினில் பல வாசக சாலைகள், கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன.
அன்று மக்கள் சில நோய்களைக் கண்டு தனக்கும் தொற்றிவிடும் எனக் கருதி தப்பியோடினர். இதனால் மக்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் பக்தி என்ற பெயரில் மெளட்டீக மத சடங்குகளும் சம்பிரதாயங்களும் மலிந்தன. அறியாமையிலிருந்த மக்கள் பல தெய்வ சிலை வணக்கங்களுக்கு வழிவகுத்தது. அல்லாஹ்வின் சோதனைகளும் அதிகரித்தது. இந்த அறியாமையிலிருந்து மக்களை மீட்க அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான்.
ஒரு மனிதன் அறியாமையிலிருந்து நீங்க வேண்டுமாயின் அவனது உள்ளம் நோய்கள் அற்று தூய்மையாக இருத்தல் வேண்டும். அவனது உள்ளம் தூய்மை அடைய, அறியாமை என்ற நோய் நீங்க, மனித உடலை நேர்வழியின் பக்கம் இட்டுச் செல்ல அருள் மருந்தாக மனிதக் கற்பனைகள் உள் நுழையாத இயற்கையான தூய இறைநெறி நூலின் வழிகாட்டல் அவசியம்; இன்று மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் மட்டுமே இருப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கின்றது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
”அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது. எனவே) இதில் அவர்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 10:57,58)
நாம் இதை(குர்ஆன்) அரபியல்லாத வேறு மொழிகளில் இறக்கியிருந்தால், இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “”இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தன்மை இருக்கின்றது; இன்னும், அவர்(கண்)களில் குருட்டுத் தனமும் இருக்கின்றது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). (அல்குர்ஆன் 41:44)
அன்று வேதங்கள் அரபு மொழியில் இருக்கவில்லை. வேற்று மொழிகளிலேயே இருந்தன. ஆகவே, அரபியர்களும் வேதக்காரரும் அரபு மொழியில் அல்குர்ஆன் இறங்கியதை கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுபோல் இன்றும் புரோகிதர்கள் மக்கள் பேசாத, விளங்காத மொழியிலேயே இறைநெறி நூல்கள் இருப்பதை விரும்புகின்றனர். அப்போதுதான் தமது வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்ற விதத்தில் மக்களை கண்மூடிப் பின் தொடரச் செய்து தாம் விரும்பும் மெளட்டீக மார்க்கத்தில் வைத்திருக்கச் செய்ய முடியும் என்பதனாலேயாகும். ஆனால் அல்லாஹ் ஒரு இறைத்தூதருக்கு இறைச் செய்திகளை இறக்கும்போது அவர் பேசும் தாய் மொழியிலேயே இறக்கினான். அல்குர்ஆனின் விளக்கம் அரபிகளையும், வேதக்காரர்களையும் ஏற்கச் செய்தது. அத்துடன் மனிதனின் இதயத்திலுள்ள நோய்கள் இறைநெறி நூலின் மருந்தைக் கொண்டே சுகமடைய செய்ய முடியும். இதன் மூலமாகவே அறியாமையிலிருந்தும் எல்லா அழுக்குகள் நிறைந்த நோய்களிலிருந்தும் மனிதன் தவிர்ந்து வாழ முடியும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கொள்ளை நோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள். (முஸ்லிம்: 4456)
அன்றைய அரபியரிடையே இருந்து வந்த சில மூடப் பழக்க வழக்கங்களான தொற்று நோய் என பயந்து மனித நேயத்தை மறந்து விடல் இதனால் மக்கள் நோயாளிகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அதுபோல் பறவை சகுனம், ஆந்தை பற்றிய நம்பிக்கை, ஸஃபர் என்னும் வயிற்று நோய் தொற்று நோய் என்ற நம்பிக்கை, நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகின்றது என்னும் நம்பிக்கை, வர்ண ஜாலம் காட்டும் சாத்தான் பற்றிய நம்பிக்கை போன்றவற்றை நபி(ஸல்) அவர்கள் பாவமான நம்பிக்கைகளாக இனம் காட்டித் தடை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”தொற்று நோய் கிடையாது; ஸஃபர்(தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், ”அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தனவாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)? என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “”அப்படியயன்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள். (முஸ்லிம்: 4464)
முஸ்லிம் 4468ம் ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு, நோய் கண்ட கால் நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டு செல்லக் கூடாது’ என்றும் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தொற்று நோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகின்றது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர்(தொற்று நோய்) என்பதும் கிடையாது. (முஸ்லிம்: 4469)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினர்கள்:
தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தா னும் கிடையாது. (முஸ்லம்: 4470)
அன்று அரேபியாவில் காணப்பட்ட மூடக் கொள்கைகளை அறியாமைக் கால செயற்பாடுகளாக முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் நம்பக்கூடாது எனத் தடை செய்தனர். அத்துடன் தொழுநோயாளிகளிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்று விட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம்:4489)
இங்கு தொற்று நோய் என மனிதன் எண்ணாது, இவை அல்லாஹ்வின் சோதனைகள் என பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மை நிலையாகும். அத்துடன் ஒரு மனிதனுக்கு நோய் ஏற்பட்டுவிடின் மக்கள் நோய் பிடித்தவரை நோவினை செய்கின்ற, தூற்றுகின்ற சந்தர்ப்பங்கள் அன்று காணப்பட்டது. இந்த மூட நம்பிக்கைகள் ஓர் இறைக் கொள்கைக்கு மாற்றமானதாகும். ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அல்லாஹ்வின் தூதர்கள் காட்டிய வழி முறைக்கு மாற்றமானதாகும். ஷைத்தானின் சூழ்ச்சியால் முன்னைய வேதங்களைக் களங்கப்படுத்திய பல தெய்வ சிலை வணங்குவோரின் தீய வழிமுறையாகும். இச் செயற்பாடுகள் மனிதனின் அழிவுக்கே வழிகாட்டும். இவ்வாறு செயற்படும் குருமாரின் வழி நரகை அடையவே வழிகாட்டும். அறிவுமிக்க இன்றைய மனித சமுதாயமே இருளின் பக்கம் செல்லாதீர்கள். அல்குர் ஆனின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மன வேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (புகாரி: 5641)
M.T.M முஜீபுதீன், இலங்கை
{ 1 comment }
நன்றி சகோதரரே…
Comments on this entry are closed.