மனிதர்கள் செய்து கொண்ட தீவினையின் காரணமாக…..

Post image for மனிதர்கள் செய்து கொண்ட தீவினையின் காரணமாக…..

in அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ் உலகைப் படைத்தான்; பின் பல்வேறு ஜீவராசிகளைப் படைத்து ஒவ்வொன்றின் தேவைகளையும் பாதுகாப்பையும் நிறைவு செய்வதற்காக பல்வேறு இயற்கை அமைப்புகளை ஏற்பபடுத்தியுள்ளான். மனிதன் மற்றும் விலங்கினங்கள், பறவைகள், தாவர வர்க்கங்கள் அனைத்தும் நலமுடன் வாழ்வதற்காக சூரிய வெப்பம், மழைநீர், கடல், ஆறு, மலைகள் போன்றவைகளை குறிப்பிட்ட வரையறுத்த அளவில் அமைத்துள்ளான்.

 ஆனால் ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ அல்லாஹ் அமைத்த இயற்கை அமைப்பை மாற்றுவதற்காக பெரிதும் பாடுபட்டு இறுதியில் அதன் தீமைகளை அவனே சுகிக்கின்றான்.

 அல்லாஹ் அமைத்த இயற்கை கூரை.

 அல்லாஹ் கூறுகிறான்,

இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம். எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளை புறக்கணித்து விடுகிறார்கள். –அல்குர்ஆன்.21:32.

சூரியனிடமிருந்து வரக்கூடிய அபாயகரமான புற ஊதா கதிர்கள் (Ultra-violet Rays) பூமியில் நுழைய விடாமல் அல்லாஹ் ஓசோன் படலம் மூலம் தடுத்து விடுகின்றான். பூமியிலிருந்து 10-45 KM உயரம்  வரை உள்ள ஸ்ரேட்போஸ்பியர் பகுதியில் ஓசோன் வாயு மண்டலம் அடர்த்தியாக பூமியைச் சூழ்ந்து கூரையாக மூடியுள்ளது. இது அல்லாஹ் அனைத்து ஜீவராசிகளுக்கும் அளித்த இயற்கை பாதுகாப்பு.

மனிதன் தன் சுயநலத்திற்காக,சொகுசு வாழ்க்கைக்காக இயற்கை அமைப்பை சிதைக்க முற்படும்போது வரக்கூடிய தீமைகளை அவனே அனுபவிக்கின்றான்.அல்லாஹ் கூறுகிறான்,

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீய செயல்களின் காரணத்தால் கடலிலும், தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன.(அத்தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.   அல்குர்ஆன்: 30:41.

ஓசோன் படலம் பாதிப்படைவது பற்றிய ஆய்வு 1970 ல் தொடங்கியது.1988 ம் ஆண்டில்  2600 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக்கு வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் ஓசோன் மெலிவடைந்து ஓட்டையானது கண்டறியப்பட்டது. இது பூமியின் வடக்குப் பகுதியிலேதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவகையான இரசாயனங்கள், குளிர்பதன கருவிகளில் உள்ள குளோரோ புளுரோ கார்பன் (CFC) போன்றவை ஓசோன் கூரையை சிதைத்து விடுகின்றன.

 ஓட்டையாகிப்போன ஓசோன் கூரையிலிருந்து இறங்கும் அதிக வெப்பமானது புவி வெப்பத்தை மேலும் அதிகரிக்கிறது என்ற உண்மையை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தென் துருவ அண்டார்டிகாவில் பாதிக்கப்பட்ட ஓசோன் ஓட்டையின் மூலம் அதிகளவு வெப்பம் பூமியில் இறங்கி தென் துருவ பருவக்காற்றின் திசைகளை மாற்றிவிடுகின்றன.

இதன் காரணமாக, திசை மாறிய காற்றுகள் மேகங்களை தென் துருவப் பகுதியில் குவித்து விடுகின்றன. பூமியில் பட்டு எதிரொளிக்கும் சூரியக்கதிர்கள் மீண்டும் விண்வெளிக்கு செல்ல முடியாமல் குவிக்கப்பட்ட மேகங்களில் பட்டு மீண்டும் பூமிக்கே திரும்பி விடுவதால் வெப்பம் மேலும் அதிகரிக்கிறது. இதல்லாமல், தென்துருவத்தில் உள்ள குளிர்காற்று வெப்பமடைந்து வெளியேறுவதால் தென் ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டில் காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகிறது.

இதை சரி செய்ய பூமத்திய ரேகைப்பகுதியிலிருந்து வெப்பமான காற்று தென் ஆப்பிரிக்காவில் நுழைவதால் இங்கு புவி வெப்பம் அதிகரிக்கிறது.இதன் காரணமாக கென்யாவில் உள்ள கிளிமாஞ்சரோ மலையின் பனி சிகரம் விரைவில் உருகி விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
The Nature Journal Geoscience.Oct.13,2013.

உலகச் சூடேற்றம்

 இன்று உலக நாடுகள் அனைத்திலும் தீவிரமாக பேசப்பட்டு வரும் செய்தி புவி வெப்பமடைதல். இதற்குக் காரணம் பசுமை குடில் வாயுக்கள் நம் வான மண்டலத்தில் கூரையாக கவிழ்ந்து மூடியுள்ளதுதான். சூரியனிலிருந்து வரும் வெப்பம் பூமியில் பட்டு பிரதிபலித்து  70% மீண்டும் வான் வெளிக்கே திரும்பி விடும். குறிப்பாக துருவப்பகுதியில் பனிப்பிரதேசத்தில் விழும் சூரிய ஒளி 80% மீண்டும் விண்வெளிக்கே திருப்பப்படுகிறது. ஆனால் கடலில் மீது விழும் ஒளியில் 7%  பிரதிபலிக்கப்படுகிறது. பனிப்படலங்களின் பரப்பு குறைவதாலும் கடலின் பரப்பு விரிவடைவதாலும் இப்படி திருப்பி அனுப்பப்படும் வெப்பம் குறைந்து புவிவெப்பம் உயர காரணமாகிறது.

துருவப் பகுதிகளின் நிரந்தர பனிப்பாளங்களில் பலகோடி டன் அளவுக்குக் கரிமவாயுக்கள் புதைந்துள்ளன. கரியமிலவாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு, குளோரோ ப்ளோரா கார்பன் முதலான கரிம வாயுக்கள், பசுமைக் குடில் வாயுக்கள் (Green House Gases) என்றழைக்கப்படுகின்றன. பனிப்பாளங்கள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டு பூமியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கிவிடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக்கிரகம் (VENUS) எப்படி இருக்கிறதோ, அப்படி எங்கும் வெப்பமும் புகைமண்டலும் நீராவியுமாகவே இருக்கும். மனித இனம் உயிர்வாழ்வதைப் பற்றி கற்பனை செய்யக்கூட முடியாது.

இந்த மிகை வெப்பத்தின் காரணமாகவே கடலிலும், தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன. கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதால் பெரும் புயல் உருவாகி (El-Nino) கடும் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமழை,.வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஒரு பக்கமும் புவியின் மறு பக்கத்தில் கடும் வறட்சியையும், பஞ்சத்தையும் இது உருவாக்கிறது. புவி வெப்பத்தின் காரணமாக துருவங்கள் உருகுகின்றன, பருவங்கள் மாறுகின்றன. வட துருவ, தென் துருவ பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்கிறது. பருவ நிலை குலைகிறது.

  ‘பருவ நிலை மாற்றங்களால் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் எல்லாம் மூழ்கும். சுனாமியின்போது பெரிய அபாயங்களைத் தடுத்த அலையாத்திக் காடுகள் அதிகம் இருக்கும் பிச்சாவரம் பகுதியும் அதில் ஒன்று. அந்தக் காடுகளும் அவற்றைச் சார்ந்து இருக்கும் இருளர் இன மக்களும் கடல் மட்ட உயர்வினால் அதிகம் பாதிப்படைவார்கள்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் மாலத்தீவுகள், பங்களாதேஷ் கடலோர பகுதிகள், பசுபிக் தீவு நாடுகள், மற்றும் அமெரிக்கா கடலோர 1700 நகரங்களில் கடல்நீர் உட்புகுந்துவிடும்.உலகின் நிலப்பகுதி குறைக்கப்பட்டு நீர்ப்பகுதி இன்னும் அதிகரிக்கும்.இதை அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.

“பூமியின் ஓரங்களை  நாம் படிப்படியாக குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் அறியவில்லையா?” அல்குர்ஆன்:  13:41.

 தொழிற்புரட்சி தொடங்கிய காலமான 1850 ல் இருந்துதான் கரியும் எண்ணெயும் எரிக்கப்பட்டு அவை வளிமண்டலத்தில் கரிம வாயுக்களைப் பரப்பத் தொடங்கி விட்டன. என்று நம்பப்பட்டாலும், உலகம் மேலும் மேலும் தொழில்மயமாகி ஆலைகளும் வாகனங்களும் பெருகுவதன் விளைவாக, அவை வெளியேற்றும் கரிம வாயுக்களால் உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது என்று அனைவரும் குறிப்பிட்டாலும், 1400 ஆண்டுகளுக்கு முன்பே கடல் மட்டம் உயர்ந்து  பூமியின் ஓரம் குறைக்கப்பட்டு வருவதாக அல்குர்ஆன்  கூறுவது கவனிக்கத்தக்கது..

 குர்ஆன் கூறுவதுபோல் புவி வெப்ப உயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் ஆரம்பிக்கபட்டு விட்டது. விவசாயத்தை விரிவுபடுத்த காடுகளை தீமூட்டி அழிக்க ஆரம்பித்தான். இயற்கையான நதியின் ஓட்டத்தை தடைசெய்து பாசனத்திற்கு திருப்பி இயற்கை சூழலை மாற்ற ஆரம்பித்தான். நெதர்லாந்து பல்கலைகழக ஆய்வாளர் (Nederland Utretcht university) சிலியா சபார்ட், கிரீன்லாந்தில் பனிக்கட்டியை துளைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் படிந்த பனிக்கட்டி மாதிரிகளை ஆய்வு செய்தார்.

வெப்ப உயர்வுக்கு காரணமான மீத்தேன் வாயு கி.மு.100 க்கு முன்பே அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதன் காரணம் அன்று ஆண்ட பெரும் ரோமானிய  சாம்ராஜ்யமும், சீனாவை ஆண்ட ஹன் சாம்ராஜ்யமும் காடுகளை தீயிட்டு அழித்து வேளாண்மையும் மற்றும் நகரை விரிவுபடுத்தினர். மேலும் தங்கள் ஆயுத சாலைகளுக்கு மரங்களை வெட்டி எரித்து அதன் வெப்பத்தில் வாள்களை தயார் செய்தனர். ஆக புவி வெப்ப உயர்வும் அதன் காரணமாக கடல் மட்டம் அதிகரித்து பூமியின் ஓரம் அன்றே குறைய ஆரம்பித்துவிட்டது.

 “ பூமியின் ஓரங்களை நாம் படிப்படியாக குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் அறியவில்லையா”   அல்குர்ஆன்: 13:41. என்று கூறும் குர்ஆனின் கூற்று உண்மையாகி விட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

The researchers found that methane production was high around 100 B.C., during the heyday of the Roman civilization, and waned around A.D. 200 as the empire faltered. The methane was released when Romans burned down forest to clear land for crops and expanding settlements, Sapart said.
This time period also coincided with the peak of China’s Han dynasty, which burned large amounts of wood to forge swords. Once the dynasty collapsed around A.D. 200, atmospheric methane levels dropped.
-The Nature Journal 3, october,2013. http://www.livescience.com/23678-methane-emissions-roman-times.html

உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்டை ஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்துதான் 75 சதவீத கார்பன்டைஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.

இது தவிர, பின் விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இலாப வெறியோடும் போர் வெறியோடும் ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பலவித பொருட்களாலும் அவற்றின் கழிவுகளாலும் சுற்றுச் சூழலும் புவியின் உயிரியல் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, அணு உலைக் கழிவுகளையும் சில இரசாயனக் கழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையைப் போக்கி முற்றாக அழித்து விட முடியாது. இக்கழிவுகளின் நச்சுத்தன்மையைப் போக்க கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருப்பதால், பல ஏகாதிபத்திய நிறுவனங்கள் அவற்றை இரகசியமாகக் கடலில் கொட்டி வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், புவி வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களைப் பெருமளவில் வெளியேற்றி, பேரழிவை விளைவித்துக் கொண்டிருப்பவை ஏகாதிபத்திய நாடுகள்தான். இந்நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால், 2050க்குள் கரியமில வாயுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் உலகவங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரான நிக்கோலஸ் ஸ்டெர்ன்.

கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விட கடல் மட்டத்தின் உயரம சென்ற 20 ம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகியிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

(1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

பூமியின் பருவ நிலைக் கோளாறுகள், முரண்பாடுகள் பேரளவில் தோன்றி உலக மக்கள்  வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகிறார்கள் . 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது. 2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூலமாக்கியது. ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப்பட வேண்டும். சமீபத்தில் ஓடிசாவில் அடித்த பைலின் புயலின் கோரமும்,கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹயான் புயலும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது அல்குர்ஆன் கூறும் செய்தி.

 “மனிதர்களின் கைகள் செய்து கொண்ட தீமையின் காரணமாக, மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீய செயல்களின் காரணத்தால் கடலிலும்,தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன.(அத்தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.   அல்குர்ஆன்: 30:41.

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

Comments on this entry are closed.

Previous post:

Next post: