மன்னிக்கும் மாண்பு

Post image for மன்னிக்கும் மாண்பு

in முன்மாதிரி முஸ்லிம்

       தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்அனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் “இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்’ என்றும் “அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்’ என்றும் கூறுகிறது.

    அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

    இதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை “மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்’ என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.

    எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.

    மிக உன்னதமான உயர்வின்பால் இட்டுச் செல்லும் மன்னித்தல் என்ற அந்த சிரமமான பாதையில் மனித மனங்களைத் திருப்புவதற்கு குர்அன் ஒர் எளிய வழிமுறையை கற்றுத் தந்துள்ளது. ஒரு குற்றத்திற்கு அதற்குரிய தண்டனை என்ற சட்டத்தின்படி அநியாயம் இழைக்கப்பட்டவன் பழிதீர்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அநியாயம் இழைக்கப்பட்டவர் பழிவாங்கும் உணர்ச்சிக்கு செவிசாய்க்காமல் மன்னித்து சகித்துக் கொண்டால் அவருக்கு உயரிய அந்தஸ்து கிடைக்குமென்று கூறி அவரின் மனதில் மன்னிக்கும் ஆசையை இஸ்லாம் வளர்க்கிறது.

    அவர்களில் எவரையும் (எவரும்) அக்கிரமம் செய்தால் அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள். தீமைக்குக் கூலியாக அதைப் போன்ற தீமையையே. (அதற்கு அதிகமாக அல்ல) எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) வரம்பு மீறுவோர்களை நேசிப்பதில்லை.

    எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)

    அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:

    உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, எழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்ிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு எதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)

    இஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.

    நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)

    ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

    இது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முஃமினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஃமின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும்.

    …நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாரும். (அல்குர்அன் 15:85)
இந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் எராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள்.

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்”. (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்த்தார்கள்.
நபியே! இந்த அறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்துவிட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்கள்) நன்மையை (ச் செய்யும்படி) ஏவி வருவீராக! (அல்குர்ஆன் 7:199)

    ….. (நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும்… (அல்குர்அன்: 41:34)

    மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

    அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி “முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக அழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள்.  அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

    பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் “நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறி மன்னித்து விட்டார்கள்.

    தெªஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த துஃபைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “தெªஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என வேண்டிக்கொண்டார்கள்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், “அந்த தெªஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்” என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், “யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள்.

    எனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், “உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!” என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)

Comments on this entry are closed.

Previous post:

Next post: