என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக” உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)
சோதனை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்“எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)
தியாக பெருமக்கள்
இத்தைகைய இக்கட்டான சூல் நிலையில்தான் ஒரு கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றால் தங்கள் உயிரே பறிக்கப்படலாம், தங்கள் குடும்பம் சின்னா பின்னப்படுத்தப் படலாம் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிந்திருந்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக இரு கால்களும் இரண்டு ஒட்ட்கங்களில் பிணைக்கப்பட்டு, இருவேறு திசைகளில் அந்த ஒட்டகங்கள் விரட்டப்பட்டு இருகூறாக கிழிக்கப்பட்டனர். கடும் மணலில் கிடத்தப்பட்டு, பெரும் பாறைகளை அவர்களின் நெஞ்சங்கள் மீது வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டவர்களூம் உண்டு. பெண் என்று பாராமல், மர்ம ஸ்தானத்தில் அம்பெய்து படுகொலை செய்யப்பட்ட பெண்களும் இருந்தனர். தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.
சொந்த நாட்டிலிருந்து வெறுங்கையுடன் விரட்டி அடிக்கப்பட்டனர். அகதிகளாகச் சென்றவர்கள் மதினாவில் நிம்மதியாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தபோது, தீனுல் இஸ்லாம் இந்த உலக மக்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பயண வசதியற்ற காலத்திலேயே கடும் பயணம் மேற்கொண்டனர். மொழி தெரியாத நாடுகளுக்குச் சென்றனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டிய வழியில் நடந்து காட்டி உலகில் இஸ்லாமிய பேரொளியை பாய்ச்சினர். அவர்களின் தியாகங்கள் சொல்லி முடியாது.
ஒவ்வொருவருடைய வரலாறும் ஒரு வீர காவியம். தியாகத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். சமீபகாலமாக இந்தத் தியாகத் தோழர்களின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. உஹது மலையளவு செலவு செய்தாலும், எவராலும் ஸஹாபக்களின் மதிப்பில் பாதியளவைக்கூட அடைய முடியாது என்று நபிகள்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க அவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றியவர்களுக்கு ஆலிம்களே அதிக முக்கியத்துவம் தருவது வியப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் உள்ளது.
இந்த உம்மத்தில் (சமுதாயத்தில்) மிகச் சிறந்தவர்களாகிய ஸஹாபாக்களின் வரலாறுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை விட, இறை நேசர்கள் என்று இவர்களாகவே முத்திரைக் குத்திகொண்ட சிலரின் வரலாறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் சில அறிஞர்கள் காட்டும் அக்கறை விந்தையாகவே உள்ளது.
ஒரு ஆலிம் தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு”முஹ்யித்தீனே கைப்பிடியுங்கள்”என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம். “உலகத்து மாந்தரின் ஈமானை இன்னொரு தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை இன்னொரு தட்டிலும் வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்” என்ற நபி மொழி கூட இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்?
இறந்து போன யாரையும் அழைத்து உதவி தேடலாகாது என்பது ஒருபுறமிருக்க, அப்படி அழைத்துக் கையைக் பிடிக்கச் சொல்பவர்கள் மனதில் இப்றாஹீம் (அலை) போன்ற உயர்ந்த நபிமார்கள் நினைவுக்கு வராமல் போனது ஏன்? மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வேண்டியவர்கள் மக்களிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக்கொள்கின்றனர். மக்கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ அதற்கொப்ப தங்கள் கருத்துக்களையும் அமைத்துக் கொள்கின்றனர். அந்தோ! பரிதாபம்!
அவ்லியாக்கள் என்று சிலரை அவர்கள் பெயரால் முனாஜாத்துகள்,கிஸ்ஸாக்கள், மவ்லிதுகள் எழுதி மக்களிடம் பரப்பி வருவதின் நோக்கம் என்ன? அவர்களின் மீது கொண்ட பற்றோ, பாசமோ அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியானால் உண்மையான காரணம் என்ன?
தாங்கள் செய்கின்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு இவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையோ, ஸஹாபாக்களின் வாழ்க்கையையோ ஆதாரங்காட்ட முடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒன்றை இட்டுக்கட்டிக் கூற இயலாத அளவுக்கு அது அன்றைய நல்லவர்களால் பாதுகாக்கப்பட்டுவிட்டது. இல்லாததைச் சொல்லி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த வரலாறுகள் அல்லாஹ்வின் அருளால் இன்று வரை பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன. கியாமத் நாள் வரைக்கும் அது பாதுகாக்கப்பட்டே இருக்கும்.
இதனால் தான், மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கிக்கொண்டே ஒரு சிலர் மீது தனி கவர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மீது மக்களை பக்தி கொள்ளச் செய்து, அவர்கள் பெயரால் இந்த வியாபாரத்தை நன்றாக நடத்திக்கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய ஷரீஅத்துக்கு புறம்பாக அந்த மகான்கள் நடந்ததாக எழுதப்பட்டுள்ளதே! பேசப்படுகின்றதே! அவர்கள் அவ்லியாக்களாக இருப்பின் அப்படி நடந்திருக்க மாட்டார்களே! என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்பதில்லை. மக்களூக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகளை குர்ஆனை, ஹதீஸை, சஹாபாக்களின் வரலாறுகளை தெளிவு படுத்தாத வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும். அல்லாஹ் இந்த நிலையிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்.
இப்னுஎஹ்யா
{ 2 comments }
arumaiyaana pathivu
Jazakallahu khairan! good article suitable for this time of fitna! most of the Sahabas are not born muslims! but at the same time they change their whole life in the light of Quran and Sunnah! It is a challenge for every muslim to follow Quran and Sunnah very strictly according to the tradition of Prophet (sal). Sahabas faced the challenge and win in that challenge with the help of Almighty ALLAH! no body is being equal to them until the day of Qiyamah! They loss everything in their life to get the satisfaction from ALLAH! a true muslim cannot imagine a person so called awliya will become their “mawla” ALLAH IS THE KNOWER OF ALL THINGS !
Comments on this entry are closed.