புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷுரா)

in அனாச்சாரங்கள்

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா  என்று  கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப்  பின்னனியை நாம் காண்போம். 

நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா(அலை) அவர்களையும், ஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர் அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று  நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)-புகாரி,முஸ்லிம்)

இந்த நபி மூலம்  ஆஷுராதினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை  என்று தெரிந்தாலும் ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை அல்ல. காரணம்  நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்கு வந்தபோது  ரமழான் நோன்பு கடமையாக்கப் படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக்கி இருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

நபி(ஸல்)  அவர்கள் மதினாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி  கட்டளை யிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர்கள் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)- புகாரி,முஸ்லிம்) இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர். என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளூம் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விடார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி)- முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூத்)

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளூம், பத்தாம் நாளூம், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்கவேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.

வழக்கமாக எல்லாப் பிரச்சனைகளிலும் கட்டுகதைகள் நுழைந்தது போலவே இந்த ஆஷுரா நாள் பற்றியும் நிறைய  கட்டுக்கதைகள் உலா வருகின்றன.  ஆஷுரா  நாளில்  ஒருவன்  குளித்தால்  அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்படமாட்டான் என்று கூறப்படுவதும், ஆஷுரா தினத்தில் குடும்பத்தினருக்காக தாராளமாகச் செலவு செய்தால் அந்த ஆண்டு முழுவதும் அவனுக்குச் செல்வம் பெருக்கெடுத்தோடும் என்று கூறப்படுவதும், நாபிமார்கள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்சிகளும் ஆஷுரா தினத்தில்தான் நடந்தன என்று கூறப்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய  பொய்களாகும். ஸஹீஹான ஹதீஸ்களில்  இதற்கு ஆதாரம்  இல்லை. ஒரு சில கிதாபுகளிலும், கிஸ்ஸாக்களிலும் தான் அவை காணப்படுகின்றன.. ஹதீஸ்களை வல்லுனர்கள் அவைகளை ஏற்கவில்லை.

இதே ஆஷுரா தினத்தில் நபி(ஸல்)அவர்களின் திருப்பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டது,  இஸ்லாமிய  வரலாற்றில் ஒரு  சோகமான நிகழ்சியாகும்.  கல்  நெஞ்சமுன் கரைந்து விடக்கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில் தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல; மனிதாபிமானம் உள்ள எவரும் இந் நிகழ்ச்சியைக் கேள்வியுறும் போது கண்கலங்காமல் இருக்க முடியாது. “கர்பலா”  என்ற  இடத்தில்  நபி(ஸல்) அவர்களின்  பேரர்  இமாம்  ஹுஸைன்(ரழி)  அவர்கள் கொள்ளப்பட்டார்கள் என்பதற்காக,  நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக்  கூறிய ஆஷுரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி  கிடையாது.  இந்த நாளில்  இரண்டு  போராட்டங்கள் நடந்தன. பிர்அவ்னுக்கும், மூஸா (அலை) அவர்களுக்கும் நடந்தது. அதில் மூஸா (அலை) வென்றார்கள். அதே ஆஷுரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹுஸைன்(ரழி)  அவர்கள் ஸஹீதாக்கப்பட்டார்கள்.

ஒரு உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத்  தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருதவேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள், நபிமார்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் திருப்பேரருக்கு அந்த மகத்தான் அந்தஸ்த்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ஸஹீதாக்கிவிட்டான். அந்த மாபெரும் அந்தஸ்த்தை இமாம் ஹுஸைன்(ரழி) அடைவதற்கு கர்பலா தான் காரணமாக இருந்தது.

இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள் தான், இது போன்ற சந்தர்ப்பங்களில் அழுது புலம்புவர். மறு உலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், நாம் மறு உலக வாழ்வில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கிறோம் என்று தம்மைத் தேற்றிக் கொள்வர்.

தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும்போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே! நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொருமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:156) என்று அல்லாஹ் கூறியதற்கிணங்க நடக்கும் போதுதான் இறைவனின் திருப்பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

அதற்காக, ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும், யஸீதையும் மற்றவர்களையும்  ஏசுவதும், ஹுஸைன் மவ்லூது ஓதுவதும், நமக்கு தேவையில்லாவற்றைப் பேசுவதும், ஒருமுறை ஹுஸைன்(ரழி) அவர்கள் கொள்ளப்பட்டதை  வர்ணனையுடன் பல பொய்களைத் கலந்து சொல்லி ஆண்டுதோரும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாமிய மரபு அல்ல.

கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அப்துல்லா(ரழி) புகாரி,முஸ்லிம்,திர்மிதி,இப்னுமாஜா,அஹ்மத்)

உள்ளத்தினாலும், கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவதும் இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும், நாவினாலும் சோகத்தைக்  காட்டுவது ஷைத்தானின் வேலையாகும் என்று நபி(ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரழி) அஹ்மத்)

இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிற பெரும்பாலான நிகழ்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறை தான். இவற்றைச் செய்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களச் சேராதவர்களாக நாம் ஆகி விடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவனாக.

தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் முஹர்ரம் மாத்ம் பத்து நாட்கள் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுகின்ற கொடுமையும் நடந்து விடுகின்றது. அந்த பத்து நாட்களில் கரு உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம் பட்டு சாகும் என்று அதற்குக் காரணம் வேறு கூறிக்கொள்கின்றனர். இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும்  இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத்  தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை, கை போன்ற வடிவங்களில் கொலுக்கட்டை அவித்து, பாத்திஹா ஓதி வருகின்றனர். அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்புக்கு இது ஓர் அடையாளம் என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்பவர்களைப் பற்றி என்னைச் சேர்ந்தவரில்லை என்று நபி(ஸல்) அவர்கள் மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்த இஸ்லாத்தின் இதுபோன்ற செயல்களுக்கு அறவே இடம் இல்லை.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பற்றினான் என்று எண்ணிக்கொண்டு அந்த பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது,  பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக!

 

அபூமுஹம்மத்

Comments on this entry are closed.

Previous post:

Next post: