மனித நேய விரோதிகள்

in பொதுவானவை

இன்று முஸ்லிம்கள் இன்று இக்கட்டான ஓர் அபாய நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு கடுந்துன்பங்களை கருணையே நிறைந்த அல்லாஹ் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது திணிக்கவில்லை என்பதே உண்மை முஸ்லிமின் உறுதியான நம்பிக்கையாக இருக்க முடியும். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக நடப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் முஸ்லிம்களின் விவேகமற்ற ஒரு சிலர் முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற தத்துவத்தை தவறாக விளங்கிக்கொண்டு நெருப்பை நெருப்பால் அணைக்க முற்பட்ட காரணத்தாலேயே இன்று முஸ்லிம்கள் இப்படியொரு பரிதாப நிலையை அடைய நேரிட்டுள்ளது. ஒரு சில விவேக மற்ற வேதத்தையும், ஞானத்தையும் முறையாக அடையப்பெறாத அவசரக்காரர்களின் குறுகிய புத்தியால், முஸ்லிம்கள் தாங்கொணா துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

    நிறைவான வேதமோ, ஞானமோ கொடுக்கப்பட்டாதவர்கள் தங்கள் அற்ப அறிவைக் கொண்டு, தங்களை சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணி செயல்படலாம். ஆனால் நிறைவு பெற்ற வேதத்தையும், குறைவில்லாத ஞானத்தையும் கொடுக்கப்பெற்ற  முஸ்லிம்களும்  தங்களின் அதே சீரழிக்கும் சிந்தனைகளை வேத ஞானமாக எண்ணிச் செயல்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

    மனித நேயத்தை பிரதான லட்சியமாகவும் அடிப்படையாகவும் கொண்ட முஸ்லிம்கள் மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கவேண்டும். தனது செயல்களுக்குரிய கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும், அல்லாஹ்வுக்கு கட்டளைகளுக்கு மாறு செய்திருந்தால் கொடும் நரகில் வீழவேண்டும் என்பவற்றை எல்லாம் உறுதியாக நம்புகிறவர்கள், இப்படி தங்களின் அற்ப அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணிக்க முடியாது. அவர்கள் முஸ்லிம்கள் என்ற நிலையில் இப்படிப்பட்ட மனித நேய விரோத போக்குகளை கடைபிடிக்க முடியாது.

    ஓர் உயிரைப் படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. எனவே அந்த ஓர் உயிரை தக்க காரணமின்றி போக்க மனிதனுக்கு உரிமையே இல்லை. அதாவது அதிகாரம் பெற்ற அரசுகளே தகுந்த சாட்சிகள் இன்றி குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவனின் உயிரைப் போக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கவில்லை என்னும்போது, அதிகாரத்தில் இல்லாதவர்களின் முறையற்ற சிந்தனையால் குற்றவாளிகளாக கருதப்படுகிறவர்களின் உயிரைப் போக்க இஸ்லாம் எப்படி அனுமதி அளிக்கும்?

    அதிலும் குறிப்பாக இவர்கள் எதை எல்லாம் குற்றங்கள் என்று கருதுகிறார்களோ அவற்றிற்கு அணுவளவும் சம்பந்தமில்லாத அப்பாவிகளின் உயிர்களை எப்படி போக்க முடியும்? அதிலும் வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களின் உயிர்களை எப்படிப் போக்க முடியும்? பொதுமக்கள் நடமாடும் இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் எப்படி குண்டுகள் வைத்து மனித உயிர்களை போக்க முற்படமுடியும்?

    நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக விளங்கியவர்கள், குர்ஆன், ஹதீஸை முறைப்படி நேராக, கோணலில்லாமல் விளங்கியவர்கள் நிச்சயம் இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்யவே முடியாது. அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றவே இந்த இழி செயல்களைச் செய்கிறோம் என்று சொல்வதற்கும் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும்.

    அடுத்து இப்படிப்பட கொடூர உள்ளம் படைத்தவர்களை மனித நேய விரோதிகளை எந்த மதத்தோடும் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தோடும் சம்பந்தப்படுத்தி செய்தி மீடியாக்கள் செய்திகள் வெளியிடுவது பெரும் தவறாகும். அவர்களும் தங்கள் அறியாமையை ஏன் மெளட்டீகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே எண்ண முடியும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் போக்கும் அற்பத்தனமான காரியங்களில் ஈடுபடும் அற்பர்கள், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதியே. மக்களின் துண்பங்கண்டு மகிழ்ச்சியுறும் இழி பிறவிகளே.


    எனவே இப்படிப்படவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்தி மீடியாக்கள் செய்தி வெளியிடுவது தர்மத்திற்கு உட்பட்டதா என்பதை மீடியாக்களை ஆள்பவர்கள் சிந்திக்க வேண்டும். அதே போல் இந்த அற்பர்களின் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு துணை போகிறவர்கள், பண உதவி செய்கிறவர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இந்த தங்களின் ஒத்துழைப்புக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    எவ்வித காரணமுமின்றி அப்பாவி மக்களின் உயிர்களை குண்டு வெடிப்புகள் மூலம் போக்கும் விஷ ஜந்து குணம் படைத்தவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட இழி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி நாம் எச்சரிக்காமல் இருக்க முடியாது. இவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கும் முயற்சியாகவோ, பொதுவாக மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும் முயற்சியாகவோ இல்லை என்பதே உண்மையாகும்.

    பொதுவாக அரசியல் வாதிகளைப்போல் மக்கள் நலனுக்காக என்று சொல்லி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளே இவையாகும். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பலிகொடுத்து அற்ப இவ்வுலக ஆதாயம் அடைய செயல்படுகிறார்களே அல்லாமல், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கோ, இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கோ செயல்படவில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும் உணர்வார்களா? காலம் பதில் சொல்லும்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: