மண் கேட்ட படலம்

in மூடநம்பிக்கை

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயீலும் தோல்வியோடு திரும்பி சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால்தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

ஒரு சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. பல மேடைகளில் கூறப்படுகின்றது. மலக்குல் மவ்திடம் உயிர் வாங்கும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் கூறியாக வேண்டும், என்பதற்காக சிலரது கற்பனையில் உதித்த பொய்தான் இந்தக் கதை என்பதை சற்று சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக்கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாக பார்ப்போம்.

வானங்கள், பூமி,அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித, ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும் விருப்பத்துக்கும் எதிராக செயல்படுவதில்லை என்பதை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறோம். திருமறைக் குர் ஆன் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

வானமும் பூமியும் அவனது உத்திரவுப்பிரகாரம் நிலைபெற்றிருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும் [அல்குர் ஆன் 30:25]

என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய பூமி மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்தபின் அவற்றை நோக்கி அல்லாஹ் ஒரு உடன்படிக்கை எடுத்ததை பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

பூமியையும், வானங்களையும் நோக்கி, ‘நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!’ என்று (அல்லாஹ்) கூறுகிறான், “நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்” என்று அவ்விரண்டும், (வானமும், பூமியும்) கூறின.

அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர் ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர் ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!

எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேரொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராபீல் ஆகிய மூவரும்- மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக் குர் ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அவன் எதை ஆணையிடுகிறானோ அதைச் செய்து முடிப்பார்கள். (அல்குர் ஆன்66:6)

(எதையேனும்) பேசுவதில் அவனை அவர்கள் (மலக்குகள்) முந்த மாட்டார்கள். அவனது ஆணைப்படியே செயலாற்றுவார்கள். (அல்குர் ஆன் 21:27)

மேற்கூறிய இரண்டு வசனங்களும், வானவர்களைப் பற்றி அல்லாஹ் தருகின்ற நற்சான்று. அவனது உத்திரவை அப்படியே செயல்படுத்திக் காட்டுகின்ற வானவர்கள் – அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர் ஆன் தெளிவாக்குகின்றதே! அந்தக் குர் ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது, கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச் சிறந்து விளங்குகின்ற, மனித இனத்தைப் படைப்பதற்குத்தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.

“பூமியில் நான் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்” (அல்குர்ஆன் 2:30) என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறுகிறான். மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருக்கும் போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்? என்பதையும் தாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியை செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும் அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறிவிட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

அற்பமான காரியத்தை செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.

மிக உயர்ந்த-சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்துவரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக்கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது என்பது ளெிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால், இறைவனைப் பற்றியும் அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்க முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி தெளிவாக்குகின்றது.

“பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்” (நபிமொழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான் அறிவிப்பவர்: அபூமூஸல் அஷரீ(ரழி)

மண் எடுத்து வரும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை)அவர்களை உருவாக்கினான், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது.

P.ஜெய்னுல் ஆபிதீன்

{ 2 comments }

Ashraf March 16, 2013 at 7:50 pm

masha allah nice information

M.M.A.NATHARSHAH DUBAI March 28, 2013 at 7:56 pm

GOOD INFORMATION THANK YOU

Comments on this entry are closed.

Previous post:

Next post: