நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)

மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்

அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். (40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.

 நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.

மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.

அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல்  மண்ணறையில் அவனை மகிழ்விக்கும்.

 

 

{ 2 comments }

fahim July 17, 2011 at 8:24 pm

masha allah
ellah puhalum allah oruttenukka

FATHIMA MALIK July 16, 2012 at 2:41 pm

INIYAVADHU PAVANGAL SEIYAMAL IRUKANUM. NAAM ELARUM MUKHMINAHA MOUTH AGANUM.AMMEN.”LAEEE LAHA ILLALLAH MUHAMADHU RASULULAAH”

Comments on this entry are closed.

Previous post:

Next post: